பணி நிரந்தரம் என்னும் பெருங்கனவு

பரிதிராஜா.இ

இருபது வருடங்களுக்கு முன்னர் கிராம வங்கிக் கிளைக்குள் நுழைபவர்,  வெள்ளைச் சட்டையும், வெள்ளை பேண்ட்டும் தரித்த ஊழியர் ஒருவர் தன்னை  வரவேற்பதை, என்ன தேவை என்று விசாரிப்பதை அனுபவித்திருப்பார். ப்யூன், மெசஞ்சர், அட்டண்டெண்ட் போன்ற பல்வேறு பெயர்களுடன் புழங்கிய அந்த மனிதர்கள் நம் கண் முன்னே மறைந்துவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களின் இருக்கைகளில் இன்று புதிய மனிதர்கள், அதுவும் இளைஞர்களாய்.முன் இருந்தவர்கள் போன்று சீருடை ஏதுமில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் வங்கிக்கு வரும் முதல் நபர்களாகவும், நாளின் முடிவில் கடைசியாக கிளம்பும் நபர்களாகவும் இருக்கிறார்கள். கிளையில் மேனேஜரோ, ஆஃபிஸரோ, கேஷியரோ யாராவது ஒருவரால் தொடர்ந்து இவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்ட படியே இருக்கிறது.

இவர்களும் நம்மை வரவேற்று, தங்களால் ஆன உதவியை நமக்கு செய்து அனுப்புகிறார்கள். இவர்களிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தால், அவர்கள்  தன்னை தினக்கூலி, டெம்ப்ரவரி ஸ்டாஃப்என்கிறார்கள். எவ்வளவு காலமாக இப்படி? என்றால், எட்டு பத்து ஆண்டுகளாக இப்படித்தான் என்னும் ஆற்றாமை நிரம்பிய வார்த்தைகள் காதுகளில் வந்து விழுகின்றன.

கிராம வங்கிகள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வங்கிகள் ஆயிற்றே! இங்கு எப்படி டெம்ப்ரவரியாக, அதுவும் பல வருஷங்களாக? கேள்விகள் தொடர்கின்றன…நாட்டிற்கே சட்டங்கள் போட்டு பரிபாலனம் செய்யும் அரசின் நிர்வாகம், வங்கியை நிர்வகிப்பதில் பல்லிளித்து நிற்குமா? ஆம்..‌நிற்கிறது என்பதே நிதர்சனம்.

தற்காலிக வேலை என்னும் சிம்னி விளக்கு

நாடெங்கிலும் 43 கிராம வங்கிகள் இருக்கின்றன. அந்த கிராம வங்கிகள் அனைத்திலும் Office Attendantஎன்ற பதவியின் பெயரும், அதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால், ஆட்கள் தான் இல்லை. நிறுவனம் ஒன்றின் பெரும்பாலான ஊழியர்களை அத்துக் கூலிகளாக வைத்திருக்க ஆலோசனை சொல்லும் நவீன கால பொருளாதார நிபுணர்களுக்கு கிராம வங்கி நிர்வாகங்கள் தான் முன்னோடி போலும்.

படித்துவிட்டு, உள்ளூர் வேலைவாய்ப்பை நம்பி வாழும் இளைஞர்களை சொற்ப கூலிக்கு வேலைக்கு அமர்த்தும் சாமர்த்தியமான வழக்கத்தை கிராம வங்கி நிர்வாகங்கள் கையில் வைத்திருக்கின்றன. தான் வங்கியில் வேலை செய்வதாக, வேலைக்கு வந்தவர் மட்டும் தான் சொல்லிக் கொள்ளலாம். ”எந்தவொரு அத்தாட்சியும் விட்டுவைக்க மாட்டோம்; பணிப் பாதுகாப்பு இல்லை;வரையறுக்கப்பட்ட வேலை நேரம் இல்லை; சட்டப்படியான சம்பளம், போனஸ், லீவுகள் என எதுவும் கிடையாது. கொடுப்பதை வாங்கிக்கொண்டு, கேள்வி கேட்காமல் வேலை செய்ய வேண்டும்” என்பதே நிர்வாகங்கள் இவர்களுக்காக வகுத்திருக்கும் பணி நிலமை. தங்களின், தங்கள் குடும்பத்தின் இருள் சூழ்ந்த எதிர்காலத்திற்கு இந்த ”தற்காலிக வேலை” என்னும் சிம்னி விளக்கைக் கொண்டு எவ்வளவு வெளிச்சத்தை தந்துவிட முடியும்? விரக்தியும், சலிப்பும் மேலிட்ட வாழ்க்கை தான் அவர்களுடையதாக இருக்கிறது.

நம்பிக்கை கீற்று

வானம் எல்லா நாட்களிலும் வெறிச்சோடி இருப்பதில்லையே! நிராதரவான இவர்களை அணி திரட்டும் மகத்தான பணியை அகில இந்திய கிராம வங்கி ஊழியர் சங்கம் செய்கிறது. வங்கி வாரியாக இது போல் தற்காலிக/ தினக்கூலி தொழிலாளர்களின் விவரங்களைத் தொகுத்து அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருகிறது. அத்தகைய போராட்டங்களின் விளைவாக டெல்லியில் மத்திய தொழிலாளர் தலைமை ஆணையர் முன்பு தொழில்தவா ஏற்படுத்தப்பட்டு தற்காலிக ஊழியர்களாக பாடுபட்டு வருபவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பாதையொன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தென் மாநிலங்கள் வழி காட்டுகின்றன

இந்திய அளவில் இந்த முன்னெடுப்புகள் ஒருபக்கம் இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநில  கிராம வங்கிகளில் இருக்கும் தற்காலிக ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சிகளை அந்தந்த வங்கிகளில் இருக்கும் AIRRBEAவின் உறுப்பு சங்கங்கள் முன்னெடுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் 35 பேருக்கும், கர்நாடகத்தில் 164 பேருக்கும், கேரளத்தில் 386 பேருக்கும், தெலுங்கானாவில் 191 பேருக்கும் நீண்ட நெடிய சட்டப்போராட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த களப் போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் தற்காலிக தளைகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. இந்த முற்போக்கு முயற்சிகள் இன்றளவும் தொடர்ந்து வருகின்றன.

அடங்காத பசியோடு  லாபக் கணக்குகளை பார்த்தபடி,AC ரூம்களில் உட்கார்ந்திருக்கும் உயர் மட்ட நிர்வாகிகளுக்கு, தொழிலாளர்கள் ஒன்றுபட்டு, உரிமை கேட்டு, எழுப்பும் முழக்கங்களின் உஷ்ணம் வியர்க்க வைக்கிறது. மறுபுறம் போராளிகளின் வியர்வையின் துளியில் ஈடேறுகின்றன பலரின் பணிநிரந்தரம் என்னும் பெருங்கனவுகள்….

3 comments

  1. மிக சிறப்பு…. கட்டுரை யில் கருத்துக்களும், வார்த்தைகளும் மட்டுமல்ல சங்கத்தின் வலிமையும் வெளிப்படுகிறது…

  2. இந்திய தொழிலாளி வர்க்கத்தை அத்து கூலிகளாக மாற்றக்கூடிய நிர்வாகங்களின் செயல்களுக்கு எதிரான பல போராட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்க வேண்டிய தேவை இருப்பதை உணர வேண்டும். அந்த வகையில் கிராம வங்கிகளில் நடந்தேறும் தொழிலாளி நலன் விரோத போக்கிற்கு எதிராக அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏந்தி நாம் அனைவரும் போராட வேண்டும். கிராம வங்கிகளில் நடக்கும் தொழிலாளர் விரோத செயல்களை கண்டித்து வெளிக்கொணர்ந்த இந்த பதிவின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  3. ஆகப்பெரிய பெரும்பான்மை பேசும் சங்கங்களே பாரா முகமாக இருக்கும் ஒரு முக்கயமான உழைப்பு சுரண்டலுக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு செவ்வணக்கம்.

Comment here...