ரெப்போ ரேட் உயர்வு- சுமை தாங்கிகளாக மாற்றப்படும் சாமானிய மக்கள்

க.சிவசங்கர்

ஜூன் 8ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டத்தில் (Monetary Policy Committee) ரெப்போ ரேட் விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 0.50% உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்ற மாத துவக்கத்தில் ரெப்போ ரேட் 0.40% உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர வங்கிகளின் ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தையும் (CRR) 0.50% உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

1 ரெப்போ ரேட் என்றால் என்ன?

ரெப்போ ரேட் என்பது வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடனாகப் பெறும் பணத்திற்கான வட்டி விகிதமாகும். எனவே இதன் அளவு அதிகரிக்கும் போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த வட்டி விகித உயர்வை அறிவிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் மொத்த பணவீக்‍கம் 6.7 % இருக்‍கும் என்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (GDP) 7.2% இருக்‍கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2. பணவீக்கம் என்றால் என்ன?

பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளின் பொதுவான நிலை அதிகரித்து, அதன் விளைவாக, நாணயத்தின் வாங்கும் திறன் (மதிப்பு) குறைவது. பொருட்களின் விலைகளுடன் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால், ஒரு நபரின் வாங்கும் திறன் குறைகிறது.

நீங்கள் ஒரு புதிய பைக் வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதன் விலை ரூபாய் ஒரு லட்சம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக மாதம்தோறும் வங்கியில் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமித்து வைக்கிறீர்கள். ஒரு வருடம் கழித்து வங்கி உங்களுக்கு 5 சதவீதம் வட்டியோடு ரூபாய் 105000 திருப்பித் தருகிறது. அதே ஒரு வருடத்தில் பணவீக்கம் 8 சதவீதமாக உள்ளது என்று வைத்துக் கொண்டால் அன்று உங்கள் பைக்கின் விலை 108000 ரூபாயாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் 3000 ரூபாய் துண்டு விழும். இதுவே பணவீக்கம்.

3. ரெப்போ ரேட் உயர்வால் பணவீக்கம் எவ்வாறு கட்டுக்குள் வரும்?

”ரிசர்வ் வங்கி தனது கடனுக்கான வட்டியை உயர்த்தும் போது வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மக்கள் வங்கியில் வாங்கும் புதிய கடன்களின் அளவு குறையும். மக்கள் தங்கள் செலவீனங்களை சுருக்க தொடங்குவார்கள். மறுபுறம் இந்த அறிவிப்பின் மூலம் வங்கியில் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் உயரும். இதனால் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் பணத்தை வங்கிகளில் சேமிப்பாக மாற்றுவார்கள்.  இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் விளைவாக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் கணிசமான அளவில் குறைந்து வங்கிக்கு திரும்பும் எனவும், இதன் மூலம் பணவீக்கம் குறையும்” என்றும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.

ஆனால் இது உண்மையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. ஏனெனில் வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை வணிக வங்கிகள் ரெப்போ ரேட் உயர்வதற்கு ஏற்றாற்போல் உயர்த்துவது இல்லை. மறுபுறம் ஏற்கனவே 70% மக்கள் கையில் சேர்த்து வைக்க எதுவும் இல்லை. அவர்களின் வாழ்க்கை கைக்கும் வாய்க்குமாகவே உள்ளது. அவர்கள் பெரும்பாலும் கடனை நம்பியே வாழ்கிறார்கள். வட்டி விகிதம் உயரும்போது, தவணைத் தொகை உயரும். இதனால் அவர்கள் புதிதாக கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும்.

4. இந்த வட்டி உயர்வு சிறு குறு வணிகர்களை எவ்வாறு பாதிக்கும்?

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது போன்ற வட்டி விகித மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்வது வாடிக்கை என்றாலும், பொதுவாகவே இது சாமானிய ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்நிலையை நேரடியாக பாதிக்கும். அதிலும் குறிப்பாக இரண்டு வருட கொரோனா பாதிப்புகளில் இருந்து ஓரளவிற்கு மீண்டு வந்துள்ள சிறு குறு நிறுவனங்கள், சிறு வணிகர்கள் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில் தற்போது வணிக வங்கிகளின் பெரும்பாலான கடன்கள் ரெப்போ விகிதத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டு விட்டன. இதனால் ரெப்போ விகிதம் உயர்ந்த மறுநாளே அதே அளவிற்கு அதனுடன் இணைக்கப்பட்ட கடன்களின் வட்டி விகிதங்களும் உயர்ந்து விடும். இதனால் சிறு குறு வணிகர்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான மாத தவணை உடனடியாக உயரும். இது அவர்களின் வாழ்நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து கச்சாப்பொருட்களின் விலைகளும் உயர்ந்து தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட வணிகர்கள், தற்போது வட்டி வீத உயர்வால் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த விலை உயர்வால் சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள்.  சிறு, குறு நிறுவனங்களின் வர்த்தகத்தையும் பாதிக்கும்.

5. இந்த வட்டி உயர்வு சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளிகளை எவ்வாறு பாதிக்கும்?

ஓரளவிற்கு மேல் பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் போகும் போது, வணிகர்கள் தங்களின் செலவீனங்களைக் குறைக்கத் துவங்கி, தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தில் கை வைப்பார்கள். ஏற்கனவே கொரோனா பாதிப்பில் வேலையிழப்பு மற்றும் சம்பள குறைப்பில் தவித்த சாமானிய தொழிலாளர்கள், இப்போது மேலும் இன்னலுக்கு உள்ளாவார்கள். இதனால் அவர்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடையும். இதனால் சந்தையின் பொதுவான கிராக்கி குறைந்து உற்பத்தியான பொருட்களின் விற்பனையில் ஒரு பெரிய தேக்கம் உருவாகும். இது நாட்டின் பொருளாதார சுழற்சியை மேலும் மேலும் வெளிவர முடியாத சுழலுக்குள் சிக்க வைக்கும்.

6. வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியவர்களின் நிலை என்ன?

வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றிக்கான வட்டி விகிதங்களும் உயர்வதால், வீடு மற்றும் வாகன கடன்கள் வாங்கியுள்ள சாமானிய மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்து, அவர்களின் மாதாந்திர பட்ஜெட் எகிறும். புதிய வீடுகளின் விலையும் கணிசமான அளவிற்கு உயர்ந்து, புதிதாக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கையை குறைத்து, வீட்டு விற்பனையில் ஒரு சரிவு உருவாகும். வீட்டுக்கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை தோராயமாக 10 முதல் 15 சதம் வரை அதிகரிக்கும். இதேபோல் வங்கியில் கடன் பெற்று வாகனம் ஓட்டும் ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களின் வாழ்நிலையும் சிக்கலுக்கு உள்ளாகி, ஆட்டோ டாக்சி கட்டண உயர்வில் போய் முடியும்.

7. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

மக்கள் கைகளில் புழங்கும் பணப்புழக்கமே பணவீக்கத்திற்கும், அதன் மூலம் ஏற்படும் விலைவாசி உயர்விற்கும் காரணம் என்ற தவறான பொருளாதாரப் பார்வையில் இருந்து அரசாங்கங்கள் மாற வேண்டும். கடந்த 18 மாதங்களில் ஏற்பட்ட பெட்ரோல் டீசல் மீதான அதிதீவிர வரி உயர்வும் அதனால் ஏற்பட்ட கச்சா பொருட்களின் விலையேற்றமுமே பணவீக்கத்திற்கு மிகமுக்கிய காரணங்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். எனவே பெட்ரோல் டீசல் மீதான வரியை கணிசமாக குறைக்க வேண்டும். அதை ஜிஎஸ்டியில் கொண்டு வர வேண்டும். மேலும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை குறைக்க மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் எனில், அரசாங்கம் தனது செலவீனங்களை அதிகரித்து பொது முதலீட்டின் அளவை உயர்த்த வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான கூலி மற்றும் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் வேலையிழப்புகள் அதிகரிக்கும் நகர்ப்புற பகுதிகளுக்கும் இந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

8. இதற்கான வருவாயை எவ்வாறு திரட்டுவது?

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மற்றும் பெருமுதலாளிகள் வாங்கிய கடன்களை முறையாக வசூலிப்பதன் மூலமும், கார்ப்பரேட் வரிகளை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்த்துவதன் மூலமும் இதற்கான நிதியை அரசாங்கத்தால் திரட்ட இயலும்.

ஆனால் ஒன்றிய அரசோ கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் வாங்கிய சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்தும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்தும் தனக்கு வர வேண்டிய வருவாயில் ஒரு மிகப்பெரிய அளவை இழந்துள்ளது. இந்த இழப்பை ஈடு செய்வதற்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதால், மிகப்பெரும்பலான கச்சாப்பொருட்களின் விலை உயர்ந்து, உற்பத்தி செலவு அதிகரித்து, பணவீக்கமும் விலைவாசியும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து மக்களை வாட்டுகிறது. இப்போது மீண்டும் வட்டி விகித உயர்வால் வேறொரு வழியில் அதே எளிய மக்களின் மீது அந்த சுமை இறக்கி வைக்கப்பட்டு, அம்மக்கள் சுமைதாங்கிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

எனவே இதன் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் வழியே பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது. எனவே அரசாங்கம் மக்கள் அனைவருக்கும் பொதுவான மாற்று பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்குவதன் மூலம் மட்டுமே இந்த சிக்கல்களில் இருந்து மீள முடியும்.

3 comments

  1. எளிய முறையில்… புரிந்து கொள்ள கூடிய முறையில்…. தீர்வுகளோடு… சிறப்பு…..

  2. அருமையான எளிமையான விளக்கம். மக்களிடம் பேசுகிற மொழியில் எழுதுவது பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் சிவசங்கர் !

  3. ரெப்போ வ ட்டி விகிதம் அதன் விளைவுகள் பற்றி சிறப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.
    நன்றி 🙏

Comment here...