வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!
அண்டோ
தமிழ்நாடு கிராம வங்கியில் தற்காலிக துணை நிலை ஊழியர்களாக 625 பேரும், துப்புரவுப் பணியாளர்களாக 463 பேரும், ஓட்டுனர்களாக 12 பேரும் என மொத்தம் 1100 ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கென குறைந்த பட்ச ஊதியம், போனஸ் என எதுவும் வழங்கப்படுவதில்லை. அதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு மாதா மாதம் பி.எப் (Provident Fund) பிடித்தம் செய்யப்படுவதில்லை. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு 10.29 கோடி ரூபாய் பி.எப் பிடித்தமாக செலுத்த வேண்டுமென பி.எப். கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இது ஒரு மகத்தான வெற்றி.
தவறான மாடல்
ஓர் அரசு வங்கி என்பது ஒரு Model Employer என சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் தான் எப்படி உழைப்புச் சுரண்டலில் ஈடுபட வேண்டும் என கார்ப்பரேட்களுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு முன்மாதிரியாக அதாவது ஒரு தவறான மாடலாக செயல்பட்டு வருகிறார்கள், அதில் தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகமும் ஒன்று!
ஒரு பக்கம் அரசு தான் Minimum Wages Act, Payment of Bonus Act, The EPF and MP Act என பல சட்டங்களை இரு அவைகளிலும் வைத்து நிறைவேற்றி அவற்றை தேசமெங்கும் உள்ள தொழில் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் இங்கு நடைமுறையில் அரசே பொறுப்பேற்று நடக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் கூட இவையெல்லாம் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை. ஓர் அரசு வங்கியில் உள்ள இயக்குநர் குழுவில் RBI, NABARD, CENTRAL GOVT. NOMINEE, என எத்தனை அரசு தரப்பு பிரதிநிதிகள் இருப்பார்கள்? வருடம் முழுவதும் எத்தனை வகையான Inspection-கள் நடைபெறுகின்றன? எப்படி இத்தனை பேர் இருந்தும் அரசின் வழிகாட்டுதலுக்கு எதிராகவே ஓர் அரசு நிறுவனத்தை இயங்க அனுமதிக்கிறார்கள் என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது.
பழி வாங்கல் நடவடிக்கைகள்
இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டி தொழிற்சங்கமாக இவற்றை கோரிக்கைகளாக்கி முன்னெடுத்ததற்காகவே TNGBWU மற்றும் TNGBOA-வின் (Tamilnadu Grama Bank Workers Union & Tamilnadu Grama Bank Officers Association) முன்னணித் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சஸ்பென்ஷன் செய்யவும், டிரான்ஸ்பர் போட்டு பந்தாடுவும், கொஞ்சம் கூட ஈரமின்றி ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி வைக்கவும் என பழிவாங்கும் நடவடிக்கைகளில் வன்மத்தோடு செயல்பட்டது தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்.
ஆனாலும் வர்க்கப் பார்வையோடு AIRRBEA (All India Regional Rural Bank Employees Association) மற்றும் BEFI (Bank Employees Federation of India) வழிகாட்டுதலுடன் மிகமிக உறுதியுடன் மேற்கண்ட உரிமைகளுக்கான போராட்டங்கள் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன. தற்காலிக ஊழியர்களுக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் சட்டப்படி நீதியும் உரிய நிவாரணமும் கிடைக்க தொழில் தாவாக்களும் புகார்களும் எழுப்பப்பட்டன.
நியாயம் இல்லாத நிர்வாகத் தரப்பு வாதம்
அதில் ஒன்று தற்காலிக ஊழியர்களுக்கும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டுமென பி.எப் கமிஷனரிடம் கொடுக்கப்பட்ட புகார் ஆகும். புகார் ஏற்கப்பட்டு 10/03/2021 அன்று நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. ”தற்காலிக ஊழியர்களும், துப்புரவுப் பணியாளர்களும், தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை பார்க்கவில்லை” என்று அப்பட்டமாக நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. ஊழியர்கள் தரப்பில் அவர்கள் பணிபுரிவதற்கான ஆவணங்கள் முறையாக சமர்பிக்கப்பட்டன. ”கிராம வங்கிகள் பி.எப் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவை ஆகையால் பி.எப் பிடித்தம் செய்ய தேவையில்லை” என நிர்வாகம் சொன்னது. இப்படி நிர்வாகத் தரப்பில் பல்வேறு வாதங்கள் வைக்கப்பட்டன.
ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் நிர்வாகத் தரப்பில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது. பி.எப் கமிஷனர் 62 பக்கங்களில் விசாரணை நடைபெற்ற விதத்தையும், அதில் வெளிவந்துள்ள உண்மைகளையும், ஏற்கனவே உள்ள முன்மாதிரியான சட்டரீதியான தீர்ப்புகளையும் மிக நீண்ட தரவுகளோடு குறிப்பிட்டு 06/06/2022 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஆணையாக வெளியிட்டுள்ளார்.
10 கோடி ரூபாய் பி.எப். பிடித்தம்
அதன்படி தமிழ்நாடு கிராம வங்கியில் பணிபுரிந்து வரும் 625 தற்காலிக ஊழியர்கள், 463 துப்புரவுத் தொழிலாளர்கள், 12 ஓட்டுனர்கள் அவர்கள் பணிக்குச் சேர்ந்த நாளிலிருந்து பி.எப். பிடித்தம் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பி.எப் பிடித்தம் செய்ய வேண்டுமென கணக்கிட்டு அந்த அட்டவணையும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் ரூ.10,29,26,330 (பத்து கோடியே இருபத்தொன்பது லட்சத்து இருப்பத்தாறு ஆயிரத்து முன்னூற்று முப்பது ரூபாய்) பி.எப் பிடித்தமாக செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! தொடர்ந்து உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வந்த அந்த எளிய தொழிலாளர்களின் வாழ்வில் கிடைத்திருக்கும் நம்பிக்கை ஒளிக்கீற்று இது. சமரசமற்று இப்போராட்டத்தை முன்னெடுத்த சங்கங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது! தமிழகமெங்கும் இது போன்று பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் அத்தனை பேருக்கும் தங்களுக்கான உரிமையை கோருவதற்கு கிடைத்திற்கும் ஆவணம் இது! ஆயுதம் இது!
இனி விரைவில் அவர்களுக்கான போனஸும் கிடைக்கும், பணி நிரந்தரமும் சாத்தியமாகும். ஒன்றுபட்டு சமரசமற்று எடுக்கப்படும் எந்த போராட்டத்திலும் இறுதி வெற்றி தொழிலாளர்களுக்கே என்பதற்கு இது மீண்டும் ஒரு சிறந்த உதாரணம்!
போராட்டங்கள் தொடரும்….
போராட்டங்கள் தொடரட்டும். தொழிலாளர் ஒற்றுமை ஓங்கட்டும்.
தற்காலிக ஊழியர்களின் நிச்சயற்ற பணிவாழ்வில் இந்த தீர்ப்பு நம்பிக்கையூட்டும் ஒளி கீற்று.
வாழ்த்துக்கள் தோழர்களே !
அருமையான தீர்ப்பு
இதைப் பெறுவதற்கு அளப்பரிய பணியாற்றி ய அத்துனை பேர்களுக்கும் நன்றி