மே தினம்  – தொழிலாளர்களின் உரிமையை உயர்த்திப் பிடிப்போம்

க.சிவசங்கர்

“மண்ணை இரும்பை 

மரத்தைப் பொருளாக்கி 

விண்ணில் மழையிறக்கி 

மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி 

வாழ்க்கைப் பயிரிட்டு 

வாழ்ந்த தொழிலாளி கையில் 

விலங்கிட்டுக் காலமெலாம் 

கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க 

பொங்கி வந்த மே தினமே நீ வருக!” 

என்னும் புரட்சிமிகு கவிதையோடு மே தினத்தை வரவேற்பார் கவிஞர் தமிழ்ஒளி.

மே தினத்தின் வரலாறு

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’  16 மணிநேரம் முதல் 18 மணிநேரம் வரை இருந்த வேலை நேரத்தை எதிர்த்து ”8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” கேட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே உலகின் பாட்டாளி வர்க்கம் அதிகார வர்க்கத்தை எதிர்த்து அவ்வப்போது பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவான சாசன இயக்கம், 1848ம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைமற்றும் 1867ம் ஆண்டு வெளியானமூலதனம்போன்ற நூல்கள் உலக பாட்டாளி வர்க்கத்தைத் தட்டியெழுப்பி வீரம் செறிந்த தொடர் போராட்டங்களை நோக்கி உந்தித் தள்ளின.

குறிப்பாக மார்க்ஸ் தமது மூலதனம் நூலில் வேலை நாள் என்ற பகுதியின் கீழ் இவ்வாறு கூறுகிறார்:

வேலை நாளுக்கு சட்டப்பூர்வமான அளவு முதலாவது தேவையாகும். இது இல்லாமல் தொழிலாளி வர்க்க முன்னேற்றம் மற்றும் விடுதலைக்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் முழுமையாக இருக்காது. வேலை நாளுக்கான சட்டப்பூர்வ அளவு எட்டு மணி நேரமாக இருக்க வேண்டும்“.

இதன் உச்சகட்டமாக 1886ஆம் ஆண்டு சிகாகோ நகரில் மே ஒன்றாம் தேதி எட்டுமணி நேர வேலை என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய அறவழிப் போராட்டமானது காவல்துறையின் பலப்பிரயோகத்தால் கலவரமாக மாறியது. இதனைக் கண்டிக்கும் விதத்தில் மே 4ம் தேதி ஹேமார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்களின் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அப்போது எங்கிருந்தோ எறியப்பட்ட கையெறி குண்டால் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட, அதைக் காரணமாக வைத்து காவல்துறை மிகப்பெரிய தாக்குதலை தொழிலாளர்கள் மீது நிகழ்த்தியது. இதில் பல தொழிலாளர்களும் சில காவல்துறை அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அந்த போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய முன்னணித் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சுமார் ஒரு வருட கால கண்துடைப்பு விசாரணைக்குப் பிறகு, அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்வாறு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்காகப் போராடிய தொழிலாளர்கள் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டும், முன்னணிப் போராளிகள் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்பட்டதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் மே முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்தால் உழைப்பாளர் தினமாக எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இந்தியாவில் மே தினம்

நம் நாட்டில் 1923 ம் வருடம் மே 1ம் தேதி முதன் முதலில் தோழர் சிங்காரவேலர் அவர்களால் மெட்ராஸ் மாகாணத்தில் மே தினக் கொடி ஏற்றப்பட்டு, 1957ம் ஆண்டு கம்யூனிஸ்ட்கள் தலைமையில் அமைந்த கேரள அரசு மூலம் முதன் முதலில் மே நாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் மே தினம் கொண்டாடப்பட்ட 100 வது ஆண்டின் துவக்கத்தில் நாம் இருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நூறு ஆண்டுகளில் இந்திய தொழிலாளி வர்க்கம் பல்வேறு வீரம் செறிந்த போராட்டங்களின் மூலம் இந்திய அரசிடம் இருந்து குறிப்பிடத்தகுந்த உரிமைகளைப் பெற்றுள்ளது. தொழிற்சங்க சட்டம்-1926, தொழில் தகராறு சட்டம்-1947 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம்-1948 போன்றவை இதில் முக்கியமானவையாகும். இவ்வாறு இந்திய பாட்டாளி வர்க்கம் போராடிப் பெற்ற அத்தனை உரிமைகளும் இன்றைய நவதாராளமய ஆட்சியாளர்களால் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

உரிமைகள் பறிக்கப்படும் நவதாராளமய காலகட்டம்

1990 களுக்குப் பிறகான நவீன தாராளமய, உலகமயமாக்கல் சூழலில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றவை இந்திய சந்தையைக் கைப்பற்றிட இத்தகைய தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் போன்றவை பெரும் தடைகளாக இருப்பதாக உணர ஆரம்பித்தன. எனவே இவை இந்திய ஆளும் அரசை வலியுறுத்தி மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்துகின்றன. அதன்படி ஒருபுறம் தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்தி, முதலாளிகள் நல சட்டங்களாக மாற்றிடும் வேலைகளைத் துவங்கியிருக்கும் அரசு, மறுபுறம் அமைப்புசார் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்திடும் பணியினைச் செய்து வருகிறது. அந்த வகையில் அனைத்து துறைகளிலும் நிரந்தரப் பணியிடங்களை வெட்டிச் சுருக்கி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாக மாற்றும் வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக மிகவேகமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகவே தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையிலான வேலை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்கக்கூடியதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பையும் செய்துள்ள பொதுத்துறை நிறுவனங்களை வகை தொகை இன்றி, பட்டியல் போட்டு வெளிப்படையாக இலக்குகள் நிர்ணயித்து விற்கும் வேலையில் இறங்கியுள்ளது இன்றைய ஒன்றிய அரசு.

விவசாயிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக மாறிடும் அவலம்

ஒன்றிய அரசு, இந்திய விவசாயத்தையும் குறிவைத்து அழித்து வருகிறது. விவசாயத்திற்கு தரப்படுகின்ற சலுகைகள் மற்றும் மானியங்கள் வெட்டு, விவசாயக் கடன்கள் மறுப்பு, நீராதாரங்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவது, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய ஆதாரவிலையை நிர்ணயிக்க மறுப்பது, உரம், விதைகள் உள்ளிட்ட இடு பொருட்களை பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு விட்டுவிடுவது போன்ற மோசமான செயல்பாடுகளால் பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் பெரிய அளவிலான நட்டத்தைச் சந்திக்கின்றனர். இதனால் விவசாயிகள் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பால் விவசாயத்தை -தங்கள் உழைப்புச் சாதன உடைமையை- கைவிட்டு தங்கள் இருப்பிடத்தை விட்டு புலம் பெயர்ந்து தொலை தூர இடங்களுக்குச் சென்று, தங்கள் வாழ்வாதாரத்திற்காக தினக்கூலிகளாய் கையேந்தி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  

இதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும் இந்த முதலாளித்துவ அமைப்பு முறை, அந்தத் தொழிலாளர்களுக்கு உரிய எவ்வித அடிப்படை உரிமைகளையும் வழங்காமல் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வரை வேலைவாங்கி தங்கள் உபரிமதிப்பை உயர்த்திக் கொள்கின்றன. கொரோனா கால ஊரடங்குகள் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன. 

பொதுவாகவே சமூக அமைப்பின் ஒவ்வொரு காலகட்டத்திலும் புகுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உற்பத்தித் திறனில் வளர்ச்சி ஏற்படுகிறது. இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருளின் உற்பத்தி நேரம் தொடர்ந்து குறைந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே அந்த குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளியின் வேலைநேரமும் குறைக்கப்பட்டு, உற்பத்தி திறனால் உயரும் உபரி மதிப்பு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனாலேயே வளர்ந்த  நாடுகளில்,  தொழிலாளர்களின் பல கட்டப் போராட்டங்களின் காரணமாக,  தொழிலாளர்களின் வேலை நேரம் குறைந்து வருவதைக் காணலாம். ஆனால் அடிப்படைவாத பிற்போக்கு சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்ட நம் நாட்டில் இது பின்னோக்கி இழுக்கப்பட்டு 12மணி நேரமாக மாற்றப்படும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசிற்கு சாதகமாக உள்ள சில மாநில அரசுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவாக  நடவடிக்கைகளை எடுத்து வருவதைக் காண முடிகிறது. 

இவ்வாறு வேலைக்கேற்ற ஊதியமில்லாமல், அடுத்த நாள் வேலைக்கே உத்திரவாதமில்லாமல் கொத்தடிமைகளைப்போல தொழிலாளர்கள் சுரண்டப்பட்டும், தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்ற எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கப்பட்டும் வருகிற இந்த நவ தாராளமய காலகட்டத்தில் இன்னும் உத்வேகத்துடனும், எழுச்சியுடனும் நம் உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

முதலாளித்துவ சமூக வீழ்ச்சியே நிரந்தரத் தீர்வு:

அந்த வகையில் “எட்டு மணி நேரம் வேலை” என்பது ஏதோ ஆளும் வர்க்கங்களாலோ, அரசினாலோ மனமிரங்கி கொடுக்கப்பட்ட சலுகை அல்ல. மாறாக உழைக்கும் வர்க்கத்தால் போராடி பெறப்பட்ட உரிமை என்பதை நினைவுப்படுத்துவதற்கே இந்த மே நாள்.  உழைப்பாளி இன்றி இங்கு ஓர் அணுவும் அசைந்ததில்லை. இன்றைய நவீன உலகத்தின் அத்தனை செல்வங்களும் உழைப்பாளர்களால் உருவானது. எனவே அவற்றை அனுபவிக்கும் உரிமையும் அவர்களுக்குள்ளது என்பதை சூளுரைத்திடவே இந்த மே நாள். இவ்வாறு இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் நம் ஒன்றுபட்ட வலிமையான போராட்டங்களின் மூலம் சில உடனடி உரிமைகளைப் பெற்றிடப் போராடும் அதே நேரத்தில் இந்த பிரச்சனைகள் அனைத்திற்குமான நிரந்தரத் தீர்வு என்பது  முதலாளித்துவ சமூக அமைப்பின் ஒட்டுமொத்த வீழிச்சியில் தான் அடங்கியுள்ளது என்பதையும் பாட்டாளி வர்க்கம் உணர வேண்டும். எனவே சிலர் வாழப் பலர் வாடும் தனியுடைமைக் கொடுமை நீங்கி, எல்லோரும் எல்லாமும் பெற்றிடும் பொதுவுடைமை சமூகம் அமைய, 

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்.  நாம் இழப்பதற்கு ஏதுமில்லை. கைவிலங்குகளைத் தவிர… ஆனால் அடைவதற்கோ நமக்கே நமக்கான ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது.

Comment here...