வேலூர் புரட்சி 1806

நூல் விமர்சனம்         

அ.ஆறுமுகம்   

சிப்பாய்க்கலகம் என்றும் முதல் இந்திய சுதந்திரப்போர் என்றும் வர்ணிக்கப்பட்ட பெரும கிளர்ச்சி 1857 ம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றின் ஏடுகளில் பொறிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, நாட்டின் தென்பகுதியில் 1806ல்  நடந்த வேலூர்ப் புரட்சி அதிகம் பேசப்படவில்லை. எழுதப்படவில்லை.  எனவே, இதனைப் பொதுவெளியில் பேசு பொருளாகவும், வரலாற்றின் முன்னெடுப்பாகவும் கொண்டுவந்துள்ளது இந்நூல் என்றால் மிகையில்லை. நூலாசிரியர் பேரா. மணிக்குமார், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களுள் ஒருவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். மத்தியப்பிரதேசம் சாகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார். வேலூர்க் கிளர்ச்சி எதனால் நடைபெற்றது, எவ்வாறு நடந்தது, ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகள், அதனால் வந்த பின் விளைவுகள் என இப்புத்தகம் ஆய்வு மேற்கொள்கிறது. நூலாசிரியர், லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகம், ஸ்காட்லாந்து ஆவணக்காப்பகம் போன்றவற்றில்  இருந்தும் விவரங்களைத் திரட்டி இந்நூலை எழுதியுள்ளார்.  வி.ஐ.டி. பலகலைக் கழகத்தின் துணைவேந்தர் விஸ்வநாதன் அணிந்துரை வழங்கியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2007ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, 2021ல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

 நூலின்மூலம் நாம் அறிந்துகொள்ளும் முக்கியச் செய்தி, இப்பகுதியில், இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடின்றி மக்கள் அந்நிய நாட்டினர்க்கெதிராகக் கிளர்ந்து எழுந்துள்ளனர். மேலும், இப்புரட்சியானது, மற்ற இந்தியப் புரட்சிகளுக்கெல்லாம், குறிப்பாக 1857 முதல் இந்தியப் புரட்சிக்கு முன்னோடியாகும். 1806 ஜூலை 10ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு வேலூர்க் கோட்டையினுள்ளே இருந்த 500 வீரர்களும் அதிரடியாக வெள்ளையர் குடியிருப்புகளில் புகுந்து, வெள்ளை அதிகாரிகளையும், வீரர்களையும் சுட்டு வீழ்த்தினர். சற்று நேரத்திலேயே, ஆயுதங்களையும், வெடிமருந்துக் கிடங்குகளையும், தம்வசம் எடுத்துக் கொண்டனர். மைசூர் திப்பு சுல்தானின் கொடியைக் கோட்டையில் ஏற்றினர். மறுநாள் காலைவரை கோட்டை, இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் படைகள்  வந்து பின்னர் கொடூர முறையில் நம் வீரர்களைப் பலியாக்கினார். ஏறத்தாழ 700 இந்திய வீரர்கள் தூக்கிலிடப் பட்டனர். தப்பிச் சென்ற பலர்  நம் நாட்டின் பல பகுதிகளிலும் தூக்கிலிடப் பட்டுக் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்கான காரணங்கள் ஆங்கிலேயர்களின் விசாரணைக் குறிப்புகளில் இருந்தே பெரும்பாலும் திரட்டப்பட்டது. ஏனெனில் பல ஆய்வாளர்களும் வேலூர்க் கிளர்ச்சிக்கான காரணங்களை ஆராய முன்வரவில்லை. வரலாற்றுரீதியாக பிற பகுதிகளுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, தென்னிந்தியாவிற்கு கொடுக்கப்படவில்லை. தீப்பொறி போன்று சில விஷயங்கள் நடந்துள்ளன. மதரீதியாக அவை அமைகின்றன. இந்துச் சிப்பாய்கள் நாமம், காதணியைத் தவிர்க்கவேண்டும எனவும், இஸ்லாமியர்கள் பணியின்போது தாடியை மழித்திருக்கவும், மீசையை ஒழுங்குபடுத்தவும், புதிய தோல் தொப்பி அணிவது கட்டாயம் எனவும் ராணுவ ஆணை பிறப்பிக்கப் பட்டதாகவும் செய்திகள் உள்ளன. இவை மேலோட்டமான காரணங்களாகும்.  ஆழமான பல்வேறு காரணங்களும் உள்ளன. சென்னை மாகாண அரசின் நிலவரி சுரண்டல் கொள்கையானது  கூலி மற்றும் குத்தகை விவசாயிகளை மட்டுமின்றி, பாரம்பரிய மிராசுதாரர்களையும், கம்பெனி அரசால் உருவாக்கப்பட்ட மிட்டாதாரர்களையும் ஏழ்மை நிலைக்குத் தள்ளியது என்பது ஒரு மூல காரணமாகும். எனவே பெரும்பாலும் விவசாயப் பின்னணியிலிருந்து வந்த இந்தியப்படை வீரர்கள், மற்ற ராணுவ அதிகாரிகளுடனும், ஏற்கெனவே அரியணை இறக்கப்பட்ட குறுநில மன்னர்களுடனும், புதுச்சேரியில் ஆட்சி செய்த பிரஞ்சுக்காரர்கள் ஆகியோருடனும், தொடர்பு கொண்டு, சாதி, மதம், பிராந்தியம், எனப் பல வேறுபாடுகளையும் தாண்டி, அந்நிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடத்திய  ஆயுதப் போராட்டமே வேலூர்ப் புரட்சி எனப் பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். இந்தப் பார்வையோடு இந்நூலும் எழுதப்பட்டுள்ளது.

 வியாபாரத்திற்கு வந்த வெள்ளையர்கள் எவ்வாறு கயமையினாலும், சூழ்ச்சியினாலும் படிப்படியாக ஒவ்வொரு குறுநில மன்னரிடமிருந்தும் பல பகுதிகளையும் கைப்பற்றினர் என்ற வரலாற்று உண்மை, பல சம்பவங்களின் மூலம் விளக்கப்பட்டுள்ளது. தென் தமிழகப் பாளையக் காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் திருநெல்வேலி, மதுரை பகுதிகளில் கிளர்ந்து எழுந்தனர். அவ்வகையில்தான், கட்டபொம்மன், மற்றும் மருதுபாண்டியர் சகோதரர்களும் பேசப்படுகின்றனர். வேலூர்க் கிளர்ச்சி எவ்வாறு சாதிமதங்களுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்கிறது என்பதற்கு ஆசிரியர் இணைத்துள்ள சாதிவாரிப் பட்டியலே சான்று. மொத்தத்தில் வேலூர்ப் புரட்சி இந்தியாவின் இதரபல புரட்சிகளுக்கும், மத ஒற்றுமைக்கும் முன்னோடி என்பது இப்புத்தகத்தின் மூலம் நன்கு விளங்குகின்றது.

                                         

Comment here...