எல்.ஐ.சி பங்கு விற்பனை: ஒரு கயிறு இழுக்கும் போட்டி

க.சுவாமிநாதன்

எல்.ஐ.சி பங்கு விற்பனை, எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில் 28 ஆண்டு கால போராட்டம் விரிந்த அளவில் முக்கியமான தாக்கங்களையும் உருவாக்கியுள்ளது.

மக்கள் கருத்து எனும் சனநாயக வழி முறை

ஏராளமான கேள்விகள் எழுவதற்கு காரணம், 28 ஆண்டுகளாக இது பற்றி மக்கள் மத்தியில் ஏராளமாக பேசப்பட்டு இருப்பதுதான். முக்கியமான அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் மீது பரந்த விவாதம் நடைபெறுவது ஒரு தேசத்தின் ஜனநாயக பண்பு ஆகும். ஆனால் ஆட்சியாளர்கள் அத்தகைய பண்பை வெளிப்படுத்துவது இல்லை. உண்மையில் அத்தகைய பண்பை உயிர்ப்போடு தக்க வைப்பதாக வீதிகளில் நடைபெறுகிற போராட்டங்களே இருக்கின்றன என்பதை இன்சூரன்ஸ் துறையில் நடந்தேறி வந்துள்ள போராட்டம் நிரூபித்திருக்கிறது. 

கருத்து பரிமாற்றங்களே ஆளும் வர்க்கங்களின் நகர்வுகளுக்கு தடையாக மாறினால், வடிவங்கள் அமைதியானதாக, பாரம்பரியமானதாக இருந்தாலும் அவை “வன்முறை” போராட்டங்கள் என சித்தரிக்கப்படும். இந்திய இன்சூரன்ஸ் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் – தனியார் அனுமதிக்கு எதிராகவும், பங்கு விற்பனைக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் அமெரிக்க பெரு ஊடகங்களால் இப்படி வர்ணிக்கப்பட்ட கட்டங்கள் உண்டு. முதலாளித்துவ ஜனநாயகத்தில் உரிமைகள் அழகாக அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவற்றை பயன்படுத்த முனைந்தால், அவை ஆளும் வர்க்கங்களின் முனைப்புகளுக்கு வேகத் தடையாக மாறினால் அந்த உரிமைகளுக்கே அபாயம் வரும். 

ஆகவேதான் இந்த முறை எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான மசோதா தனியாகக் கூட கொண்டு வரப்படவில்லை. நிதி மசோதாவுக்குள் சொருகப்பட்டு கூர் விவாதம் மறுக்கப்பட்டது. 

வேகத்தடைகள் மக்களின் கொடைகள்

இந்த நீண்ட நெடிய போராட்டம் காரணமாக தறி கெட்ட வேகத்தில் அரசால் நகர முடியவில்லை. இதன் தாக்கங்களுக்கு என்ன நிரூபணம்?

ஒன்று, 1994 இல் 50 சதவீத பங்கு விற்பனை என்று பேசியவர்கள் படிப்படியாக இறங்கி 10 %, 5% என்றெல்லாம் கசிய விட்டு 3.5 % என்ற அளவிற்கு வந்து நிற்கிறார்கள். இதற்கு இன்னொரு காரணம் எல்.ஐ.சி யின் பிரம்மாண்ட வளர்ச்சி. 28 ஆண்டுகள் கழித்தும் 50% என்ற ஆசையில் அவர்களால் 3.5 % என்பதைக் கூட கடக்கவில்லை. 50 % என்றால் அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தையே எல்.ஐ.சி இழந்து இருக்கும். ஆனால் இன்னும் பல்லாண்டுகள் ஆனாலும் எல்.ஐ.சி யின் அரசு நிறுவனம் என்ற தன்மையை அவ்வளவு எளிதாக அழித்து விட முடியாது என்ற நம்பிக்கை தக்க வைக்கப்பட்டுள்ளது. 

நீடித்த போராட்டம் போட்ட பெரும் தடை, தனியார் மயம் என்ற 50 கி.மீ பயணத்தில் 28 ஆண்டுகள் கழித்தும் 3.5 கி. மீ மட்டுமே நகர முடிந்து இருப்பதே. ஆகவே பாலிசிதாரர்களுக்கு நம்பிக்கையாக சொல்லலாம். அரசு நிறுவனம் என்ற முத்திரையை அகற்ற அவர்களால் முடியாது. அதனால்தான் சட்டத் திருத்தத்தில் கூட “எல்லா காலங்களிலும்” 51 சதவீதம் இருக்கும் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஆட்சியாளர்களின் வார்த்தைகள் பொதுவாக காகித ஓடங்கள்தான். அவை கவிழ்ந்து விடாமல் கரை சேர்க்கிற கவனம் தேவைப்படுகிறது. மக்கள் கருத்து வலுவாக வலுவாக காகிதங்களை கற்கோட்டைகள் போன்று மாற்ற முடியும். 

மாரீச மான்கள்

மத்திய அரசின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் *சஞ்சய் மல்கோத்ரா* இப்போது கூட “நிறுவனம் வாழ்வதே பாலிசிதாரர்களுக்குதான். அவர்கள் இல்லையெனில் நிறுவனமும் கிடையாது, பங்கு தாரர்களும் கிடையாது”(இந்து பிசினஸ் லைன் – 11.05.2022) என்று கூறியுள்ளார். காரணம் என்ன? எல்.ஐ.சி யின் செயல்பாடுகள் “பாலிசிதாரர் நலன்” என்பதில் இருந்து “பங்கு தாரர் நலன்” என்பதை நோக்கி நகர்கிறது என்ற  விமர்சனம் அவர்களை நோக்கி தொடுக்கப்பட்டதுதான். அந்த விமர்சனம் சும்மா வைக்கப்படவில்லை. எல் ஐ சி உபரியில் பாலிசிதாரர்க்கான பங்கு 95 சதவீதத்தில் இருந்து 90 சதவீதமாக பங்கு விற்பனைக்கு பின்னர் குறைந்து  போனசை பாதிக்கும் என்பதால் எழுந்த விமர்சனமே அது. எல்.ஐ.சி யின் நிதியே கூட பங்குரிமை பெறும் பாலிசிகள், (Participating policies) பங்குரிமை அற்ற பாலிசிகள் (Non-Participating Policies) என்று இனி இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டாம் வகை நிதியில் இருந்து பாலிசிதாரர்களுக்கு உபரியில் ஏதும் கிடைக்காது என்ற விமர்சனமும் முன் வைக்கப்பட்டதும்தான். ஆனால் இவ்விமர்சனங்களுக்கு  பதில் சொல்லாமல், வெறும் வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டுள்ளார் நிதிச் சேவை செயலாளர்.  கேள்விகள் மக்களிடம்  சென்று சேர்ந்து இருப்பதால் ஏதோ ஒரு விளக்கம் தர வேண்டிய கட்டாயம் இருப்பதன் வெளிப்பாடே இது. 

முருங்கை மர வேதாளங்கள்

அரசுக்கு பங்கு விற்பனையால் வருவாய் கிடைத்தால் அது மக்களின் நலனுக்கே பயன்படும் என்றும் மேற்கூறிய செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது முனை மழுங்கிய அம்பு. பங்கு விற்பனை தவிர வேறு வருவாய் திரட்டல் வழிகளே இல்லையா? என்ற கேள்விகள் எல்லாம் பதில்கள் இல்லாமல்  வேதாளம் போல முருங்கை மரத்தில் தொங்கிக் கொண்டே இருக்கின்றன. அம்பானி, அதானிகளின் சொத்து கோவிட் நெருக்கடி காலத்திலும் பன்மடங்கு பெருகியும் நூறே நூறு முதற் பெரும் தொழில் குழுமங்கள் மீது கூடுதல் கார்ப்பரேட் வரிகளை போடலாம் என்று ஏன் அரசால் யோசிக்க முடியவில்லை?  மூலதன செலவுகளுக்கு நிதி கிடைக்கும் என்கிறார். பங்கு விற்பனை மூலம் கிடைக்கிற 21000 கோடிக்கே இந்த விளக்கம். 22 லட்சம் கோடி முதலீடுகள் மத்திய அரசு, மாநில அரசு பத்திரங்கள் வாயிலாக பங்கு விற்பனைக்கு முன்பே கிடைத்துள்ளதே. அது நிதிச் சேவை செயலாளருக்கு தெரியாதா? தங்க முட்டைகளுக்கு காத்திருக்க பொறுமை இல்லாதவர் செயலுக்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?

பின்னடைவு இல்லை

 28 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னடைவா என்றும் கேட்கப்படுகிறது. மல்கோத்ரா குழு அறிக்கையை திரும்பிப் பார்த்தால் இன்னும் அது எவ்வளவு தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை காண முடியும். எல்.ஐ.சியில் உள்ள 50 சதவீத அரசின் பங்குகள் விற்கப்படும் என்பதுதான் மல்கோத்ரா குழு அறிக்கை. ஆனால் 22 ஆண்டுகளாக அவர்களால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. 65 லட்சம் கையெழுத்து இயக்கம் அன்றைய பிரதமர் நரசிம்மராவை தயங்க வைத்தது.  1997 இல் இடதுசாரிகளின் நாடாளுமன்ற பலத்தின் காரணமாக  அன்றைய பிரதமர் குஜ்ரால், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரால் எல்.ஐ.சி பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 2008 இல் பங்கு விற்பனைக்கான மசோதா பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் கொண்டு வரப்பட்டு அதுவும் கைவிடப்பட்டது. அவர்கள் எல்லாம் கொள்கை அளவில் விரும்பினாலும் மக்கள் கருத்தின் காரணமாக இறங்கி வந்தார்கள். ஆனால் இந்த அரசு மக்கள் கருத்தையும் மீறி பங்கு விற்பனையை நகர்த்த முனைகிறது. ஆனாலும் அவர்கள் ஆசை ஈடேறவில்லை. 3.5 சதவீத பங்கு விற்பனை என்று மட்டுமே இன்று அறிவிக்கப்பட்டு அரங்கேறி வருகிறது. 50 சதவீதம் எங்கே… மூன்றரை சதவீதம் எங்கே… ஆகவே அவர்களின் ஆசைக்கு அணை போடப்பட்டுள்ளது என்றாலும் தனியார்மயம் நோக்கி சிறு அடியை அவர்கள் முன்னெடுத்து வைத்துள்ளார்கள். அவ்வளவு எளிதாக அரசால் மல்கோத்ரா குழு போட்ட சாலை வரை படத்தில் நகர்ந்து விட முடியாது. அதன் இலக்கை விட்டு மிக தூரத்தில் நிறுத்தி இருக்கிறோம் என்பது அரசுக்கும்  பின்னடைவுதான். 3.5 சதவீத பங்கு விற்பனை காயமா என்றால் காயம்தான். காயப்பட்டும் போராடியதால் 3.5 % என்ற அளவிற்கு அரசு இறங்கி வர வேண்டியுள்ளது.

காயங்களையும் தாங்குகிற நீதிக்கான போராட்டம் இது. 

குன்றின் மேலிட்ட விளக்கு

கடந்த ஆண்டு கூட (2021-22)  2.94 கோடி புதிய பாலிசிகள் விற்கப்பட்டதில் 2.10 கோடி பாலிசிகளை எல்.ஐ.சி மட்டுமே விற்பனை செய்துள்ளது. புதிய பாலிசிகளில் சந்தைப் பங்கு 74 சதவீதத்திற்கும் மேல். புதிய பிரிமியத்தில் 63 சதவீதம். இதைவிட இன்சூரன்ஸ் பரவலாக்கலுக்கு என்ன சாட்சியம் வேண்டும்! சாதாரண மக்களுக்கு பாலிசிகளை கொண்டு போய் சேர்ப்பது எல்.ஐ.சி தான் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு. 

எல்.ஐ.சியின் வணிகத்தில் 96 சதவீதத்தை கொண்டு வந்து சேர்ப்பவர்கள் முகவர்கள். இதன் மூலம் 13 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் கொண்டு வரும் வணிகத்தால் 28 லட்சம் கோடி ரூபாய் இந்தியப் பொருளாதாரத்திற்குள் வந்துள்ளதெனில் ஒரு சாதாரண காகிதக் கணக்கில் (ஒரு கோடி ரூபாய் முதலீட்டிற்கு ஒரு வேலை வாய்ப்பு எனில்) குறைந்த பட்சம் 28 லட்சம் வேலை வாய்ப்புகள். 

எல்.ஐ.சி தன் பலத்தின் காரணமாக சில நேரம் இடி தாங்கியாக, சில நேரம் ஜாக்கியாக, சில நேரம் பாராசூட்டாக, சில நேரம் சமன் செய்யும் கருவியாக, சில நேரம்   பேரருவியாக பொருளாதாரத்தில் வினையாற்றி வருகிறது. 

ஆகவே இதை சிதைப்பது அவ்வளவு எளிதாக நடந்தேறாது. 

அந்த நம்பிக்கையை 28 ஆண்டு கால போராட்டம் தந்துள்ளது. 

இது ஒரு கயிறு இழுக்கும் போட்டி. மூலதனம் ஒரு பக்கமும் – உழைப்பாளி மக்கள் இன்னொரு பக்கமாய்… யார் அயர்ந்தாலும், தளர்ந்தாலும் இன்னொருவர் முன்னேறுவார். நாம் நமது கால்களை களத்தில் உறுதியாக நிலை நிறுத்திக் கொள்வோம். மனதில் உறுதியை தக்க வைப்போம். மக்கள் நலனுக்கான வடம் பிடிக்கிற உணர்வோடு இழுப்போம். வெல்வோம்

2 comments

  1. பலகட்ட வலுவான தொழிற்சங்க நடவடிக்கைகளால் மத்திய அரசினால் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவில் பங்கு விற்பனையை நிறைவேற்ற முடியவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாக இருந்தாலும் கூட நாம் இன்னமும் கவனத்துடனும் செயல்பட்டு காப்பீட்டு துறையை பொதுத்துறையில் நீடிக்கச் செய்ய வேண்டும். ஆசிரியரின் இக்கட்டுரை பல விஷயங்களை நமக்கு புரிய வைக்கிறது, பாராட்டுக்குரியது

  2. ஆசிரியரின் கயிறு இழுக்கும் போட்டி அருமை. எல்.ஐ சி கடந்தவருடத்தில் மட்டும் ரூ 4 லட்சம் கோடிகளை ஆயுள் காப்பீட்டு வணிகத்தின் மூலம் நிகர உபரியாக சமுதாய மூலதன செலவிற்கு வழங்கி உள்ளது. 26,000 கோடி எங்கே ? 4 லட்சம் கோடி எங்கே? பொதுத் துறை விரோத மனப்பாண்மை அரசு.பங்கு விற்பனை ஆரம்பம் இப்போதுதான் அவர்கள் துவங்குகிறார்கள். 40 கோடி பாலிசிதாரர்களின் ஆதரவு நமக்கும் எல் ஐ சிக்கும் இருப்பதால்தான் அவர்கள் நினைத்தபடி செயல்பட முடியவில்லை. அப்பட்டமான கார்ப்பரேட் நல விரும்பிகளின் கொள்கைகள் 135 கோடி மக்களுக்கும் எதிரானது என்பதை மக்களிடம் விளக்கி புரிய வைக்க வேண்டிய கடமை சுமார் 5 கோடி அணி திரட்டப்பட்ட தொழிலாலர்கள் கையில் தான் உள்ளது . வாழ்த்துக்கள் கட்டுரையின் ஆசிரியருக்கு.

Comment here...