ஶ்ரீகாந்த் மிஸ்ரா
எல்ஐசியின் பங்கு விற்பனை 2022 மே 4ஆம் தேதி துவங்குகிறது. இதனை இந்தியாவின் ஒட்டு மொத்த தொழிலாளர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏஐஐஇஏ உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று மே 4 அன்று நாடு முழுமையும் உள்ள பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி ஊழியர்கள் இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பட்ஜெட் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காக ஏதாவது செய்து “பள்ளத்தை நிரப்புகிற அரசின் பதட்டம்” எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவாக வெளிப்பட்டுள்ளது. இப்பதட்டத்தின் காரணமாக ஏற்கெனவே
ரூ. 15 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்த எல்.ஐ.சி யின் உள்ளார்ந்த மதிப்பை ரூ 6 லட்சம் கோடி என அரசு குறைத்திருக்கிறது. இது எல்.ஐ.சி யின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவை காலம் காலமாக வழங்கி வரும் இந்தியக் குடி மக்கள், பல கோடி பாலிசிதாரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை தகர்க்கிற முடிவாகும். உழைப்பாளி மக்களின் இரத்தம், வியர்வையால் உருவான விலை மதிப்பற்ற தேசத்தின் சொத்துக்களை அடி மட்ட விலைக்கு விற்கிற செயலாகவும் உள்ளது. எல்.ஐ.சி பங்குகளின் விலைகளும் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கேற்பவே முடிவாகியுள்ளதே தவிர உண்மையான விலையாக இல்லை.
தனியார்மயம் நோக்கிய முதல் அடி
பங்கு விற்பனை என்பது எல்.ஐ.சி தனியார்மயம் நோக்கிய முதல் அடியே ஆகும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கருதுகிறது. இம் முடிவு எந்த லட்சியங்களுக்காக எல்.ஐ.சி உருவாக்கப்பட்டதோ, அவை அனைத்தையும் சிதைக்க கூடியது ஆகும். எல்.ஐ.சி இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம் மட்டுமல்ல, 65 ஆண்டு கால இருப்பால், தனது பங்களிப்பால் தேச வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாகவும் திகழ்கிறது. எல்.ஐ. சி யின் தடங்கள் பதியாத எந்தவொரு துறையும் பொருளாதாரத்தில் இல்லை. 39 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கொண்ட நிறுவனமாகும் இது. 36 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை இந்தியப் பொருளாதாரத்தில் செய்துள்ளது. பெரும்பாலான முதலீடுகள் அரசுப் பத்திரங்கள், ஆதார தொழில் வளர்ச்சி, சமூக நலத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ளவை ஆகும். இந்திய பங்குச் சந்தையின் முதன்மை முதலீட்டாளர் எல்.ஐ சி யே ஆகும். 22 ஆண்டு தனியார் போட்டிக்கு பின்னரும் மொத்த புதிய பாலிசிகளில் 74 சதவீத சந்தைப் பங்கை எல்.ஐ.சியே வைத்திருக்கிறது.
சாதாரண மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு பாதிக்கப்படும்
எல்ஐசியின் பங்கு விற்பனை கோடிக் கணக்கான பாலிசிதாரர்களின் நலனுக்கு எதிரானது. பாலிசிதாரர்களே இம் மாபெரும் நிறுவனத்தின் உண்மையான உடைமையாளர்கள். பங்கு விற்பனைக்கு பிறகு பாலிசிதாரருக்கு தரப்படும் முக்கியத்துவம் குறையும். முதலீட்டாளர் நலனே பிரதானமாக மாறும். இத்தகைய மாற்றம் சாதாரண மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிட்டுவதை கடுமையாக பாதிக்கும்.
வெளி நடப்பு வேலை நிறுத்தம்
பங்குச் சந்தைக்கு எல்.ஐ.சி பங்குகள் கொண்டு வரப்படும் மே 4 அன்று நாடு முழுமையும் உள்ள பல்லாயிரக் கணக்கான எல்.ஐ.சி ஊழியர்கள் இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கறவை மாட்டை அடி மாட்டின் விலைக்கு விற்று, தனியார் ஒட்டக் கறக்க வழி செய்யும் கொடுமை
Nice article