மத்திய வங்கி டிஜிட்டல் பணம் – இன்றைய தேவை

(இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதி)

ஜேப்பி

மத்திய வங்கி டிஜிட்டல் பணத்திற்கு வட்டி உண்டா?

கையிலோ பையிலோ இருக்கும் பேப்பர் பணத்திற்கு வட்டி கிடையாது அல்லவா. அதே போல, அதன் டிஜிட்டல் வடிவான மத்திய வங்கிப் பணத்திற்கும் வட்டி இருக்காது என்றே தெரிகிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி,  பணம் செலுத்த உதவும் பேடிஎம் போன்ற mobile / digital walletகளில், கார்டுகளில் (Prepaid Instruments) போடப்பட்டு இருக்கும் பணத்திற்கு தற்பொழுது வட்டி எதுவும் கிடையாது என அறிவோம்.

சீனா, தான் அறிமுகப் படுத்தியிருக்கும் e-CNY என்கிற சீன “மத்திய வங்கி டிஜிட்டல் பணப்பை”யில் இருக்கும் பணத்திற்கு வட்டி கிடையாது என அறிவித்துள்ளது.

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் வெளி வந்தபின், பேப்பர் பணம் இருக்காதா?

பரவலாக அனைத்து மக்களும் டிஜிட்டல் பணம் பயன்படுத்தும் காலம் வரை பேப்பர் பணமும் புழக்கத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி (US Federal Reserve) இது பற்றிய அறிக்கை ஒன்றில் பேப்பர் பணமும் புழக்கத்தில் இருக்கும் எனக் கூறுகிறது. நமது நாட்டில் இது எப்படி அமலாக்கப்படும் என்பது பற்றி விளக்கப் படவில்லை.

பேப்பர் பணத்தை பொது மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத் தேவைகளுக்காக டிஜிட்டல் பணமாக மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், டிஜிட்டல் பணத்தை பேப்பர் பணமாக மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு தற்போது பதில் இல்லை.

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் மூலம் Financial Inclusion அதிகரிக்குமா?

Financial Inclusion என்பது வங்கிக் கணக்கு, குறைவான செலவில் பணப் பரிமாற்றம், சமூகப் பாதுகாப்பு மற்றும் எளிய கடன் உதவி ஆகிய மூன்று அடுக்குகளை உள்ளடக்கியது. மத்திய வங்கி டிஜிட்டல் பணம் பணப்பை உபயோகிப்பவருக்கு வங்கிக் கணக்கு தேவைப்படாது இருக்கலாம். இதன் மூலம் பணப்பரிமாற்றச் செலவு குறைந்தாலும் அதன் பலன் வாடிக்கையாளருக்கு கிடைக்குமா என்பது தெரியாது. சமூகப் பாதுகாப்பு, கடன் உதவி ஆகியவற்றை டிஜிட்டல் பணத்தால் வழங்க முடியுமா?

டிஜிட்டல் பணப்பை பெறுவதற்கும் அடையாள ஆவணங்கள் தேவை. அடையாள ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கூறும் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD Small a/c) போல கட்டுப்பாடுகள் கொண்ட டிஜிட்டல் பணப்பை கிடைக்குமா?

வேலை இன்மை, அத்துக் கூலி, குறைந்த கூலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு ஒரு வேளை உணவிற்கும் அன்றாடம் அல்லாடும் கோடிக்கணக்கான ஏழைகள் கணினிக்கும், கைபேசிக்கும் பணத்திற்கு எங்கே போவார்கள்?  

பல இந்திய கிராமங்கள் தற்பொழுதும் தரமான, நிரந்தரமான மின் வசதி, இணைய வசதி இன்றி இருக்கும் பொழுது, டிஜிட்டல் பணம் எப்படிப் பரவலாகும்?  “டிஜிட்டல் பிளவு” தான் அதிகமாகும்.

ஆக, டிஜிட்டல் பணம் ஏழைகள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப் போவதாகத் தெரியவில்லை. மாறாக,  பெரிய நிறுவனங்கள் பேப்பர் பண நிர்வாகச் செலவுகளைத் தவிர்த்து செலவின்றி மேலும் லாபம் ஈட்ட டிஜிட்டல் பணம் உதவும்.

கிரிப்டோ பணமும் மத்திய வங்கி டிஜிட்டல் பணமும் ஒன்றா?

கிரிப்டோ பணமும், மத்திய வங்கி டிஜிட்டல் பணமும் ஒன்றில்லை. கிரிப்டோ பணம் தனியாரால் அரசு தலையீடில்லாமல் உருவாக்கப்படுகிறது. மத்திய வங்கி டிஜிட்டல் பணம் அரசு சார்ந்த மத்திய வங்கியால் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.

கிரிப்டோ பணத்தின் மதிப்பு ஊக வணிகத்தால் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகும். கிரிப்டோ பணங்களை வாங்கி விற்பது போல இல்லாமல் மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தை வாங்கி விற்க தடை போட முடியும். அவ்வாறு தடை செய்யும் பொழுது, மத்திய வங்கி டிஜிட்டல் பண மதிப்பு ஊக வணிகத்திற்கு ஆளாகாததால் ஏறி இறங்காது. ஆனால், பணவீக்க, பணவாட்ட பாதிப்புகள் வழக்கம் போல இருக்கும்.

கிரிப்டோ பணங்களை யார் உருவாக்குகிறார்கள், விற்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதும் பணப் பரிமாற்றங்களும் ரகசியமாக உள்ளது.  இதன் மூலம் குற்றச் செயல்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பணப்பட்டுவாடா கண்காணிப்பின்றி நடக்கும். நாட்டின் பணக் கட்டுப்பாட்டிலும், பொருளாதாரத்திலும், நிதி ஸ்திரத்தன்மையிலும் பாதிப்புகள் உருவாகும். மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தை வைத்து அநாமதேயப் பரிவர்த்தனை செய்வதை, குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துதைத் தடுக்க, கண்காணிக்க ஏற்பாடுகள் செய்ய முடியும்.

மத்திய வங்கி டிஜிட்டல் பணம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வங்கியால் வெளியிடப்பட்டு கண்காணிக்கப்படுவதால், பணக் கட்டுப்பாடு (Monetary Control) மத்திய வங்கியின் வசம் இருக்கும்.

கிரிப்டோ பணங்களுக்கு நாடு, எல்லை கிடையாது. மத்திய வங்கி டிஜிட்டல் பணத்தை எந்த நாட்டுப் பிரஜை வைத்துக் கொள்ளலாம் என்பதைக் கட்டுப் படுத்தலாம். அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை அந்நிய நாட்டு மக்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம்.

மத்திய வங்கி டிஜிட்டல் பணப்பை பாதுகாப்பானதா?

வாடிக்கையாளர் தகவல்கள், பரிவர்த்தனை தகவல்கள் மற்றும் அவர்கள் தனி உரிமைகள் காக்கப்படுமா,  மோசடிகள் தடுக்கப்படுமா என்பவை இதற்காக உருவாக்கப்படும் சட்டம், சட்டப் பாதுகாப்பு, பயன்படுத்தப்பட இருக்கும் தொழில் நுட்பம், வாடிக்கையாளரின் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைச் சார்ந்தவை. கற்றறிந்த வாடிக்கையாளர்கள் பலரும் மோசடிகளில் பணம் இழக்கின்ற இன்றைய சூழலில், மத்திய வங்கி டிஜிட்டல் பணம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கும், மோசடிகளால் ஏற்படும் இழப்புக்கு மத்திய வங்கி பொறுப்பு ஏற்குமா என்ற சந்தேகங்களுக்கு ரிசர்வ் வங்கிதான் விடையளிக்க வேண்டும்.

2 comments

  1. இதைப் பற்றிய
    கேள்விகள் சந்தேகங்கள் தான் அதிகம் உள்ளது. டிஜிட்டல் பணம் என்றால் என்ன. அதன் பயன்பாடு எப்படி இருக்கும். யாருக்கு பயன்பாடு உண்டு. பாமர மக்கள் கைபேசியை பயன்படுத்த எப்படி பழகிக் கொண்டார்கள். இதில் கட்டாயம் இல்லை. அதுபோல் இதை பயன்படுத்த முடியுமா. சாதாரண மக்கள், பணம் என்பதை பார்த்திராத ஏழைகள் ஆகியோருக்கு வேறு வழிகள் மூலம் எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து மேலும் ஆராய வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் இழப்பு குறித்த அக்கறை தேவை.

  2. அருமையாக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அடிதட்டு மக்களை புறந்தள்ளியே இந்த ஏற்பாட்டை இந்திய நிதி நிர்வாகம் முன்னெடுக்கிறது.

Comment here...