க.சிவசங்கர்
ஒரு தொழிலாளி தன் இளமைக் காலம் முழுவதும் செலுத்திய உழைப்பின் பலனை உடலில் வலு இல்லாத தன் இறுதிக் காலத்தில், தன் வாழ்க்கையை யாருடைய உதவியும் இன்றி குறைந்தபட்ச கௌரவத்துடன் அமைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டமே (Social Security Scheme) ஓய்வூதியம்.
1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்தியாவில் ஓய்வூதிய நடைமுறை குறித்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.
அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல. ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமைத் தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் வருமா?
ஓய்வூதியம் கொடுப்பதால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் நொடிந்து போய் நட்டத்தில் சென்று விடும் என்று பரப்பப்படும் செய்திகளில் துளி உண்மையும் இல்லை. அந்த நிறுவனத்தின் லாபக் குவிப்பில் ஒரு சிறிய அளவு குறையும்; அவ்வளவே. மற்றபடி அது நட்டத்தில் போவதற்கு வேறு பல காரணங்கள் இருக்கலாமே ஒழிய, ஓய்வூதியம் கொடுக்கப்படுவதே காரணம் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
மேலும் ஓய்வூதியம் வழங்குவதால் அரசிற்கு நட்டம் ஏற்படுகிறது என்ற கருத்தும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது. அரசிற்கு வருவாயை ஈட்டக்கூடிய லாபம் கொழிக்கும் கேந்திரமான துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்து விட்டு, அரசிடம் பணம் இல்லை என்று சொல்வது எவ்வாறு சரியாக இருக்கும்? மாறாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வருவாய் ஈட்டும் துறைகள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் மிகச்சில தனி நபர்களிடம் குவிந்துள்ள செல்வம் அரசின் கஜனாவிற்கு வந்து சேரும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்ல, அமைப்பு சாரா பணிகளில் இருக்கும் வயது மூத்தோர்களுக்கும் கூட ஓய்வூதியம் வழங்க இயலும்.
புதிய ஓய்வூதிய திட்டமா? பழைய ஓய்வூதிய திட்டமா?
ஒரு தொழிலாளி ஓய்வு பெற்ற காலம் முதல் தான் இறக்கும் காலம் வரை மாதம்தோறும் முறைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட தொகையைப் (Defined pension) பெறுவதற்கு வழிவகுப்பது பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமே. மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி ஒரு தொழிலாளி பணியில் இருக்கும் காலம் முழுவதும் சேகரிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. எக்காலத்திலும் நிலையான மதிப்பைக் கொண்டிருக்காத, மதிப்பிழக்கும் ஆபத்தை அதிகம் கொண்ட பங்குச்சந்தையினால் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்த பணம் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்துடன், எந்த வகையிலும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத மிகக் குறைந்த அளவிலான மாதாந்திர தொகையை ஓய்வூதியம் என்ற பெயரில் வாங்க வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். பாதுகாப்புத்துறை ஊழியர்கள் (Defense Employees) இத்தகைய நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான் அரசு அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்கிறது.
ஏன் அரசு மட்டும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்?
Government should act as a Model employer என்பார்கள். ஓர் அரசாங்கம் என்பது ஊழியர்களின் பணி நிலைகளை பொறுத்தமட்டில் முன்மாதிரி நிறுவனமாக செயல்பட்டு, அந்த முன்மாதிரி நடவடிக்கையை தனியார் துறையில் இருக்கும் பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் அரசு நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் படிப்படியாக பிற தனியார் நிறுவனங்களிலும் தொடரப்பட வேண்டும் என்பதே ஒரு சமூகத்தை முன்னிழுத்துச் செல்லும் சரியான பார்வையாக இருக்க முடியும்.
சாமானிய மக்களின் பார்வை என்னவாக உள்ளது?
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான நவ தாராளமய, பின் நவீனத்துவ சமூகப் பொருளாதார வாழ்க்கைமுறை இந்த ஓய்வூதிய திட்டங்களின் பயனாளிகளான சாமானிய உழைக்கும் மக்களின் மனநிலையிலேயே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றத்தின் விளைவு அவர்களை எதிர்த்திசையில் பயணிக்க வைத்து அரசு பின்பற்றும் இந்த ஓய்வூதியக் கொள்கையை தாம் பணிபுரியும் தனியார் முதலாளியிடமும் போராடிப் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்து அவர்களை மாற்றி, “அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம்?” என்ற மிக ஆபத்தான கேள்வியை கேட்பவரகளாக அவர்களை மாற்றியுள்ளது. இதில் குறிப்பாக சினிமா, பத்திரிகை மற்றும் இன்னபிற ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இத்தகைய பொதுசமூக மனநிலையை மாற்றிட முற்போக்கு ஊடகங்களும், இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகளும் முன் வர வேண்டும். ஓய்வூதியம் என்பது இலவசமோ, சலுகையோ அல்ல, அது இவ்வுலகம் உய்க்க காலம் முழுவதும் தன் உழைப்புச் சக்தியை செலவழிக்கும் ஒவ்வொரு தொழிலாளியின் அடிப்படை உரிமை என்ற சிந்தனையை சமூகத்தில் ஏற்படுத்திட வேண்டும். நிலையற்ற, மதிப்பிழக்கும் ஆபத்துக்கள் நிறைந்த புதிய ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு நிலையான வருமானத்தைக் கொடுக்கக் கூடிய பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். பொதுத்துறை, தனியார்துறை என்ற பாகுபாடுகள் இன்றி உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும்.
இன்றைய சூழலுக்கு ஏற்ப தொழிலாளி வர்க்கம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனையை கையில் எடுத்து அனைவருக்கும் எளிதாக புரியும்படி கூறியிருப்பதற்கு ஆசிரியருக்கு வாழ்த்துகள். பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்
உண்மை !
மூத்த குடிமக்களின் இளமைக்கால உழைப்பை சமூகம் அங்கீகரித்து தரவேண்டிய உரிமை, ஓய்வூதியம் !