“பரோடா க்ளோபல் ஷேர்ட் செர்விஸஸ் லிமிடெட்”

ஒரு நூதன தனியார்மயமாக்கல் நடவடிக்கை

நமது சிறப்பு நிருபர்

பரோடா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்ட ஒரு பொதுத் துறை வங்கி. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், வங்கி ஊழியர், அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

நூதன தனியார்மயமாக்கல்

ஆனால், பரோடா வங்கி “ பரோடா க்ளோபல் ஷேர்ட் செர்விஸஸ் லிமிடெட்.” (Baroda Global Shared Services Ltd., – BGSS) என்ற பெயரில் ஒரு துணை நிறுவனத்தை (wholly owned subsidiary) 2017ம் வருடம் ஆரம்பித்து தனது வங்கிச் சேவைகளை தன் துணை நிறுவனத்திற்கே அவுட் சோர்சிங் செய்து நூதனமான தனியார் மயமாக்கலை இத்துணை நிறுவனம் மூலமாக நிறைவேற்றி வருகிறது.

தலைவர், நிர்வாக இயக்குனர் பதவி பிரிப்பு

2015ம் வருடம், பொதுத்துறை வங்கிகளின் சிஎம்டி (CMD – Chairman & Managing Director) பொறுப்புகள், தலைவர் (Chairman) மற்றும் நிர்வாக இயக்குனர் (MD) என்று இரு பொறுப்புகளாகத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. அதே சமயம், பரோடா வங்கியின் இந்த இரண்டு பொறுப்புக்களுக்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த திரு. ரவி வெங்கடேசன் (Infosys) தலைவராகவும், திரு. பி எஸ் ஜெயக்குமார் (VBHC Value Homes) நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பொதுத்துறை சாராதவர்கள் இந்த வங்கித் தலைமைக்கு நியமிக்கப் பட்டதே உள்ளிருந்தே நூதன தனியார்மயமாக்கலை உத்வேகப்படுத்தத்தான்..

BGSS தோற்றம்

2017ம் வருடம் பரோடா வங்கியின் சில சேவைகளை அதன் துணை நிறுவனமான BGSS க்கு அவுட்சோர்ஸ் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. அதன் படி 15 மார்ச் 2017 அன்று BGSS Ltd., 100% துணை நிறுவனமாக பரோடா வங்கியால் ஆரம்பிக்கப்பட்டது.

சொந்த நிறுவனத்திடமே அவுட் சோர்சிங்

முதலில் BGSS, பரோடா வங்கியின் பின் அலுவலக செயல்பாடுகள் (back office operations) சிலவற்றை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தது. முதலில் ஒன்றிரண்டு எனத் தொடங்கிய இந்தச் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு தற்போது விரிவடைந்து, TFBO (Trade Finance Back Office), RLBO (Retail Liability Back Office, CPC (Central Processing Cell for loans), Digital operations, Social Media management, Complaints, Collections (recovery), MSME, பென்ஷன் கொடுத்தல், இதர பிராஜக்ட்டுகள் என நிரந்தர வங்கி ஊழியர்களை வைத்து செய்த வேலைகள் பலவும் தன் சொந்த நிறுவனத்திற்கு பரோடா வங்கியால் அவுட்சோர்ஸ் செய்யப் பட்டுள்ளன.

வாடிக்கையாளர் சேவைக்காக என்பது உண்மையா?

”சில செயல்பாடுகளுக்கு சிறப்புத் திறன்கள், நிபுணத்துவம் தேவைப் படலாம்; இவற்றை மத்தியப்படுத்தி இதன் மூலம் வாடிக்கையாளர் சேவை பெருக வாய்ப்புள்ளதே, இதில் என்ன தவறு இருக்கிறது” என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கை பரோடா வங்கியின் நிரந்தர ஊழியர்கள் மூலம் செய்யப்படாதது ஏன்?

பரோடா வங்கி வெளியிடும் வருடாந்திர அறிக்கைகளில், பரோடா வங்கியின் இயந்தரமாக்கக்கூடிய (processes that can be automated) சேவைகள் மையப் படுத்தப்பட்டு BGSS க்கு சென்றதால், கிளைகளின் பளு குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் வங்கிக்கு மிகுந்த செலவு குறைந்துள்ளதாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஊழியர் நியமனம்

BGSSஇல் உயர் அதிகாரிகள் மற்றும் மற்ற ஊழியர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளில் பொதுத் தேர்வு நடத்தி ஊழியர் சேர்க்கை நடப்பது போல BGSSஇல் உயர் அதிகாரிகள், ஊழியர் நியமனங்கள் நடப்பதில்லை.

பணி நிலைமை

பொதுத்துறை வங்கிகளில் கடைப்படிக்கப்படும் இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையிலான பணி நிலைமைகள், ஊதிய விகிதங்கள், மருத்துவ வசதிகள், ஓய்வூதியச் சலுகைகள், இன்ன பிறவும், BGSS ஊழியர்களுக்குப் பொருந்தாது. தனியார் நிறுவனங்களைப் போல, நிர்வாகம் ஊதியத்தைத் தானே நிர்ணயிக்கும்.  ஊழியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி BGSS வெளியிடும் ஊழியர் விண்ணப்ப விளம்பர அறிக்கைகளில் CTC offered (cost to company) அதாவது ஆண்டு ஊதியம் என்பது ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் மாறும் என்றே குறிப்பிடப் படுகிறது. நிர்ணயித்தபின் வருடாந்திர உயர்வு என்பது மறுக்கப்படும்.

ஒரு சில உயர் பதவிகளுக்கு வழங்கப்படும் CTC ஆண்டுக்கு முப்பது, நாற்பது லட்சங்களுக்கு மேலும், மற்ற பெரும்பாலான ஊழியர்களுக்கு அதிகபட்சம் ஆண்டுக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் வரை நிர்ணயிக்கப் படுவதாகத் தகவல்கள் வருகின்றன. விற்பனைப் பிரிவில் பணி புரியும் ஊழியர்களுக்கு மட்டும் சாதனைகள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என நிறுவன வேலை விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. ஓய்வூதியம் கிடையாது. BGSS ஊழியர்கள் சங்கப் படுத்தப் படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

மாற்றம் வேண்டும்

தேனா வங்கியும், விஜயா வங்கியும் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்ட பின் 1500 வங்கிக் கிளைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளன.

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாடு கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தை சந்தித்து வரும் சூழலில், பரோடா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயற்கையானது.

ரிசர்வ் வங்கி, “டிஜிட்டல் வங்கி யூனிட்டுகள்” (Digital Banking Units) ஆரம்பிப்பது பற்றி ஆலோசனைகள் வெளியிட்டுள்ள சூழலில் பரோடா வங்கி தன் துணை நிறுவனம் மூலமே அவற்றை நடத்த அவுட் சோர்ஸ் செய்யக் கூடும் என்ற அபாயம் உள்ளது. அதன் மூலம் மேலும் பல கிளைகள் மூடப்படலாம்.

முன் மாதிரியாக இயங்க வேண்டிய ஒரு பொதுத் துறை வங்கியே இவ்வாறு நூதனமாக ஒரு தனியார் நிறுவனம் போல தனது துணை நிறுவனத்தை நடத்துவது முற்றிலும் தவறான முன்னுதாரணமாகும்.

Comment here...