ஆயிரம் கைகள் மறைத்தாலும் இந்த நிலவும் மறைவதில்லை!

சே.இம்ரான்

இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான சிலைகள் கொண்டவராகவும்,அதிக சிலை சிதைப்புகளுக்கு உள்ளாகுபவராகவும் ஒருசேர உள்ளவர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர்.எதிர்ப்பவர்கள் கூட எளிதில் அவரை புறந்தள்ளி கடந்து விட முடியாது என்பதின் வெளிப்பாடே அத்தனைசிலை சிதைப்புகளும்.பீமாராவாக இருந்த அவரை அம்பேத்கராக மாற்றியதின் பின்னணியில் இருந்த மிக முக்கியமான பெண்மணியை,அவரின் மனோதிடத்தை அம்பேத்கரை உள்வாங்கியவர்கள் கூட புறந்தள்ளி கடந்து சென்றது தான் வரலாற்று சோகம்!

‘பீமாராவாக இருந்த என்னை டாக்டர் அம்பேத்கராக மாற்றியவர்’என்று ஒற்றை வரியில் தன் ஆளுமை கட்டமைப்பின் மீது தன் மனைவியின் தாக்கம் எத்தகையது என்பதைதான் எழுதிய ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.1898ல் பிறந்த ரமாபாய்க்கும்,அம்பேத்கருக்கும் 1906ஆம் ஆண்டில் திருமணம் முடிந்ததிலிருந்தே அம்பேத்கரின் லட்சிய வேட்கைக்காக குடும்ப பாரத்தை எல்லாம் ரமாபாய் ஒருபுறம் சுமக்க,மறுபுறம் தன் கல்வியின் மூலம் ரமாபாய்க்கு எழுத்தறிவையும்,சமூகத்தையும் அம்பேத்கர் கற்றுக் கொடுக்க என இவ்வாறே இருவரின் பரஸ்பர அன்பும் தொடங்குகிறது.

அம்பேத்கருக்கு எல்லாமுமாக இருந்த அவரது தந்தை சுபேதர் ராம்ஜி சக்பால் இறந்த பிறகு,அம்பேத்கரின் கல்வி தடைபடாமல் தொடர குடும்பத்தின் மொத்த பொருளாதார பாரத்தையும் தான் சுமக்கத் துவங்குகிறார் அந்த 16வயது சிறுமி!
அம்பேத்கர் அமெரிக்காவிலும்,லண்டனிலும் டாக்டர் பட்டங்களும்,பாரிஸ்டர் பட்டமும் பெற்றுக் கொண்டிருக்கும் போது,ரமாபாய் இந்திய சாலையோரங்களில் சாணி அள்ளிக்கொண்டும், விறகு சுமந்து கொண்டும் பல மைல்கள் நடந்து கொண்டிருந்தார்.‘ரூபாயின் சிக்கல்’ என்ற உலகப் பிரசித்த ஆய்வறிக்கையை அம்பேத்கர் சமர்ப்பித்த தருணங்களில் ரமாபாய் அதே ரூபாய் இல்லாத சிக்கலில் பிணியிலும்,பசியிலும் தன் 4 குழந்தைகளை அடுத்தடுத்து பறிகொடுத்தார்.

”அவர் அங்கே பாரிஸ்டர்;இவர் இங்கே இப்படி சாணி அள்ளணுமா?”என்று ஊரார்கள் கேட்பதைத் தவிர்க்க,ஊர் மக்கள் கண் விழிக்கும் முன்பே சாணி அள்ளப் புறப்படுகிறார் அவர்.அம்பேத்கருக்கு சற்றும் குறைவில்லா அதே மனோதிடம்!

”கங்காதரை வங்கிக்கு அழைத்து சென்று வங்கி நடைமுறைகளை கற்றுக் கொடு”என்ற அம்பேத்கரின் கடிதத்திற்கு ”கங்காதர் சிறப்பாக வங்கி நடைமுறைகளை கற்றுக் கொள்கிறான்” என்று ரமாபாய் பதில் கடிதம் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் கங்காதர் இறந்து ஓர் ஆண்டிற்கு பிறகே!மகன் இறந்ததை தெரிவித்தால்,கணவர் படிப்பை பாதியிலேயே விட்டு வந்துவிடக் கூடும் என்பதால் அவர் வரும் வரை தன் குடும்பத்தின் துயரையும்,வறுமையையும்,தன் பிள்ளை கங்காதரின் மரணத்தையும் தனக்குள்ளே புதைத்து வைத்திருந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ரமாபாய் பிற்காலத்தில் பி.ஹெச். வாரலே வீட்டில் தங்கியிருந்தார்.அப்போது வாரலே நடத்தி வந்த மாணவர் விடுதிக்கு அரசாங்க மானியம் நிறுத்தப் பட்டதால் மாணவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையிலும் ரமாபாய் தன்கையில் இருந்த 12 கிராம் தங்க வளையல்களை விற்றுஅவர்கள் பசியைப் போக்கினார் என்பதையெல்லாம் நாம் கொண்டாடித் தீர்த்திருக்க வேண்டாமா?

லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் செயல்பாட்டை பாராட்டி அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் முதன் முதலில் மேடையேறிய ரமாபாய் பேசியதெல்லாம் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையைப் பற்றியே இருந்ததாக அன்றைய ஜனதா இதழ் பதிவு செய்திருக்கிறது!
அம்பேத்கரை இன்று அவரது எதிரிகளும் புகழத் துவங்கியிருக்கிறார்கள்.

அப்படி ஒரு அம்பேத்கரை இந்த சமூகத்திற்கு அர்ப்பணிப்பதற்காக,அவரை தன் தோளில் இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்துசுமந்து வந்து நமக்கு சேர்த்திருக்கும் 37 வருடங்களே வாழ்ந்த ரமாபாயைப் பற்றி அம்பேத்கரை நேசிக்கும் நாம் தான் முதலில் பேசத் துவங்க வேண்டும்.
(மே 27- ரமாபாய்அவர்களின் நினைவு தினம்).

4 comments

  1. பீமாராவ் அம்பேத்கராக உருப்பெற அவரது இணையர் ரமாபாயின் பங்களிப்பை பற்றி என்னைப் போன்றோருக்கு வெளி கொண்டு வந்ததில் ஆசிரியரை மனதார பாராட்டுகின்றேன். பெண்களைப் பற்றிய பல தரவுகள் அற்ற சமூகமாகவே நாம் மாறி விட்டோமா என்ற எண்ணம் தலைகுனிய வைக்கிறது. இது போன்ற பல நல்ல விஷயங்களை தங்கள் இதழில் தொடர்ந்து வெளிக் கொணர வேண்டும்.

  2. மிக நேர்த்தியாக பேசபடாத வரலாற்றை எளிய நடையில் அளித்துள்ள கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

  3. அருமையான சிறு தொகுப்பு. இன்னும் ஏராளம் உண்டு. அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம். வாழ்த்துக்கள் ‌‌. தொடரவேண்டும்.

  4. அருமையான கட்டுரை…. ரமாபாய் குறித்து அறிய வேண்டிய தகவல்களோடு சிறப்பான நடையில் கட்டுரை வந்திருக்கிறது.

    தொடர்ந்து எழுதுங்கள் தோழர்…

Comment here...