மத்திய வங்கி டிஜிட்டல் பணம் – இன்றைய தேவை

ஜேப்பி

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் (Central Bank Digital Currency) என்றால் என்ன?

ஒரு நாட்டின் நாணயத்தை, பணத்தை உலோகத்தில் / பேப்பரில் தயாரித்து வெளியிடுவதும், அந்தப் பணத்துக்கு உத்தரவாதம் அளிப்பதும், அந்த நாட்டின் மத்திய வங்கியின் (நமது நாட்டை பொறுத்தவரை மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின்)  பிரதான வேலை.

இதே பணத்தைப் பேப்பரில் அச்சடித்து வெளியிடுவதற்கு பதிலாக, “மொபைல் / டிஜிட்டல் பணப்பை”களாகவோ (mobile / digital wallets) அல்லது   “மெய் நிகர் கணக்கு”களாகவோ (virtual accounts) வங்கிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அதே உத்தரவாதத்துடன் மத்திய வங்கி வெளியிட்டால், அது “மத்திய வங்கி டிஜிட்டல் பணம்” (CBDC – Central Bank Digital Currency) என்றழைக்கப்படும்.

மத்திய வங்கி டிஜிட்டல் பணம்தேவையா?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அதன் வளர்ச்சியில், வீழ்ச்சியில், பணப் பரிவர்த்தனையும், அதற்குப் பயன்படும் அரசால் வெளியிடப்படும் பணமும், அதன் சுழற்சியும், மொத்த பண மதிப்பும் பெரும் பங்கு ஆற்றுகின்றன.

அரசால் வெளியிடப்படும் பணத்துடன் கூட பிட்காயின் போன்ற அரசு சாராத கிரிப்டோ டிஜிட்டல் பணமும் பொருளாதாரத்தில் இணையும் பொழுது பல பாதிப்புகள் ஏற்படும். எனவே கிரிப்டோ பணத்திற்கு ஒரு மாற்று ஏற்பாடு தேவைப் படுகிறது.

”ஃபேஸ்புக் நிறுவனம் “லிப்ரா” என்ற பெயரில் ஸ்டேபிள்காயின் (Stablecoin என்பது ஊக வணிகத்திற்கு ஆளாகாமல் மாறாத மதிப்பு கொண்ட கிரிப்டோ பணம்) வெளியிடப் போவதாக அறிவித்த பின், உலகத்தின் பல மத்திய வங்கிகள் விழித்துக் கொண்டன; 80 சதவீதத்திற்கு மேலான மத்திய வங்கிகள் தாங்களே “டிஜிட்டல் பணம்” வெளியிடுவதற்கு ஆராய்ச்சிகளும் முனைப்புகளும் செய்துள்ளன” என்று BIS (Bank for International Settlements) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.

சீன மத்திய வங்கியான Peoples’ Bank of China  நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து e-CNY என்ற “டிஜிட்டல் யுவான்” நாணயத்தை சீனாவின் பல பகுதிகளில் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தி நடைமுறையாக்கி உள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி டிஜிட்டல் பணம் மூலம் இந்தக் கொடுக்கல் வாங்கல்களை மேலும் பாதுகாப்பாக நடைமுறைப் படுத்தலாம், எளிதாக்கலாம், துரிதமாக்கலாம், பரிவர்த்தனைச் செலவுகளைக் குறைக்கலாம். பணக்கொடுப்பு சரிபார்ப்பு (Settlement Reconciliation) தேவைப்படாது. பேப்பர் பண வெளியீட்டுச் செலவுகளையும் அதன் இதர பாதிப்புகளையும் குறைக்கலாம். எனவே மத்திய வங்கி டிஜிட்டல் பணம் இன்றைய காலத்தின் தேவையே.

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் யாருக்காக வெளியிடப்படும்?

வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக மொத்த (wholesale) வடிவிலும், மற்ற நிறுவனங்கள், பொது மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக சில்லறை (retail) வடிவிலும், “மெய் நிகர் கணக்குகள்”, “மொபைல் / டிஜிட்டல் பணப்பைகள்” வடிவங்களில் மத்திய வங்கி டிஜிட்டல் பணம் வெளியிடப்படலாம்.

ஏற்கனவே, “டிஜிட்டல் பணப்பைகள்” (Digital Wallets) பயன்பாட்டில் உள்ளன. வங்கிக் கணக்குகளில் பேப்பர் பணம்எடுக்காமல் கூட ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள் பணப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதற்கும் மத்திய வங்கி டிஜிட்டல் பணத்திற்கும் என்ன வேறுபாடு?

வங்கிக் கணக்குகளில், “மொபைல் / டிஜிட்டல் பணப்பை”களில் இருக்கும் பணத்திற்கு அந்த வங்கி அல்லது மொபைல் நிறுவனம் பொறுப்பு. ஒருவேளை அந்த வங்கியோ, நிறுவனமோ திவால் ஆகி விட்டால், நஷ்டமான பணம் திரும்பிக் கிடைக்க உத்திரவாதம் கிடையாது. மத்திய வங்கி பொறுப்பு ஏற்காது.  அரசு வங்கிகள் திவாலாகாது என்பதால், அவற்றின் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு உண்டு.

பல வங்கிகள், பல நிறுவனங்களின் பணப்பைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனை நடக்கும் பொழுது உடனடி பட்டுவாடா / செட்டில்மெண்ட் இல்லாத பொழுது பரிவர்த்தனை நஷ்டங்கள் (Counterparty Risk) வரலாம்.

ஆனால், “மத்திய வங்கி டிஜிட்டல் பணம்”, பேப்பர் பணத்தைப் போல, ஒரு லீகல் டெண்டர் (Legal Tender) அதாவது  சட்டபூர்வமான பணம். இதற்கு மத்திய வங்கி உத்திரவாதம் வழங்கி பொறுப்பு ஏற்கும். பரிவர்த்தனை நஷ்டங்கள் (Counterparty Risk) வராது.

தற்போது, “மொபைல் / டிஜிட்டல் பணப்பை”களை யார் வேண்டுமானாலும் அறிமுகப் படுத்தலாம். ஆனால், “மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தை” அரசின் சார்பாக மத்திய வங்கி மட்டுமே வெளியிட முடியும். மத்திய வங்கி நேரடியாக இதைப் புழக்கத்தில் விடலாம். அல்லது, அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூலமாக புழக்கத்தில் விடலாம்.

“மத்திய வங்கி டிஜிட்டல் பணம்” வைத்திருப்பவர்களுக்கு, அதன் மூலம் “கொடுக்கல் வாங்கல்”, “பணப்பட்டுவாடா” செய்வதற்கு வங்கிக் கணக்குகளின் தேவை இருக்காது.

தற்போது டிஜிட்டல் பணப்பைகள் வெளியிடும் நிறுவனங்கள்  முறையான வாடிக்கையாளர் அடையாளங்களைப் (KYC) பெற்றுத்தான் செயல்படுகின்றனவா என்பதைக் கூறுவது கடினம். வாடிக்கையாளர் தரவுகளை விற்று காசாக்குகிறார்களா என்ற சந்தேகமும் உள்ளது. அதே போல, தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும் கணினிகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பதும் தெரியாது. மத்திய வங்கிகள் டிஜிட்டல் பணப்பை வெளியிடும் பொழுது இந்த விஷயங்களைக் கணக்கில் கொண்டு பாதுகாப்பான சேவை வழங்க முடியும்.

பல நிறுவனங்கள் டிஜிட்டல் பணப்பை சேவைகளை வழங்கும் பொழுது, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணப்பைகளை உபயோகிக்கலாம். மத்திய வங்கி டிஜிட்டல் பணப்பை சேவை மூலம் ஒரு நபருக்கு ஒன்று எனக் கட்டுப்படுத்த முடியும்.

பல நிறுவனங்கள் டிஜிட்டல் பணப்பை சேவைகளை வழங்கும் பொழுது, அந்தப் பரிவர்த்தனைத் தரவுகளை ஆராய்ந்து பொருளாதார நடவடிக்கைகளை அறிந்து கொள்வதில் மத்திய வங்கிக்கு சிக்கல்கள் இருக்கின்றன. இந்தச் சிக்கலை ம.வ.டி.பணப் பரிவர்த்தனைகள் மூலம் சமாளிக்கலாம்.

(இக்கட்டுரையின் இரண்டாம் மற்றும் இறுதி பாகம் அடுத்த இதழில் இடம் பெறும்)

4 comments

  1. இன்று மக்கள் முன் இருக்கின்ற ஒரு முக்கியமான விஷயத்தை பொருளாதார தளத்தில் இக்கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். மத்திய வங்கி தனது கட்டுப்பாட்டிற்குள் அல்லது ஆளுமைக்குள் டிஜிட்டல் பண வர்தனையை கொண்டு வர வேண்டும் என்பது ஒரு சரியான கண்ணோட்டமே

  2. சாதாரண மனிதன் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயத்தை எளிமையாக புரிய வைப்பதற்கு எடுத்த முயற்சிக்கு கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்.

  3. Good attempt to explain. The positive and negative features are to be explained. The real problem comes in currency trading. There is no Currency Exchange as such;. but only LIBOR rate governs trading. It is a high risk business and any sovereign currency can be made an useless (e)paper, if permitted to be traded as done in the case of crypto. its a very complex subject. Things are in the initial stages of metamorphosis. But the changes are inevitable. Strong currencies of developed nations are transforming into DCs. Lets see what happens.

  4. The necessity and benefits of issuance of digital currency only by the central bank of a country are brought out well..tough subject dealt in simple terms..well done!

Comment here...