நூல் அறிமுகம்
எஸ்.இஸட்.ஜெயசிங்
புகழ்பெற்ற சமூக ஆய்வாளரும் முன்னாள் சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியருமான கலாநிதி வி. சூர்யநாராயண் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “REFUGEE DILEMMA: SRILANKAN REFUGEES IN TAMILNADU” என்ற நூலை “அகதியின் துயரம்” என்று தமிழில் முன்னாள் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் திரு.பெர்னாட் சந்திரா அவர்கள் மொழிபெயர்க்க காலச் சுவடு பதிப்பகம் கடந்த வருடம் வெளியிட்டுள்ளது . அகதிகள் பிரச்சினை உலகளாவியது என்பதால் இந்நூல் பலரின் கவனத்தை குறிப்பாக இலங்கை தமிழர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது . குடியுரிமை இல்லாது இருக்கும் அகதிகளின் பல்வேறு நிலைமைகளை எடுத்துரைக்கும் விதமாக இந்நூல் எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும் .
ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் பின்வரும் அம்சங்களை விவரிக்கிறது .
1. உலகெங்கும் இடம் பெயரும் அகதிகளின் நிலை .
2. இந்திய தேசம் எதிர்கொண்ட அகதி அனுபவங்கள் .
3. இனப்பிரச்சினையால் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர் .
4. இலங்கையில் சிங்களவர்களின் இன ஆதிக்கம்.
5. இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வியல் பிரச்சினைகள்.
6. இந்திய புதிய குடியுரிமைச்சட்டத்தில் இலங்கை அகதிகள்.
7. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகள்.
இந்திய அரசு 2003 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து அகதிகளை ”சட்டவிரோத குடியேற்றக் காரர்களாக” வரையறை செய்த போதும் தமிழக மக்கள் அகதிகளை நட்புடனேயே எதிர் கொள்கின்றனர். உலகெங்கும் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையின் பின்னணியில் இலங்கை தமிழ் அகதிகளின் துயர் மிகுந்த வாழ்க்கை இந்நூலில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது .
இலங்கையின் இனப்பிரச்சினை மீது ராணுவத் தீர்வை புகுத்திய சிங்கள அரசின் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரம் தமிழர்கள் அகதிகளாயினர் என்கிறார் நூலாசிரியர். சிங்கள பெரும்பான்மை அரசுகளின் “சிங்களவர்க்கே முன்னுரிமை” கொள்கையால் ஏராளமான இலங்கைத் தமிழர் உலகின் பல பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டதை நூலாசிரியர் மிக தெளிவாக விவரிக்கிறார் .
இலங்கையின் அரசியல் செயற்பாடுகளை நூலாசிரியர் மிக நுணுக்கமாக ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். முன்னாள் இலங்கை அதிபர் திருமதி.சந்திரிகா குமாரதுங்க “வேறுபட்ட சமூகங்களை ஒன்றாக இணைத்து வலுவான தேசமாக இலங்கையை உருமாற்றுவதில் நாம் தோல்வி அடைந்து விட்டோம்” என கூறியதை மேற்கோள் காட்டும் ஆசிரியர், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற போதும் அது இன ஒற்றுமையை நோக்கி நாட்டை கொண்டு செல்லவில்லை என்பதையும் தெளிவு படுத்துவதைக் காணலாம். நூலாசிரியர் கூறுவதைப் போன்று போர் முடிவில் அதிபர் அளித்த புதிய விடியல் இன்றுவரை விடியவே இல்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான போக்கின் காரணமாக சிங்கள ஆளும் வர்க்கத்தினரிடமிருந்து படிப்படியாக விலகி இறுதியில் தமிழ் ஈழம் கேட்கும் நிலைக்கு தமிழர் செல்ல வேண்டியதாயிற்று என்ற அரசியல் நிர்ப்பந்தத்தையும் நூல் மிக தெளிவாக விளக்குகிறது .
இலங்கையில் வசிக்கும் சிறுபான்மையினரின் உரிமைகள் விடயத்தில் உறுதியாக இருக்கும் நூலாசிரியர் திரு. சூரியநாராயண் அவர்கள் இந்திய வம்சாவளி மலையக மக்களின் நிலைப்பாட்டையும் எடுத்துரைக்க தவறவில்லை. அவர்கள் தொடர்பான சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையினையும் கண்டிக்கிறார். மற்றொரு சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் .
நூலின் இறுதி 6 அத்தியாயங்களில் இலங்கை தமிழ் அகதிகளின் பல்வேறு நிலைகளை நூலாசிரியர் மிக தெளிவாக விவரிக்கிறார். கலவரம் மற்றும் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை மூன்று பிரிவினராக வகைப்படுத்தி விவரிக்கிறார் .
1. இலங்கைக்குள் இடம் பெயர்ந்தவர்கள் .
2. தமிழ் நாட்டுக்குள் வந்த இலங்கை அகதிகள் .
3. வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் .
நூலின் இறுதிப் பகுதியில் 1983 முதல் தமிழகம் வந்த இலங்கை அகதிகள் பற்றி நீண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இலங்கை அகதிகள் பற்றி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை நான்கு பிரிவினராக நூலாசிரியர் வகைப்படுத்தி காட்டுகிறார் .
1. அகதிகளாக வந்து முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள்.
2. அகதிகளாக வந்து முகாம்களில் இருக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள்.
3. முகாம்களுக்கு வெளியே சொந்த செலவில் வாழும் அகதிகள்.
4. சிறப்பு முகாம்களில் இருக்கும் போராளி அகதிகள்.
அரசின் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளின் வாழ்க்கை முறை, அரசின் நல உதவி திட்டங்கள், அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என விரிவாக அகதிகள் பற்றி நூலாசிரியர் எடுத்துரைப்பது சிறப்பு அம்சமாகும். மேலும் இந்தியா உட்பட எந்த ஒரு ஆசிய நாடும் அகதிகளுக்கான சட்டத்தை இயற்றவில்லை என்ற தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப் படுத்தி உள்ளார்.
இறுதியாக 2019 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை சட்ட திருத்தங்களைப் பற்றி குறிப்பிடும் நூலாசிரியர் துன்புறுத்துலுக்கு உள்ளான அனைத்து சிறுபான்மை அகதிகளுக்கும் குறிப்பாக இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறார்.
தமிழகத்தில் இலங்கை தமிழ் அகதிகள் தொடர்பாக நிறைய விபரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மிக இலகு தமிழில் திரு. பெர்னாட் சந்திரா அவர்கள் மொழி பெயர்த்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.
The intro to the book “Refugee Dilemma: Srilankan refugees in Tamil nadu” kindles to read the book. The author seems to have undertaken a deep study of the problems faced by these refugees. A book to be read completely to understand the issues involved in this regard. Thanks to BWU for having brought out this introduction of a book that is much needed to be read and understood.