மின்வெட்டுப் பிரச்சனை தீருமா?

க.சிவசங்கர்

கடந்த இரண்டு வாரங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் மின்வெட்டு உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உபி, குஜராத்தில் மக்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். நாளொன்றுக்கு 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக தகவல்கள் வருகின்றன. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், உபி, ஹரியானா என பெரும்பாலான வடமாநிலங்கள் கடுமையான மின்வெட்டைச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்புகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இவற்றிற்கு மிகமுக்கியமான காரணமாக சொல்லப்படுவது நிலக்கரி பற்றாக்குறை. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியான சுமார் 400 ஜிகா வாட்களில்  சுமார் 280 ஜிகா வாட் மின்சாரம் நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்கள் மூலமே கிடைக்கிறது. அந்த வகையில் இந்தியாவின் 70% மின்சாரத்தேவை நிலக்கரியை பயன்படுத்தி அனல்மின்நிலையங்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.

நிலக்கரி கையிருப்பு மூன்றில் ஒரு பங்கு

மத்திய மின்சார ஆணைய அறிக்கையின்படி, “ஏப்ரல் 18ஆம் தேதி நிலவரப்படி 66.72 மில்லியன் டன்களுக்கு இருக்க வேண்டிய நிலக்கரி கையிருப்பு, 22.52 மில்லியன் டன்கள் ஆக உள்ளது. இது மொத்தத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

ஒன்றிய அரசின் விதிமுறைகள்படி மின் உற்பத்தி நிலையங்கள் சராசரியாக குறைந்தது 24 நாட்கள் அளவுக்கு நிலக்கரி இருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில் இந்தியாவின் நிலக்கரிச்சுரங்கங்களில் இன்னும் 9 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் மின் தேவை அதிகமாக இருப்பதால், பொதுவாகவே கோடை காலத்தில் மின் நுகர்வு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே இது குறித்து சரியான திட்டமிடலைச் செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, இறக்குமதிக்கான தளர்வை அதிகரித்து ”அந்தந்த மாநிலங்களே தங்களுக்கு தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளது.

மின் தடைக்கான காரணங்கள்

மின்தடைக்கு மூன்று காரணங்கள் குறிப்பாக சொல்லப்படுகின்றன. வெப்பம் மிகுந்த காலநிலையால் ஏற்படும் அதிக தேவை, உக்ரைன் போர், நிலக்கரியை துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்.

மிககுறிப்பாக ரஷ்யா-உக்ரேன் இடையே நடந்து வரும் போர் காரணமாக, அனல் மின் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து நிலக்கரி இறக்குமதியைக் கோர முடியாத நிலையில் உள்ளன. இந்தப் போரினால் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக டன் ஒன்றுக்கு 60 முதல் 70 டாலர்களாக இருந்த விலை இன்று இருமடங்காக உயர்ந்து 140 டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே கடன் சுமையில் சிக்கியிருக்கும் மாநிலங்களுக்கு இது கூடுதல் சுமையாகும்.

இவ்வாறு நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு சில நடைமுறை காரணங்கள் இருப்பது உண்மை என்ற போதிலும், இந்த நவ தாராளமய முதலாளித்துவ அரசின் தவறான கொள்கை முடிவுகளும் இதற்கு ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

உலக அளவில் நிலக்கரி மிக அதிகமாக கிடைக்கும் நாடுகளில் முன்னணியில் உள்ள நாடு இந்தியா. ஆனால் அதே இந்தியா தான் தற்போது மிகப்பெரிய அளவில் நிலக்கரி தட்டுப்பாட்டையும் சந்தித்து வருகிறது என்பது முரண். இந்த தட்டுப்பாடு என்பது இயற்கையாக ஏற்பட்டது அல்ல; செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறு இது ஏற்படுத்தப்பட்டது?…வாருங்கள் பார்க்கலாம்…

ஒன்றிய அரசின் தவறான கொள்கை

2020ஆம் ஆண்டில், நிலக்கரி தொடர்பான இரண்டு மிக முக்கிய சீர்திருத்தங்களைச் செய்தது ஒன்றிய அரசு. முதலாவது நிலக்கரி உற்பத்தியில் சுரங்க சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. அதன்படி, நிலக்கரிச் சுரங்க (சிறப்பு விதிகள் – 2015) சட்டம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை-1957) சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறைகளுக்கு அரசு அனுமதியளித்தது. இரண்டாவது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கான இறக்குமதி வரி கணிசமாக குறைக்கப்பட்டது. இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்பட்டன.

முதலாவது சீர்திருத்தத்தின் படி அதுவரை பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வந்த நிலக்கரி சுரங்க உரிமை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனம் என்பது தேவையின் அடிப்படையில் உற்பத்தியை நிர்ணயிக்கும். அதுவே ஒரு தனியார் நிறுவனம் என்பது லாபத்தை மட்டுமே இலக்காக வைத்து இயங்குபவையாக இருக்கும். அந்த லாபத்தை அதிகரிக்க செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கி அதன் மூலம் தேவையின் அளவை போலியாக உயர்த்திடும்.

அவற்றைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 12 முதல் ரூ. 20 வரை விற்கின்றன. ஒன்றிய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதை முறைப்படுத்தவில்லை. இதனால் மாநிலங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகள் உற்பத்தி செய்யும் மின்சாரம் ஒரு யூனிட் விலை ரூ.4 க்குள்தான் வருகிறது என்பதை கணக்கிட்டால் இதன் வீச்சு புரியும்.

இந்தியாவின் மின்சாரச் சந்தை அதானியின் கட்டுப்பாட்டில்

மேலும் சமீப காலங்களில் உலகின் பெருமுதலாளிகள் அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்து வரும் கௌதம் அதானியின் ”அதானி என்டர்ப்ரைசஸ் மற்றும் அதானி பவர் நிறுவனங்கள்” இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களின் மிக முக்கிய நிறுவனங்களாக மாறி இந்தியாவின் மின்சாரச் சந்தையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன என்பதை இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். குறிப்பாக சென்ற வருடம்  ₹13.13கோடி நிகர லாபம் சம்பாதித்த அதானி பவர் நிறுவத்தின் இந்த ஆண்டு நிகர லாபம் ₹ 4,645 கோடி. ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 350 மடங்கு லாபம்.  ஆளுகின்ற அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நிறுவனமும் இப்படியொரு அசுர வளர்ச்சியை அடைய வாய்ப்பே இல்லை என்பதை எளிதில் யூகிக்க முடியும்.

இரண்டாவது அதானி என்டர்ப்ரைசஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான நிலக்கரி சுரங்கத்தினை அமைக்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆஸ்திரேலியா பழங்குடி மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அந்த சுரங்கத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த நிறுவனம் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. அந்நிறுவனத்தின் முதன்மை இலக்கு இந்தியாவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு ஒரு மிகப்பெரிய சுரங்க நிறுவனத்தின் துவக்கம், அதன் உற்பத்தியை விற்க ஒரு மிகப்பெரிய சந்தை, எளிதாக அங்கு இறக்குமதி செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் மற்றும் வரிச்சலுகை, இறக்குமதிக்கான துறைமுகங்கள், செயற்கையான நிலக்கரி தட்டுப்பாடுகள் மூலம் இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் என்று ஒன்றிய அரசின் உதவியோடு ஒரு முழுமையான திட்டத்தோடு களத்தில் இறங்கியுள்ளது அந்நிறுவனம்.

எனவே இவை அனைத்தையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போது இப்போது ஏற்பட்டிருக்கும் மின்சார நெருக்கடி மற்றும் எதிர்காலத்தில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆகியவற்றில் ஒரு சில தனியார் பெரு முதலாளிகளின் கட்டுப்பாடுகள் மிக அதிக அளவில் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.  

மாற்று வழி

இத்துடன் சூரிய ஒளி மின்சாரம், காற்றாடி மின்சாரம், நம் நாட்டு வளங்களை பயன்படுத்தி சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் மின்சார உற்பத்தி போன்றவற்றிகு ஒன்றிய அரசு தேவையான முன்னுரிமை கொடுப்பதில்லை. மின்சார மசோதா 2020 மூலமாக எளிய மக்களுக்கான இலவச மின்சாரம், குறைந்த விலை மின்சாரம் ஆகியவற்றிற்கு வேட்டு வைப்பதோடு, மின்சார விநியோகத்தை முழுமையாக தனியார் கைகளில் ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. விவசாயிகளின், தொழிலாளிகளின் கடும் எதிர்ப்பால் இம்மசோதா இன்று வரை சட்டமாகவில்லை. ஆக ஒன்றிய அரசின் கொள்கை மாற்றம்தான் மின்சார தட்டுப்பாட்டை போக்கி, அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் மின்சாரம் கிடைக்க வழி வகுக்கும்.

One comment

  1. Well written. Clearly skinned out the real reason for relaxation of import of coal. This government takes all the economic decision favouring 2 companies..

Comment here...