சே வாழ்கிறார்!

மாதவராஜ்

சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்த கொரில்லா யுத்தத்தில் காயமடைந்த தனது போராளிகளுக்கு சிகிச்சையளிக்கத்தான் பிடல் காஸ்ட்ரோ மருத்துவராயிருந்த சேகுவேராவை அழைத்தார். கொரில்லாப் போரில் காயமுற்ற தங்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமுற்று பிடிபட்ட அரசின் இராணுவ வீரர்களுக்கும் சிகிச்சையளித்தவர் சேகுவேரா.

அப்படி மருத்துவராயிருந்த சேகுவேரா ஒரு நெருக்கடியான மோதலில், துப்பாக்கி ஏந்திப் போராடத் துவங்கினார். அவரும் கொரில்லாப் போரில் பங்கெடுத்தார். தனது நுட்பமான, துணிவான நடவடிக்கைகளால் கொரில்லாப் படையின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தார்.

புரட்சி வெற்றியடைந்து கியூபாவில் சோஷலிச அரசு அமைந்ததும், மருத்துவத்துறை எப்படி இருக்க வேண்டும் என்று அடித்தளம் இட்டவர் சேகுவேரா. மருத்துவம் என்பது கல்வியைப் போன்று இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது அவரது லட்சியமாயிருந்தது.  மக்கள் மருத்துவரைத் தேடிச் செல்லக் கூடாது, மருத்துவர்கள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதும், மக்கள் வசிக்கும் இடங்களில் மருத்துவர்களும், செவிலியர்களும் அங்கங்கு தங்க வேண்டும் என்பதும் சேகுவேராவின் யோசனைகளாய் இருந்தன. நகர்ப்புறங்களில்  மட்டுமில்லாமல் தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என திட்டமிட்டார்.

“விவசாயமும், வளமும் கொண்டிருந்தாலும், ஊட்டச்சத்தைப் பொறுத்த வரையில் கியூபாவின் நிலைமை மோசமானதாகவே இருக்கிறது. ஊட்டச்சத்தின் கட்டமைப்பை பல்வகைப்படுத்த வேண்டும்.  புதிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கான தானியங்களை பயிரிட வேண்டும். நமது மருத்துவர் விவசாயியாகவும் இருக்க வேண்டும்” என்று 1960ம் ஆண்டு அவர் பேசியது இன்றைக்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நோயை எதிர்கொள்வது என்பது, அந்த நோய்க்கான சூழல்களையும் சேர்த்து எதிர்கொள்வது என்பதே அவரது பார்வையாய் இருந்தது. எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் அவரது கவனம் அதிகம் இருந்தது. அதுவே ‘புதிய கியூபாவைப் படைப்பதாகும்” என்றார்.

அனைத்து மருத்துவர்களின் ஆற்றல் மிக்க திறன்களை எல்லாம் ஒருங்கிணைத்து சமூக மருத்துவத்தை நோக்கி திருப்புவதே நம் முன் உள்ள முக்கிய பணி” என அறிவித்தார்.

பொலிவியா நாட்டின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த கொரில்லா யுத்தத்திற்கு தலைமை தாங்க பொலிவியக் காடுகளுக்குச் சென்ற சேகுவேரா அமெரிக்க உளவுத்துறையால் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

சேகுவேராவினால் பார்க்க முடியாமல் போனாலும், மருத்துவத்துறை சார்ந்த சேவின் கனவுகளை, திட்டங்களை கியூபாவில் நனவாக்கிக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ.

உலகின் எந்த மூலையில் மக்கள் பெருந்தொற்று நோய்களாலும், இயற்கையின் சீற்றங்களாலும் அவதிப்பட்டாலும் அங்கு மருத்துவ சிகிச்சையளிக்க முதலில் போய் நிற்பது கியூபாவின் மருத்துவர்களின் குழுவாக இருக்கிறது. அப்படி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது கியூபா என்னும் அந்த சின்னஞ்சிறு நாடு!

கடந்த ஆண்டுகளில் உலகையே அச்சுறுத்திய கோவிட்-19 ஐ எதிர்கொண்டதிலும், உலகின் மற்ற நாடுகளுக்கு உதவியதிலும் முன்னுதாரணமாக இருந்தது கியூபா. மருத்துவத்துறையில் உலகத்திற்கே வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது.  இந்த வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தவர் புரட்சியாளர், நம் தோழர் சேகுவேரா.

மக்களைத் தேடி செல்ல முடிந்ததும், அப்படிச் செல்ல முடிகிற அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களும், செவிலியர்களும் கியூபாவில் இருந்ததும், நோய் எதிர்ப்புசக்தி குறித்து அக்கறை கொண்ட சிகிச்சை முறையுமே அவர்களின் திறனாய் இருந்திருக்கின்றன.

சே வாழ்கிறார்.

(ஜூன் 14 சேவின் பிறந்த தினம்)

One comment

  1. சேவின் பிறந்தநாள் நினைவுகூறலும் சோசலிச போராட்டத்திற்கு உத்வேகமளிக்கும் !

Comment here...