எஸ்.வி.வேணுகோபாலன்
ஒளியில் உருவானவர் – கார்ல் மார்க்ஸ்
காலத்தின் கர்ப்பத்தில் கருவானவர் !
என்று கரிசல் குயில் கிருஷ்ணசாமி குரலெடுத்துப் பாடவேண்டும், நீங்கள் கேட்கவேண்டும். நவகவி அவர்களது அற்புதமான இந்த இசைப்பாடலை, உள்ளபடியே கார்ல் மார்க்ஸ் கேட்டிருந்தால், அதை பற்றிய விமர்சனத்தை, இசை நுணுக்கங்களை எல்லாம் அடுத்த நாள் முக்கிய நாளேட்டில் எழுதி இருந்திருப்பார். பீத்தோவன் ரசிகர்கள் குழுவின் இசை கச்சேரிகளை அந்நாட்களில் பெரிய அரங்குகளில் கேட்டுவிட்டு வெளியே வருபவர்கள் கார்ல் மார்க்ஸ் அதே கச்சேரியைக் கேட்டுவிட்டு வெளியே செல்வதைப் பார்த்துவிட்டால், மறுநாள் அதைப் பற்றிய அவரது எழுத்தோவியம் வாசிக்க போட்டி போட்டுக்கொண்டு காத்திருப்பார்களாம், கலை இலக்கிய இசை மற்றும் நாடக கொண்டாடி மார்க்ஸ். ஷேக்ஸ்பியரின் நுட்பமான வாசகர்!
1818 மே 5 அன்று வானில் எந்தத் துருவ நட்சத்திரமோ, இடி மின்னலோ, அசரீரி வாக்கோ ஒன்றும் நிகழவில்லை, அது மற்றுமோர் நாள். மக்கள் அவரவர் அன்றாடங்களில் தொலைந்து போயிருக்க, கார்ல் மார்க்ஸ் பிறந்தார், பிரஷ்ய நாட்டின் ரைன் பகுதியில், பரபரப்பின்றி என்று ஒரு கவிஞர் எழுதி இருந்தார். மேதைகள் தங்கள் வாழ்க்கையால் மற்றவர்கள் உள்ளங்களில் ஊடுருவி நிலைபெற்று நின்றுவிடுகின்றனர். இரண்டு நூற்றாண்டுகள் கடந்து அவரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறது பூவுலகம், இன்னும் என்ன சாட்சியம் வேண்டும் அவரது அசாத்திய பண்பாக்கங்களுக்கு!
மார்க்ஸ் என்ற மாமனிதர் உருவாக்கத்தில் அவரது பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்டு அந்நாளைய பிரஷ்ய ஒடுக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளைப் பற்ற வைத்த பலரும் இருந்திருக்கின்றனர். தத்துவ வகுப்பில் இம்மானுவேல் காண்ட் என்ற அறிஞரின் கருத்துகளை மாணவரிடையே விவாதித்த தலைமை ஆசிரியர் ஜோஹன் வான் தனது லிபரல் கருத்தோட்டத்திற்காக காவல் துறை கண்காணிப்பில் இருந்தாராம். பொருள் முதல் வாதியும் நாத்திகருமான கணித ஆசிரியர் ஜோஹன் ஸ்டெயினிங்கர் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. மாணவர்கள் தடை செய்யப்பட்ட கவிதைகளை வாசித்தனர், அரசாங்க விரோத கவிதைகளை பரப்பினர். அதைவிட முக்கியமான விஷயம், பள்ளிக்கூடத்தைக் கண்காணிக்க என்றே அனுப்பப்பட்ட அரசு பிரதிநிதியை வரவேற்கவோ, மரியாதை செய்யவோ முடியாதென மறுத்திருக்கின்றனர் மாணவர்கள்.
பள்ளியிறுதித் தேர்வு எழுதிய பிறகு மார்க்ஸ், வேலையைத் தேர்வு செய்வது பற்றிய ஓர் இளைஞனின் மனப்பதிவுகள்’ என்று ஒரு கட்டுரை எழுதினாராம். பொது நன்மைக்காகப் பணியாற்றித் தங்களை மேம்படுத்திக் கொண்டவர்களைத் தான் வரலாறு போற்றுதலுக்குரிய மேன்மக்கள் என்று சொல்கிறது. மிகத் திரளான மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தப் பாடுபடும் மனிதனே மகிழ்ச்சியான மனிதன் என்று அனுபவங்கள் கூறுகின்றன என்று அதில் குறிப்பிட்டிருந்தார் மார்க்ஸ். எப்பேற்பட்ட இலட்சிய தீபம் அப்போதே அவர் நெஞ்சில் சுடர் விட்டிருக்கிறது!
இளம் ஹெகலிய சிந்தனையாளராக ஹெகல் தத்துவத்தில், கருத்து முதல் வாதத்தை ஏற்றுக் கொண்ட தன்மையிலிருந்து வேகமாக மாறி, பொருள் முதல் வாதியாக பரிணமிக்கும் மார்க்ஸ், உழைப்பை மிக நெருக்கமாக நுட்பமாக ஆய்வு செய்தது மகத்தான பங்களிப்பு. சுரண்டலை நிறுவுவதன் பயணத்தை அவர் தொடக்க காலத்திலேயே கண்டுணர்ந்து விட்டிருந்தார்.
ஆசிரியர் பணியில் அதிரடி கண்காணிப்புகள் அதிகரித்த நிலையில், கார்ல் மார்க்ஸ் பத்திரிகையை சிறந்த சாதனம் என்று தேர்ந்து இதழாளராக மலர்கிறார். பன்மடங்கு விற்பனை ஆகும் நிலைக்கு இவரது படைப்புகள் பத்திரிகையின் தன்மையைத் தளத்தை உயர்த்துகின்றன. தேச துரோகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அளவு அங்கும் நிலைமை போகிறது. இடையே காதல் கனிந்து தனது அறிவாற்றலை, தேடலை, ஆராய்ச்சி தளங்களைக் கொண்டாடும் ஜென்னியைக் கைப்பிடிக்கிறவர், எல்லை கடந்து பாரிஸ் சென்றுவிடுகிறார்.
இவரது தேடல் இலக்கைத் தாமும் ஏற்ற பாதையில் இவரை வந்தடைகிறார் பிரெடரிக் ஏங்கல்ஸ். மிகச் சிறந்த நட்பு இறுதிக்காலம் வரையிலும் நீடிக்கிறது.
மார்க்ஸ் அதன் பின்னர் தான் படைத்தளிக்க இருந்த மூலதனம் என்பது ஓரிரவில் உருவானதல்ல. வெவ்வேறு மேதைகளின் ஆக்கங்களைத் திரும்பத்திரும்பக் கூர்ந்து வாசித்து அவற்றில் இருந்து வேறுபட்டு சிந்தித்துத் தான் கம்யூனிச அடிப்படை பிரதியை உருவாக்கினர் இருவரும். இந்தக் காலங்களில் ஏங்கல்ஸ் செய்த உதவி விவரிப்புக்கு அப்பாற்பட்டது. ஏங்கல்ஸ் தனது மனைவியைப் பறிகொடுத்த சமயத்தில், அவரிடம் பண உதவி கேட்டு எழுதிய மார்க்ஸ், துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் புத்தி கூட இன்றி, காசு தேவையின் இயக்கத்தில் அப்படி ஆகிவிட்டது, உடனே பணம் அனுப்பு என்று பின்னர் எழுதுகிறார். அந்த நட்பின் மகத்துவம் அது.
நையாண்டியும், நகைச்சுவை உணர்வும் கொப்புளிக்கும் எழுத்துக்குப் பேர் போன மார்க்ஸ், புருதோன் என்பவர் எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலைக் காட்டமாகச் சாடிய தமது நூலுக்கு வைத்த பெயர், தத்துவத்தின் வறுமை!
கூலி விலை லாபம் என்பது மார்க்சின் அபாரமான பிரதி. உபரி உழைப்பு தான் லாபத்தின் தோற்றுவாய், அதுவே மூலதனத்தின் திரட்சி என்பதை அற்புதமாகப் பின்னர் நிறுவினார்.
அடிமைத் தனத்தை ஆதியிலிருந்தே வெறுத்து வந்தவர் மார்க்ஸ். மனித குல விடுதலைக்கான சிந்தனைகளைத் தத்துவம், பொருளாதாரம், அரசியல் தளங்களில் முறையே ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் தேச அனுபவ வளத்திலிருந்து எடுத்துச் செறிவூட்டிச் செம்மைப்படுத்தி அளித்த தத்துவம் தான் மார்க்சியம் என்பார் லெனின். வெறும் எழுத்து மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகள் இயக்கத்தைக் கட்டும் களத்து நாயகராகவும் திகழ்ந்தவர் மார்க்ஸ். இந்தியாவின் நிலைமையையும் கேட்டறிந்து தனது பார்வையில் விவரிக்கும் அளவு அவரது விரிந்த அறிவும், விசாலப்பார்வையும் இருந்தது.
இத்தனை கம்பீரமான தத்துவ மேதையின் வாழ்க்கை எப்படி இருந்தது. தன்னை விரும்பி வரவேற்ற பாரீஸ் நகரமும் வெளியேற்ற இங்கிலாந்தில் குடிபுகுந்து, அங்கும் வாடகை தர முடியாது துரத்தப்பட்ட வாழ்க்கை!
எப்போதும் வறுமையும், வீட்டுச் சொந்தக்காரரால் ஜப்தியும், உடைகளை விற்றுக் கடன் நேர் செய்வதையும் தனது இயல்பான வாழ்க்கையாகவே பழகிக் கொண்டிருந்த ஜென்னி, தான் சீமாட்டியாக வாழ்ந்திருக்க முடியும் என்று ஒரு போதும் சிந்தித்ததில்லை. ‘போயும் போயும் இவனையா காதலிக்கிறாய், இவனிடம் என்ன இருக்கிறது என்று நீ ஏற்றுக் கொள்கிறாய்?’ என்று கேலி பேசிய தோழிகளிடம், ‘உலகம் என்றென்றும் கொண்டாட இருக்கும் மாமேதையின் அன்புக் காதலி நான், வேறென்ன வேண்டும்’ என்று பதில் சொல்வாராம் ஜென்னி. வறுமையின் உச்ச பட்ச தருணத்திலும் இலக்கியக் காதல் ஒளி வீசிக் கொண்டிருக்குமாம் அவர்கள் குடும்பத்தில்!
1881ல் காதல் இணையர் ஜென்னியைப் பறிகொடுக்கும் மார்க்ஸ், பின்னர் 1883 பிப்ரவரியில் மூத்த மகளையும் இழக்கிறார். அதே ஆண்டு மார்ச் 14 அன்று இருக்கையில் அமர்ந்து இருந்தவர் சட்டென்று சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். லண்டன் மாநகரின் ஹைகேட் கல்லறை சதுக்கத்தில் அவருக்கான இரங்கல் கூட்டத்தில் புகழஞ்சலி செலுத்திய ஏங்கல்ஸ் அப்படித் தான் அவர் மறைவை விவரித்தார்.
மாமேதை மார்க்சிற்கு வெகு சிறப்பான அஞ்சலி கட்டுரை
சிறப்பு தோழர் புகழஞ்சலி….
அருமை அருமை
மனதை தொட்ட கட்டுரை.அற்புதம்