அந்தரங்கம் ஒருவரின் தனி உரிமையா?

பரிதிராஜா.

நேற்று நான் ஓட்டலில் சாப்பிடப் போயிருந்தேன். ஆர்டர் செய்துவிட்டு சுற்றும்முற்றும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். அடுத்த வரிசையில் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிறுவன், ஒரு எட்டு வயதிருக்கலாம், எழுந்து போய் பக்கத்து டேபிளில் சாப்பிடும் ஒருவரின் செல்போனை உற்றுப்பார்த்தான். அவன் அம்மா பதறிப்போய், சட்டென்று அவனைத் தன்பக்கம்  இழுத்து கண்டித்தார். அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பது அநாகரிகம் என்று சொல்வது என் காதில் விழுந்தது. அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பது தவறு என்ற வார்த்தை எனக்குள் நிறைய யோசனைகளை கிளறி விட்டது. எதெல்லாம் ஒருவரின் அந்தரங்கம்? Right to Privacy  என்பதன் எல்லை என்ன? அது மீறப்படுகிறதா? கேள்விகள் என்னை விரட்டின.

யோசனையுடன் Google பண்ணி பார்த்தேன். இதே கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஒன்றிய அரசு ஆதார் திட்டத்தினை அறிமுகப்படுத்திய போது, உச்சநீதிமன்றத்தில் பல சமூக ஆர்வலர்கள் வழக்கு போட்டு கேட்ட செய்தி வந்தது. அந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் தேடி வாசித்தேன்.  ஒருவருடைய  புகைப்படம், கை ரேகைகள், கண்ணின் கருவிழி போன்றவை அந்தரங்கமான விசயங்கள் தான் என்றும், அரசியலமைப்பு சாசனத்தின் படி அவற்றிற்கு பாதுகாப்பு கேட்க உரிமை உள்ளது என்றும் அந்த உத்தரவில் இருந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு சந்தோசப்படுவதா? வருந்துவதா? தெரியவில்லை. ஏனென்றால், நம் அந்தரங்கம் அப்படியெல்லாம் பாதுகாப்பாகவா கையாளப்படுகிறது?

எப்படியெல்லாம் அந்தரங்கம் மீறப்படுகிறது?

வீட்டுக்கு வெளியே கால் வைத்தால் தெருவில், பஸ் ஸ்டாண்டில், சாலையில், அலுவலகத்தில் எங்கும்  கண்காணிப்பு கேமிராக்கள் நம்மை முறைத்துப் பார்க்கின்றன. செயல்பாடுகள் அனைத்தையும் படமாக்குகின்றன. ஏதாவது போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தால் உடனே Biometric விவரங்களை பதிவு செய்யும்படி சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, சிம்கார்டு வாங்குவதற்கு கூட ரேகை வைக்க வேண்டியிருந்தது. வங்கிகளிலும், பல அலுவலகங்களிலும் Authentication என்ற பெயரில் கைரேகை வைக்கும் நடைமுறை வந்துவிட்டது. காலம் பின்நோக்கிச் செல்வது போன்ற பிரம்மை.    

முன்பெல்லாம் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ‘Punch card’ என்ற அட்டை தருவார்கள். அதை கம்பெனிக்கு உள்ளே போகும் போதும், வெளியே போகும் போதும் வாயிலில் இருக்கும் ஒரு மெஷினில் நுழைக்க வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்கள் வரையறுக்கப்பட்ட நேரம் வேலை செய்வதை கண்காணித்தனர்.  நவீன யுகத்தில் இந்த கண்காணிப்பு முறை கைரேகை பதிவாக மாறியிருக்கிறது. பரீட்சை, வேலை என ஏதேதோ காரணங்களுக்காக அந்தரங்கம் என்று சொல்லப்பட்ட விசயங்கள் கேட்கப்படுகின்றன. எதற்காக இந்த மாற்றம்?

மனிதன் சமூகமாக வாழ்கிறான். இந்த சமூகம் தனக்கென கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டு அதை அனைவரின் மீதும் நிர்பந்திக்கிறது. இது காலந்தோறும் நடந்தபடி, அதே நேரத்தில் மாறிய வண்ணம் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து,  மின்னணு சாதனங்களோடு வாழும் பருவத்தில் நாம் இருக்கிறோம். கணிணிகளுக்கும், மின்னணு சாதனங்களுக்கும் தகுந்தாற்போல் நம்முடைய அந்தரங்க உரிமைகளை தளர்த்த நாம் பழக்கப்படுத்தப்படுகிறோம். அல்லது நிர்பந்திக்கப்படுகிறோம். சமூக நிர்பந்தங்களுக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்ட மனங்கள் இவற்றை எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்று, கடந்து போகலாம். ஆனால், இவ்வாறு படம் பிடிப்பது, கைரேகை பதிவு கேட்பது எல்லாம் அந்தரங்க உரிமை மீறல் தானே!?

எப்படி உரிமை மீறலாகும்?

உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்வோமே! நான் ஒரு வங்கி ஊழியன். நான் வங்கியில் சேரும் போது, வேலையில் சேர்வதற்கு நிபந்தனைகளை பட்டியலிட்டு வங்கி நிர்வாகம் என்னிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கியது. அதில் எந்த இடத்திலும் வங்கி நிர்வாகம் என்னை கேமிரா மூலம் கண்காணிக்கும் என்றோ, என் கைரேகையை அவர்கள் கேட்கும் போது தர வேண்டும் என்றோ இல்லை. பணியிட விதிகளை விளக்கும் Service Condition லும் இது போன்ற விசயங்கள் இல்லை. இப்போது,  பொத்தாம் பொதுவாக ஒரு சர்க்குலர் போட்டுவிட்டு, என் ஒப்புதல் இல்லாமல், நிர்பந்தமாக என் கைரேகையை பதிவு செய்கிறார்கள். எனக்குள் எழும் அச்சங்களுக்கு யார் பதில் சொல்வார்கள்? ஏற்கனவே, என் புகைப்படம், கைரேகை, கண் கருவிழி என அனைத்தையும் கொடுத்து வாங்கிய ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு என்று எல்லா இடத்திலும் இணைத்திருக்கிறேன். அப்படி இருக்கையில், என் வங்கியில் இருக்கும் என் கைரேகை விவரத்தை ஏதேனும் ஒரு தகவல் கொள்ளையன் கொண்டுபோனால்?என் கணக்கில் இருக்கும் சில ஆயிரங்களும் ஒரே நாளில் காணாமல் போனால்? என் மொத்த ஜாதகமும் ஏதோ ஒரு இணையதளத்தில் ஏலத்தில் போனால்? நினைத்தாலே தலை சுற்றுகிறது. இந்த தடுமாற்றம் எனக்கு மட்டுமல்ல. ரேகை பதிவு செய்த அத்தனை பேருக்கும் தான்.

உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது?

உச்சநீதிமன்றம் அந்தரங்கம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்று சொன்ன உத்தரவிலேயே, ”கைரேகை போன்ற அந்தரங்க விசயங்களை யாரும் முகாந்திரம் எதுவுமின்றி கேட்கக் கூடாது; ஏதாவது முக்கிய தேவை கருதி கைரேகை பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு முன்பு சம்பந்தப்பட்டவருடைய எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும்; சேகரிக்கப்பட்ட தகவல்களை பொறுப்பாக கையாளுவதற்கும், பாதுகாப்பதற்கும்  முழுமையான உத்திரவாதம் தரப்பட வேண்டும்; இவ்வாறு சேமித்த தகவல்களை வேறு எவரிடமும் சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் பகிர்வது கூடாது” என்றெல்லாம் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அந்தரங்கத் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?    

சட்டங்களை தங்களின் நாற்காலிகளுக்கு அடிக்கொடுத்து  உட்கார்ந்திருக்கும் நிர்வாகங்களுக்கு என் அந்தரங்க விவரங்களின் பாதுகாப்பு பற்றி அக்கறை இருக்குமா?  காமாலைக்காரன் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல், அவர்களுக்கு அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் பித்தலாட்டக்காரர்களாகவே தெரிகிறார்கள். பாதுகாப்பை பலப்படுத்துகிறோம் பேர்வழி என்று அனைத்து அத்துமீறல்களையும் போகிற போக்கில் செய்கிறார்கள். அலுவலகத்திற்கு வந்து போகும் மக்களுக்கு, ஊழியர்களுக்கு அடிப்படை தேவையான கழிப்பிடம் கட்டுவது பற்றி யோசனையில்லாத நிர்வாகங்கள், பெண்களுக்கான தனி கழிப்பறை பற்றி துளியும் நினையாத நிர்வாகங்கள் நம்முடைய அந்தரங்க தகவல்களை பாதுகாப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? பறிபோவது நம் அந்தரங்கமும், அதன் பாதுகாப்பும் தானே! அதனால் ஏற்படும் பாதிப்புகள் நமக்குத்தானே?

இந்தியாவில் அந்தரங்க தகவல் திருட்டுகளை தடுக்கவோ, இழப்பீடு நிர்ணயிக்கவோ சட்டங்கள் இல்லை. இப்போதைக்கு அந்தரங்க உரிமைகளின் பாதுகாப்பு தனிநபரின் பொறுப்பாகவே இருக்கிறது. சமூகமயமாகவில்லை. நம் அந்தரங்க விவரங்களின் பாதுகாப்பை நம்முடைய விழிப்பான, பொறுப்பான செயல்பாடுகளால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் தான் இப்போதைக்கு நமக்கான கேடயங்கள். ஒத்த கருத்துள்ளவர்களுடன் கூட்டாக எதிர்க்க முயல்வதே தப்பிக்கும் உபாயம். கூடவே  பொது மக்கள்  மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

4 comments

  1. உச்சநீதிமன்றம் கேட்ககூடாது என்ற வழிகாட்டல் அறிவுரை போன்று இருக்கிறதே தவிர மீறினால் தணடனை ஏதும் வரையறுக்கப்படவில்லை! இதனால் சேவைகள் மறுக்கப்படும் போது மக்களுக்கு”வேறு வழியில்லாமல் போகிறது.

  2. Right to privacy is a diluted concept in our country. AAdhaar met with many legal hurdles, yet the central government had implemented it through many ways. Today, almost all its citizens have no cover under right to privacy. The author had brought this very clearly and emphatically. Yes, it had become the problem of an individual to protect himself against misuse of these data. Hope this article brings in the needed awareness amidst the readers.

  3. ரொம்பவே நியாயமான அச்சங்கள் தாம்; ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்பது போல் தான் தற்போதைய நிலையாக உள்ளது..

  4. கருத்துக்கள் சிறப்பான முன்வைக்கப்பட்டது !

Comment here...