உக்ரைனில் என்ன நடக்கிறது?

நூல் அறிமுகம்

கி.ரமேஷ்

சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று வடிவேலு பேசும்போது நாம் அனைவரும் சிரிப்போம்.  ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மை மிகவும் கொடூரமானது.  இரண்டு பேர் சண்டையிட்டால் இருவருக்கும் சட்டை கிழிவது நிச்சயம்.  அதே இரண்டு நாடுகளுக்கு இடையில் நடக்கும்போது இடையில் மாட்டிக் கொண்டு சாவது பொதுமக்கள்தான். 

கடந்தமூன்று மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடக்கும் போர் மனிதாபிமானமிக்க மக்களை பதற வைத்துள்ளது. அந்தப் போரால் பாதிக்கப்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, லட்சக்கணக்கானோர், உடைமைகளை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் புகலடைந்துள்ளனர்.  எந்த ஒரு போரானாலும் அதற்குக் காரணம் இருக்க வேண்டுமல்லவா?  இந்தக் கேள்விக்கான  ஒரு விடையை முதுகெலும்பை உறையச் செய்யும் வகையில் ஒரு சிறிய புத்தகமாக நம்மிடம் கொடுத்திருக்கிறார் இ.பா.சிந்தன்.  ‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ என்ற இந்தச் சிறிய புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

சோவியத் யூனியன் பின்னடைவு

முன்னாள் சோவியத் குடியரசின் இரண்டு அங்கங்கள் ரஷ்யாவும், உக்ரைனும். சோவியத் யூனியனின் பின்னடைவிற்குப் பிறகு ரஷ்யாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த எல்ஸ்டின் வகையறா அனைத்து சோஷலிசக் கட்டமைப்பையும் சிதைத்து நாட்டை முதலாளித்துவ பாதைக்கு இட்டுச் சென்றது. அவரிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்ட புடின் தலைமையிலான இந்த ஆட்சி தன்னை முதலாளித்துவ பாதையிலேயே வலுப்படுத்திக் கொண்டு விட்டது.

மறுபுறம் உக்ரைன். சோவியத் புரட்சியின் நாயகன் மாமேதை லெனின்தான் அதை ஒரு நாடாக உருவாக்கி, பிரிந்து போகும் உரிமையுடன் சோவியத்துடன் இணைத்தவர். 1990 களின் துவக்கத்தில் சோவியத் யூனியன் உடைந்ததும் உக்ரைனும் தன்னைத் தனி நாடாக்கிக் கொண்டது. இயற்கையில் மிகவும் வளமான நாடு உக்ரைன். இரண்டும் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டுதானே முன்னேற வேண்டும்? இடையில் என்ன பிரச்சனை?

அமெரிக்காவின் தலையீடு

இங்குதான் கடந்த சில வருடங்களாகப் பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் புவி அரசியல் வருகிறது. சம்பந்தமேயில்லாமல் அமெரிக்கா இடையில் வருகிறது. இரண்டாம் உலகப் போரில் தான் பெரிதளவு நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துக் கொண்டது அமெரிக்கா. போர் முடிந்ததும், தனது வலுவான நிலையைப் பயன்படுத்தி உலகப் பொது நாணயமாக டாலரைக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதே சமயத்தில் சோவியத் யூனியன் அதற்குப் பெரும் போட்டியாகத் திகழ்ந்தது. வெவ்வேறு காரணங்களால் சோவியத் யூனியன் உடைந்த பிறகு, மீண்டும் ஒருதுருவ ஆட்சியை உலகில் ஏற்படுத்தக் களமிறங்கியது அமெரிக்கா. தொடங்கியது புவி அரசியல்.

நேட்டோவின் விரிவாக்கம்

“முன்னாள் சோவியத் குடியரசின் நாடுகளை நேட்டோவில் இணைக்க மாட்டோம்” என்று தான் கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிராக, அவற்றினை ஒவ்வொன்றாக நேட்டோவில் சேர்த்து ரஷ்யாவைச் சுற்றி வளைக்கத் தொடங்கியது அமெரிக்கா. மத்திய கிழக்கு நாடுகள் மீது ஏதோவொரு சாக்கு கூறிப் போர் தொடுத்து ஒவ்வொரு எண்ணெய் வளமிக்க நாடாகத் தனது பிடிக்குள் கொண்டு வந்தது. அடுத்து எண்ணெய் வளமிக்க நாடு ரஷ்யா. ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் சப்ளை செய்கிறது ரஷ்யா.

அந்த எண்ணெய் சிரியா வழியாகச் சென்றது. சம்பந்தமே இல்லாமல் சிரியாவில் கலவரத்தை உண்டாக்கி அந்த வழியை அடைத்தது அமெரிக்கா. உக்ரைனில் ரஷ்யாவின் கையில் இருக்கும் ஒரே துறைமுகம் கிரீமியா. உக்ரைன் வழியாக ஐரோப்பாவுக்கு எண்ணெய்க் குழாய் அமைத்துக் கொண்டு செல்லும் திட்டம் வந்ததும், உக்ரைனைக் கலவர பூமியாக்கக் களமிறங்குகிறது அமெரிக்கா.

கம்யூனிஸ்ட் கட்சியை இல்லாமல் செய்வது, தனக்கு ஆதரவான ஆட்சியை உருவாக்குவது, வலதுசாரிகளைத் தூண்டி விடுவது, நாஜிக் குழுக்களை உருவாக்குவது என்று தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொள்வதன் மூலம் தனது ஆதிக்கத்தை விரிவாக்கி வருகிறது அமெரிக்கா. தற்போதைய உக்ரைன் அதிபரை களத்தில் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ரஷ்யாவை சுற்றி ஆயுத தளங்கள்

தொடர்ச்சியாக ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளைத் தன் பிடிக்குள் போட்டுக் கொண்டு அங்கு ஆயுத தளங்களை அமைத்து விட்டது அமெரிக்கா. ரஷ்யா கடல் மூலமாக கச்சா எண்ணெயைக் கொண்டு போக, சினந்த அமெரிக்கா, இரண்டாம் கட்ட எண்ணெய்க் குழாயை செயல்படாமல் செய்து விட்டது.

ரஷ்யாவிடம் எண்ணெய்வாங்கக் கூடாது என்று கட்டளையிட்ட அமெரிக்கா, ரஷ்யாவைப் போல் குறைந்த விலையில் கொடுக்கத் தயாராக இல்லாததாலும், ரஷ்யா பணைத்தை ரூபிளாகக் கொடுத்தாலே போதும் என்று ஏற்றதும், நேரெதிரான விளைவுகளை ஏற்படுத்தி ரஷ்யாவை வலுப்படுத்தியுள்ளன. எனவே தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைத் தூண்டி விட்டு, ரஷ்யாவைக் குத்தி விட்டு, போரைத் தொடங்க வைத்து விட்டது அமெரிக்கா.
உண்மை அறிவோம்

கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்களோ, ரஷ்யாவை மட்டுமே சாடி, உக்ரைனை உத்தமனாக்கி வருகின்றன. அதன் பின்னால் இருக்கும் பெரும் சதியை யாரும் சொல்வதில்லை. அந்த இடத்தைத்தான் இ.பா.சிந்தன் நிரப்பி இருக்கிறார். அமெரிக்கா எப்படியெல்லாம் படிப்படியாகத் தனது தலையீட்டை வலுவாக்கியது, இன்று எப்படி ஒரு போருக்கு இட்டுச் சென்று தன் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது என்ற பல்வேறு உண்மைச் செய்திகளை இ. பா. சிந்தன் கட்டம் கட்டமாகத் படம் பிடித்து காட்டுகிறார். முதுகுத் தண்டு சில்லிட்டுப் போகிறது.

பாரதி புத்தகாலயம் முன்பு வெளியிட்ட ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’, ‘வாஷிங்டன் தோட்டாக்கள்’ ஆகிய புத்தகங்களின் தொடர்ச்சியாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் முக்கியமான புத்தகம் இது. இதைப் படித்து விவாதித்து, போரில்லாத உலகத்தைப் படைக்க உரியதைச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.

பாரதி புத்தகாலயம் வெளியீடு – பக்கம் 111

விலை ரூ.100

2 comments

  1. உக்ரைன் போர் பற்றிய சிறப்பான புரிதலை தெளிவாக வழங்கியுள்ளார் கட்டுரையாளர்.

Comment here...