DYFI நடத்தும் வேலையின்மைக்கு எதிரான சைக்கிள் பேரணி

ஸ்ரீனிவாசன்

முதலாளித்துவ சமூகத்தில், தொழிலாளர்கள் தங்கள் உழைப்புச் சக்தியை விற்று வருமானம் ஈட்டுகிறார்கள். அதற்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை என்றால் என்ன? பணிப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், வார விடுப்பு, சமூக பாதுகாப்பு திட்டங்களான PF, ESI, Gratuity, pension, பெண்களுக்கான பிரசவவிடுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வேலை.  அப்படிப்பட்ட வேலையில் இருக்கும் தொழிலாளா்கள் மொத்த தொழிலாளர்களில் 5% போ்தான் இருப்பார்கள். எந்தவித பணிபாதுகாப்பும் இல்லாமல், தினக் கூலிகளாக, கேசுவல் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளியாக பணிபுரிபவா்களும், பகுதி நேரத் தொழிலாளர்களும் வேலையற்றவா்களின் ஒரு பகுதியே. பெரும்பாலும் இவா்கள் அணிதிரட்டப்பாடதவா்கள். இது தவிர ஒவ்வோர் ஆண்டும் பட்டம் பெற்று வேலை தேடும் பணியில் இணைபவா்கள் 66 லட்சம் பேர். இவ்வாறு கோடிக்கணக்கான பேர் வேலை தேடி அலைகிறார்கள்.

கிக் தொழிலாளர்கள்

படித்த இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை 13 சதவீதமாக உள்ளது. இது ஆழ்மன கோபமாக இளைஞர் மனங்களில் கனன்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் 5.3 கோடி பேர் வேலையின்றி உள்ளனர். அதில் 1.7 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்தி விட்டார்கள். ஏராளமானோர் “பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு இல்லாத வேலைகள் நோக்கித் தள்ளப்படுகிறார்கள். “தரமற்ற வேலை வாய்ப்புகள்” (Low Quality Jobs) வேலையின்மையைத் திரைபோட்டு மறைக்கின்றன.  வீதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் “கிக்” தொழிலாளர்களாக சுவிக்கி, சொமாட்டோ மற்றும் அமேசான் வியாபார தூதர்களாக அலைவதைப்      பார்க்கிறோம். அவர்களில் பலர் பட்டதாரிகள்.

12 லட்சம் காலியிடங்கள்

35000 ரயில்வே காலியிடங்களுக்கு 1 கோடியே 20 லட்சம் பேர் விண்ணப்பித்த அவலம் சமீபத்தில்தான் அரங்கேறியது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் அரசு அளித்த தகவலின்படி, ஒன்றிய அரசுத்துறைகளான வங்கிகள், ரயில்வே, உள்துறை, பாதுகாப்பு, அஞ்சல், வருவாய், இதர துறைகளில் 12 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

50 லட்சம் பேர் வேலை இழந்தனர்

கேசுவல் தொழிலாளர்களின் எண்ணிக்கை நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை விஞ்சுவதை காண முடிகிறது. சட்டங்கள் மீறப்படுகின்றன, வளைக்கப்படுகின்றன. உச்சகட்டமாக தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் என்ற பெயரால் சட்டப் பாதுகாப்புகள் எல்லாம் உடைக்கப்படுகின்றன.  சிறுதொழில், விவசாயம், சுய தொழில் ஆகியவையே அதிகமான வேலை வாய்ப்புகளை தருபவை. இந்திய நாட்டின் வேலைவாய்ப்பிலும், உற்பத்தியிலும் மிகப்பெரிய பங்களிப்பை சிறு மற்றும் குறு தொழில்கள் அளித்து வருகின்றன. பாஜக ஆட்சியில் இத்துறையினர் கடும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளார்கள். நாடு முழுவதும் 5 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். கொரோனா பேரிடர் காலமும் அதற்கு பின்பும் இன்னும் பல இன்னல்களை விளைவித்தன. இத்தொழில் முனைவோர்கள் தொழிலாளர்களாக மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பணமதிப்பு நீக்கத்தால் முதுகெலும்பு ஒடிந்து கிடந்த சிறு தொழில்கள் கோவிட் வந்த பின்னர் நிமிரவே முடிய வில்லை.

DYFI நடத்தும் சைக்கிள் பேரணி

இந்தப் பின்னணியில் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI – Democratic Youth Federation of India) தனது போராட்ட இயக்கங்களை விரிவுபடுத்துகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 ஏப்ரல் 21 முதல் 2022 மே 01 வரை சென்னை, கன்னியாகுமரி, கோவை,  புதுச்சேரி என நான்கு முனைகளிலிருந்து திருச்சி மாநகர் நோக்கி 3000 கிமீ வாலிபர் சங்க சைக்கிள் பயணம் நடைபெறவுள்ளது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கைகள்

  • அரசமைப்பு சட்டத்தில் வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக !
  • ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பிடுக !
  •  இளைஞர்களின் உழைப்பைச் சுரண்டும் தற்காலிக, ஒப்பந்த,  அவுட்சோர்சிங், திட்ட அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிடுக !
  • அனைத்து பணி நியமனங்களையும் நிரந்தர அடிப்படையில் செய்திடுக !
  • தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக ! 
  • ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி நியமனம் செய்யும் நடவடிக்கையை கைவிடுக !
  • மனித வளங்களை பயன்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குக!
  • சிறு-குறு தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக !
  • கூட்டுறவு துறையை விரிவுபடுத்திடுக !
  • தனியார்துறை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துக !
  • நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்தை  முழுமையாக அமலாக்கிடுக !
  • குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.21000 என சட்டம் இயற்றுக !
  • பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்திடுக ! 

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பயணம் நடைபெறுகிறது. இறுதியாக மே 1  அன்று திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் சைக்கிள் பயணம் நிறைவடைகிறது.

வேலையின்மைக்கு எதிரான குரலை தொழிற் சங்கங்களும் இணைந்து எழுப்ப வேண்டும் என்பது. வரலாற்று கடமை, வேலை செய்யும் திறன் இருந்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவோரும் தொழிலாளர் படையின் அங்கமே ஆவர். வீரம் செறிந்த பல போராட்டங்களை உடைப்பதற்கு வேலையில்லா இளைஞர்களை முன்னிறுத்தப்படுவதை தொழிலாளர் இயக்கம் காலம் முழுவதும் எதிர் கொண்டு வருகிறது. இத்தகைய புரிதலோடு தொழிற்சங்க இயக்கம் வேலையின்மை பிரச்சனையை போக்க கை கோர்ப்பதும் களம் காண்பதும் அவசியம்

இப்பேரணி வேலையின்மைக்கு எதிரான போர்ப்பிரகடனமாகும். இதை வெற்றி பெறச்  செய்வது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

One comment

  1. DYFI தோழர்களுக்கு புரட்ச்சிகரமான வாழ்த்துக்கள்

Comment here...