ஜன கன மன – வன்முறை அரசியலை அம்பலப்படுத்தும் படம்

நாகநாதன்

தமிழில் தனி ஒருவன் என்ற ஒரு திரைப்படம் வந்தது நினைவிருக்கிறதா?

அதில் பெருமுதலாளிகள் செய்யும் திட்டமிட்ட பெரும் குற்றங்களை மறைக்க சிறு சிறு குற்றங்களை அடியாட்களை வைத்து செய்து அதை அச்சு ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கும் திசைதிருப்பல் வேலைகள் விவரித்துக் காட்டப்படும்.

இன்னொரு படத்தில் தாசில்தார் இலக்கு. ஆனால் மாவட்ட ஆட்சியரையும் சேர்த்துக் கொல்வார்கள். விளைவு கலெக்டர் கொலை பேசப்படும் போது தாசில்தார் கொலை அமிழ்ந்து போகும். அதே படத்தில் மத்திய மருத்துவப் பல்கலைகழகங்களில் நடக்கும் கொலைகளுக்கான காரணங்கள் விவரிக்கப்படும்.

இருகோடுகள் தத்துவம் தான்.

இந்த உண்மை சம்பவங்களை எல்லாம் நினைவில் உள்வாங்கிக் கொண்டு, நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை எதிர் கொண்டு வெற்றி உலா வந்து கொண்டு இருக்கிற ஜன கன மன என்ற மலையாளத் திரைப்படத்தை  (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு) அவசியம் காண வேண்டும்.

ஊடக அரசியல், செய்தியின் அரசியல், அடையாள அரசியல் என பலப்பல அரசியல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  ஆனால் திசைதிருப்பல் அரசியல் கேள்விபட்டிருக்கிறீர்களா? இப்போது நடந்து கொண்டிருப்பது அதுதான்.  இப்படம் சொல்லும் சேதியும் அதுதான்.

வெகு துணிச்சலாக இந்தப் படம் பேசுகிறது. கேரளக் கலைஞர்களுக்கே உரிய சமரசமற்ற சமரம் திரைத்தளத்தில் நடத்தப் பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் மருத்துவர் பாலியல் கொடுமையை எதிர் கொண்டு படுகொலை செய்யப்பட்டாரே, அந்தக் குற்றவாளிகளைக்(?) கூட ஆந்திர காவல் துறையினர் என்கவுண்டரில் கொன்றார்களே நினைவிருக்கிறதா? அது போன்றதொரு நிகழ்வுடன் படம் துவங்கும். படத்தில் பாதிக்கப்பட்டவர் ஒரு பேராசிரியர். மத்தியப் பல்கலைகழகத்தில் பணிபுரிபவர். (மம்தா மோகன் தாஸ்) என்கவுண்டர் நடத்திய காவல்துறை அதிகாரி சூரஜ் வெஞ்ஞரமூடு. அரசு வழக்கறிஞரை எதிர்கொள்ளும் வழக்கறிஞராக பிரிதிவிராஜ். நடிப்பு அசுரர்கள். கொஞ்சம் மெதுவாகத் துவங்கி, பிறகு படத்தை விட்டு அகல முடியாதவாறு கட்டிப் போடுகிற திரைக்கதை.

நீதி மன்ற காட்சிகள் நாடகத் தன்மையற்று நடப்பு அரசியலை உரக்கப் பேசுவதால்  சலிப்பே இல்லை. ரோஹித் வெமுலாக்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிற உண்மைகள் படத்தில் தெறிக்கவிடப்படுகிறது. சட்டம் எல்லோருக்கும் ஒன்றாகவா இருக்கிறது என்கிற கேள்வி சப்தமாய் எழுப்பப் படுகிறது. 

உணர்ச்சிகளின் அடிப்படையில் மாணவர் போராட்டங்கள் (எந்தப் போராட்டமாயினும் சரி) தன்னெழுச்சியாய் நடத்தப் படுகிற போது கூலிப் படையினரைக் கொண்டு வன்முறைகள் கட்டவிழ்க்கப் பட்டு, அதற்கு காரணமாக அரசியல் கட்சிகள் சீர்குலைவு செய்வதை இப்படம் தோலுரித்துக் காட்டுகிறது.

விவசாயப் போராட்டங்களின் போது, ஜவஹர்லால் நேரு பல்கலைகழகப் போராட்டங்களின் போது, மெரீனா எழுச்சி போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது இப்படி ஏராளமான போராட்டங்களை சீர்குலைக்கும் சக்திகள் யார் என்பதை வெட்ட வெளிச்சமாக இந்தப் படம் சொல்கிறது. அந்த சீர்குலைவு சக்திகள் கைகளில் காவிக் கொடி இருப்பதை  துணிச்சலாய் பேசுகிறது.

அரசியல் வகுப்பு  எடுக்கும் இடதுசாரி பேராசிரியர் (JNU ஞாபகம் வருது) 

மாணவர் போராட்டங்களில் காவிகளின் ஊடுருவல். 

ஊழல் நாற்றமெடுக்கும் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்லும் ஆளும் அரசியல்வாதிகளின் நரித் தந்திரம். 

அதற்காக அரசு எந்திரத்தை, குறிப்பாக காவல்துறை, ஊடகம் ஆகியவற்றை பயன்படுத்துவது, தேவையில்லாத போது அவர்களையே பலி கடா ஆக்குவது (ஊழல் செய்ய சொல்லிக்கொடுப்பது அரசியல் வாதியா, அதிகார வர்க்கமா)  எல்லாம், எல்லாம் இயல்பாக இந்தப் படத்தில். 

மனம் திருந்தி எல்லா உண்மைகளையும் ஆவணப் படுத்தி அதை ஒரு திறமையான வழக்கறிஞரிடம் சேர்க்கச் சொல்லும் காவல் அதிகாரி சூரஜ் கண்களால் நடிக்கிறார். பக்கம் பக்கமாக வசனம் பேசவில்லை. ஆனால் நடிப்பில் அவர்தான் முதல் மதிப்பெண்ணைத் தட்டிச் செல்கிறார். வஞ்சிக்கப்பட்ட இளைஞர்கள் எதிர்வினை ஆற்ற முற்படுகிற போது நரக மாளிகை எழுதிய சுரேஷ் மின்னி நினைவில் வருகிறார்.

வன்முறை அரசியலை, மக்களைப் பிளவு செய்கிற மத அரசியலை, பெரு முதலாளித்துவ அரசியலை, ஆதிக்க அரசியலை  அம்பலப் படுத்துகிற படம் மாற்று அரசியலை உரத்து சொல்லவில்லையே என்கிற ஏக்கம் எழுகிற போதே திரைப்படம் பிரச்சாரமா செய்யும், நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற சமாதானம் என்னுள் ஏற்பட்டது.

இறுதியில் கல்லூரி மாணவர் தலைவர் அரசியல் களமாட தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து இன்குலாப் முழக்கமிடுகிற போது நானும் ஜிந்தாபாத் சொன்னேன்.

One comment

Comment here...