கனவுகளின் விளக்கம் (The interpretation of dreams)

நூல் அறிமுகம்

சி.பி.கிருஷ்ணன்

சிக்மண்ட் ஃப்ராய்ட் 1856 இல் தற்போதைய செக்கோஸ்லோவேகியா நாட்டில் பிறந்தார். இவர்தான் முதன் முதலில் மன அலசல் என்ற முறையை உருவாக்கினார். அதுகாறும் மனிதனை அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சமயம் பண்பாடு, தத்துவம் போன்றவற்றின் மூலமாக அறிந்து வந்த உலகு முதன்முதலாக உளவியல் ரீதியாக ஆழமாக அறிந்து கொண்டது.

1899 இல் இவர் எழுதி வெளியான கனவுகளின் விளக்கம்(The interpretation of dreams) என்ற நூல் தான் முதன்முதலில் கனவுகளை விஞ்ஞான ரீதியாக அலசி ஆராய்ந்தது. அதுவரை கனவுகளுக்கு சரியான விளக்கம் கிடைக்காத மனிதகுலம் முதன்முறையாக விஞ்ஞான ரீதியாக கனவுகளை புரிந்துகொள்ள தலைப்பட்டது. அந்தப் புத்தகம் 120 ஆண்டுகள் கழித்து இன்றும் நம்முடைய அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்கக் கூடிய அளவிற்கு சிறந்து விளங்குகிறது.

*கனவு என்பது விருப்ப நிறைவேற்றம்* என்பதே ஃப்ராய்டின் அடிப்படைக் கோட்பாடு. அதை நேரடியாக புரிந்துகொள்வதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். ஆனால் ஒருவரின் கனவை முழுமையாக ஆய்வு செய்தால் அதை விளக்க முடியும் என்று பல நடைமுறை அனுபவங்களைக் கொண்டு பிராய்டு விளக்கியுள்ளார்.

ஓர் இளம்பெண் ஃப்ராய்டிடம் தனது கனவை கூறினார்.  “எனது சகோதரியின் இரு மகன்கள் மீதும் எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. மூத்தமகன் ஓட்டோ இறந்துவிட்டான். தற்போது இளைய மகன் கார்ல் இறந்து போவதாக நான் கனவு கண்டேன். எனக்குப் பிரியமான இரண்டாவது மகன் இறப்பதாக நான் கண்ட கனவு என் விருப்பம் நிறைவேற்றமாக எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

நீண்ட உரையாடலுக்குப் பிறகு ஃப்ராய்ட் கொடுத்த விளக்கம்: “உன் பிரிந்து போன காதலன் மூத்த மகன் ஓட்டோ இறந்தபோது அனுதாபம் தெரிவிக்க நேரில் வந்திருந்தான். உனக்கு மீண்டும் அவனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் இரண்டாவது மகன் இறந்தது போன்ற கனவை உருவாக்கியது”.

ஒரு பெண் நான்கு வயதில் ஒரு கனவு காண்கிறாள். அது திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது.  அவளுடைய கனவில் அவளுடைய சகோதர சகோதரிகள் ஒரு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திடீரென்று சிறகு முளைத்து பறந்து சென்று விடுகின்றனர்.

அடிப்படையில் இது அந்தக் குழந்தையின் விருப்ப நிறைவேற்ற கனவுதான். அந்தக் குழந்தை பெரியவர்களிடம் இறப்பிற்குப் பின் என்னாகும் என்று கேட்டதற்கு இறந்தவர்கள் சிறகு முளைத்து தேவதைகள் ஆகிவிடுவார்கள் என்று விளக்கமளிக்கப்பட்டது.

அந்தக் குழந்தை தனக்கு போட்டியாக இருக்கும் சகோதர சகோதரிகளின் மீது வெறுப்புக் கொண்டிருந்ததால் அவர்கள் இறக்க வேண்டும் என்ற விருப்பம் தான் கனவு மூலமாக நிறைவேறியுள்ளது. பெரியவர்களுடைய அகராதியில் இறப்பு என்பதற்கு என்ன பொருளோ அதே பொருளை குழந்தைகளின் அகராதியில் இறப்பு என்பது தருவதில்லை. அது சார்ந்த வேதனை, துக்கம், பயம் எதுவுமே குழந்தைகள் உலகம் அறியாதது.

இப்படி ஏராளமான விளக்கங்கள் நிறைந்தவை தான் இந்த புத்தகம்.

ஃப்ராய்ட் எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் செக்ஸ் தான் என்று முடிவு கட்டினார். “அவர் ஆய்வு செய்த மனங்கள் எல்லாம் மனநோயாளிகளின் மனங்கள். அதை வைத்து ஒட்டுமொத்த மனித குலமும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இது உண்மை அல்ல” என்று பின்னால் பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபிக்கின்றனர்.

 பிராய்ட் “தான் சார்ந்து இருக்கக்கூடிய வர்க்கத்தின் குணாம்சத்தை பிரதிபலிக்கிறார் என்று எரிக் ஃப்ரம் என்ற பேரறிஞர் The Greatness and Limitations of Freud என்ற தனது நூலில் விளக்குகிறார். 1920களில் ஃபிராய்டு எழுதிய Beyond the Pleasure Principle & The Ego and the Id நூல்கள் பாலுணர்வு என்ற வட்டத்திலிருந்து அவர் வெளிவர முயன்றதை காட்டுகிறது என்று இந்த நூலிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த நூலை மிக எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மொழியாக்கம் செய்த திரு. நாகூர் ரூமியும், நூலை வெளியிட்ட பாரதி புத்தகாலய நிர்வாகிகளும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

2 comments

  1. இம்மாதிரியான அறிவியல் சார்ந்த புத்தக அறிமுகம் என்பது ஒவ்வொரு வாரமும் வெளிவந்தால் அனைவருக்கும் நன்மை பயக்கும். அந்த வகையில் இந்த நூல் அறிமுகத்தை எளிய தமிழில் வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  2. சிறப்பான நூல் அறிமுகம். வாழ்த்துக்கள்.

Comment here...