இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏன் ஏற்பட்டது?

எஸ்.இஸட்.ஜெயசிங்

65610  சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இலங்கை கடலால் சூழப்பட்டு தமிழகத்திற்கு மிக அண்மையில் உள்ள சிறிய தீவாகும் . 2 கோடிக்கும் சற்று கூடுதலாக மக்கள் தொகை கொண்ட இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி அண்மையில் ஏற்பட்டுள்ளது. 73 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசும் அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு

பால் பொருட்கள் , காய் கறிகள் , சமையல் பொருட்கள் , பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு, மின்சாரம், மருந்து பொருட்கள் ,உணவுப் பொருட்கள் என அனைத்து வகை பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளன. கிடைக்கின்ற மிகச் சொற்பமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருப்பதால் இன, மத, மொழி, பிரதேச பேதமின்றி அனைத்து மக்களும் இரவு பகல் பாராது வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை வளங்கள் நிறைந்த இலங்கையில் இன்று தேவைக்கேற்ற உற்பத்திக்கும் வழி இல்லை; இறக்குமதிக்கும் வழி இல்லை என்ற சோக நிலை உருவாகி உள்ளது.

இனவாத அரசியல்

கோவிட் 19 தொற்று காரணமாக  மட்டுமல்லாமல், அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும்  உற்பத்தியும், ஏற்றுமதியும் பெருமளவு வீழ்ச்சி அடைந்து அந்நிய செலாவணி முற்றாக குறைந்து அதனால் மக்களுக்கு தேவையான மிக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட எதனையும் இறக்குமதி செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது . பொருளாதார காரணிகளை முன் வைக்காமல் வெறும் இன அரசியலைக் கூறி ஆட்சி கட்டில் ஏறிய ராஜபக்சே குடும்பத்தினரால் நாட்டை காப்பாற்ற முடியவில்லை. ”விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினோம்; தொடர்ந்து தீவிரவாதிகளிடமிருந்து எங்களால் மட்டுமே தேசத்தை துண்டாடாமல்  பாதுகாத்திட முடியும்”  என்று பிரசாரம் செய்து 2019  தேர்தலில்  வெற்றி பெற்றனர் .  சிங்கள மக்களும் இந்த  இனவாத

பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தனர். அந்தத் தவறை தற்போது உணர்ந்து ஏனைய சிறுபான்மையினருடன் இணைந்து பசி, பட்டினியிலிருந்து மீள இன்று போராடி  வருகின்றனர்.

இலங்கையின் தேசிய வருமானமானது

1. பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி

2. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு

3. சுற்றுலா துறை

ஆகிய மூன்று துறைகளை பெருமளவு சார்ந்துள்ளது. கோவிட் 19 காலத்திலும், அதற்கு பின்பும் இத்துறைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து வெளிநாட்டுக் கடன் சுமையும் பெருகலாயிற்று. 51 பில்லியன் டாலருக்கு மேல் கடனுள்ள நிலையில் இவ்வருடம் 7 பில்லியன் டாலர் கடன் திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் கையிலிருப்பது வெறும் 2.3 பில்லியன் டாலர் மட்டுமே.

வேளாண் உற்பத்தியின் வீழ்ச்சி

2021 ல் 100% இயற்கை வேளாண்மை என்ற திட்டத்தை அறிவித்த அரசு, செயற்கை உள்ளீடுகளை முற்றாக தடை செய்தது. இயற்கை வேளாண்மை வரவேற்க வேண்டிய ஒன்று என்ற போதும் படிப்படியாக கொண்டு வருவதை விடுத்து ஒரேநாளில் நாடு முழுவதும் கொண்டு வர முயன்றதன் காரணமாக இலங்கையின் தேயிலை உற்பத்தி உட்பட அனைத்து உணவு உற்பத்திகளும் குறைந்த அளவில் உற்பத்தியாகின. உள் நாட்டு தேவை மட்டுமல்லாமல், தேயிலை ஏற்றுமதியும் குறைந்து பெரும் பொருளாதார சரிவை சந்திக்க வேண்டியதாயிற்று. ஏற்றுமதி இன்றி அந்நியச் செலாவணி குறைய, இறக்குமதிக்கும் வழி இன்றி ஆயத்த ஆடை உட்பட பல தொழில்களும் முடங்கின. மறுபுறம் 2019 முதல் கொரோனா, தற்போதைய உக்ரைன் போர் என பல காரணிகளால் சுற்றுலாத் துறையும் தடைப்பட்டு, தேசிய வருமானமும் குறைய வெளிநாட்டுக்கடனை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

பண மதிப்பு சரிவு

மேலும் அவசர கோலத்தில் மேலதிக பணம் அச்சிட்டதுடன், ஏற்றுமதியை ஊக்குவிக்க  இலங்கை நாணயத்தின் பரிவர்த்தனை பெறுமதியை குறைக்க இலங்கை ரூபாயின் மதிப்பு கடுமையாக குறைந்தது. அமெரிக்க டாலர் இந்திய ரூபாயில் 76.65 ஆக இருக்க இலங்கை ரூபாயில் அது இன்று 345.35ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஒரு ரூபாய் இலங்கை ரூபாயில்  4.50 ஆகும் . இதனால் கடும் பண வீக்கமும் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் 18.8% இருந்த பண வீக்கம் வரும் மாதங்களில் மிகவும் அதிகமாகும் என கூறப்படுகிறது. மோசமான நிதிக்கொள்கையும் பேரழிவுக்கு ஒரு காரணமாகும். நீண்ட கால திட்டமிடலை கைவிட்டு குறுகிய   கால திட்டமிடலை மேற்கொண்டனர் .

இன மத வாதத்தை வைத்து அரசியல் செய்தால் பேரழிவும் பெரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும் என்பதற்கு இலங்கை எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

Comment here...