வங்கி ஊழியர்களை இழிவாக பேசிய திரு.குருமூர்த்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நமது நிருபர்

2022 மே 8 ஆம் தேதி, துக்ளக் ஆண்டு விழாவில் அரசு வங்கிகளுக்கு தலைமை வகிக்கும் ஒன்றிய நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களின் முன்னிலையிலேயே ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவின் உறுப்பினர் திரு.குருமூர்த்தி, வங்கி அதிகாரிகளையும், ஊழியர்களையும் கழிசடைகள் என்று இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனை நிதி அமைச்சர் அவ்விழாவிலேயே கண்டிக்காதது வங்கி ஊழியர்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கி உள்ளது.

வங்கி ஊழியர்களின் கோபாவேசத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சென்னை தி.நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளை முன்பாக சக்தியான ஆர்ப்பாட்டத்தை மே 19ஆம் தேதி மாலை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாட்டின் தலைவர் தோழர் தி. தமிழரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜி. கிருபாகரன், ஓய்வு பெற்றோர் சங்கப் பொதுச்செயலாளர் கே.சந்திரசேகர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரு.குருமூர்த்தி உடனடியாக தான் பேசியதை திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல் ஒன்றிய அரசு அவரை ரிசர்வ் வங்கியின் இயக்குநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

அவர் பேசியது ஏதோ வாய் தவறி பேசியதாக கருத முடியாது. ஏனெனில் அவரே பின்னர் ஏஐபிஇஏ சங்கப் பொதுச்செயலாளர் தோழர் சி.எச்.வெங்கடாசலம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் பேசியது சரி என்று வாதிடுகிறார். எனவே இது வேண்டுமென்றே திட்டமிட்டு பேசப்பட்ட பேச்சாகத்தான் கருத வேண்டியுள்ளது.

அவர் இன்று வரை மன்னிப்பு கேட்காத பின்னணியில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு இன்று (மே 20) கூடி மே 26 அன்று சென்னையில் ஒரு சக்திமிக்க ஆர்ப்பாட்டத்தை ஒன்பது வங்கிச் சங்கங்களின் சார்பாக நடத்துவது என்று தீர்மானித்துள்ளது.

2 comments

  1. சற்று நேரம் கடந்து இருந்தாலும் இவ்விஷயத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் எதிர்வினையை பாராட்டவேண்டும். திரு குருமூர்த்தி அவர்கள் தனது அன்றைய ( 8 5 22) இழிவான பேச்சுக்கு மன்னிப்பு கேட்பார் என்று அனைத்து வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றார்கள். அவர் தனது பொதுத்துறை வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பற்றிய கருத்தை / சித்தாந்தத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  2. இத்தகைய மனிதர்களுக்கு ஊக்கம், தைரியம் தரும் சக்திகளுக்கு எதிராக சக்தி மிக்க இயக்கங்களை நாடு முழுவதும் நடத்த வேண்டும்.

Comment here...