சென்ட்ரல் வங்கியில் மே 30, 31 வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

D.ரவிக்குமார்

சென்ட்ரல் வங்கியில் இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் வங்கி வாரி ஒப்பந்தங்களை மீறி போடப்பட்டுள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை எதிர்த்தும், 600 வங்கிக் கிளைகளை மூட எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்தும், பணம் சம்பந்தப்பட்ட நிரந்தர வங்கிப் பணிகளை வெளியாட்களுக்கு கொடுப்பதை கண்டித்தும், தனியார்மய முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும் அவ்வங்கியில் உள்ள AIBEA, BEFI, INBEF, NCBE, NOBW சங்கங்களோடு இணைக்கப்பட்ட ஐந்து தொழிற்சங்கங்கள் இணைந்து மே மாதம் 30 மற்றும் 31, 2022 இரண்டு நாள் வேலைநிறுத்தம் உட்பட போராட்ட இயக்கங்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தன.

சங்கங்களின் கோரிக்கை மீது 24.05.22 அன்று மும்பை துணை தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பாக வைக்கப்பட்ட எந்த ஆலோசனையையும் வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாத பின்னணியில், சமரச பேச்சுவார்த்தை 27.05-22 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு நிர்வாகத்திற்கும், AIBEA இணைப்புச் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,

  • உள்ளூருக்குள் போடப்பட்டுள்ள மாறுதல் உத்தரவுகள் தொடரும்.
  • ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு போடப்பட்டுள்ள மாறுதல் உத்தரவுகள், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் விண்ணப்பங்களின் பேரில் தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் மறுபரிசீலைனை செய்யப்படும்.
  • வேலைநிறுத்த அறிவிப்பில் உள்ள மற்ற கோரிக்கைகள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நடந்து முடிந்த பேச்சு வார்த்தையில் இடமாற்றல் என்ற முக்கிய கோரிக்கை மீது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாலும், அது தொடர்ந்து இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு வழி வகுத்துள்ளதாலும் மே 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் நடைபெறவிருந்த அனைத்து சங்க வேலை நிறுத்த அறைகூவல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்ட்ரல் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆனாலும் தனியார்மயம், வெளிப்பணி, கிளைகள் மூடுதல் ஆகிய அபாயங்களை கூட்டாக எதிர் கொண்டு முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது என்று கூட்டமைப்பு ஊழியர்களை அறிவுறுத்துகிறது.

2 comments

  1. வங்கி நிறுவனங்களை ஊழியர்களின் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்தை வங்கி தொழிற்சங்கங்கள் கையிலெடுக்க வேண்டிய காலமாக மாறியுள்ளது. வங்கி நிர்வாகங்களும் ஒப்பந்தங்களை மீறி ஊழியர்களுக்கு எதிராக பலவற்றை நடைமுறைப்படுத்தும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பேச்சுவார்த்தையின் மூலம் இப்போராட்டம் குட்டி வைக்கப்பட்டிருந்தாலும் பிரச்சனையில் குறித்த உடனடி தீர்வை நோக்கி ஊழியர்களும் அனைத்து தொழிற்சங்கங்களும் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதை நோக்கி தொழிற்சங்கங்கள் பயணிக்க வேண்டும்

  2. ஒப்பந்தங்களை தொடர்ச்சியாக பல்வேறு வங்கி நிர்வாகங்கள் மீறுகின்றன. இதற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட போராட்டங்களை சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

Comment here...