அபாயகரமான திட்டத்தைத் தூக்கியெறியச் செய்வோம் !
எஸ்.வி.வேணுகோபாலன்
தீப்பற்றி எரிகிறது அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நாடு முழுவதும்! தங்கள் கனவுகளுக்கு வைக்கப்பட்ட தீ இந்தத் திட்டம் என்று குமுறிக் கொண்டு இளைஞர் பட்டாளம் தன்னெழுச்சியாகப் பல்வேறு மாநிலங்களில் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்கும் அசராத கருத்தியல் வெறியும், அதிகார ஆணவமும் பிடித்த ஆட்சியாளர்கள் விரைவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கி விடுவோம் என்று அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
முப்படைகளுக்குமான அக்கினிவீரர்களைத் தேர்வு வைத்து நான்காண்டுகள் காண்டிராக்டு முறையில் வேலைக்கு எடுத்து, அதில் 25 சதவீதத்தினரை நிறுத்திக் கொண்டு மீதி 75 சதவீத வீரர்களைக் கழற்றி விடுவது. அவர்களது மாத ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு பிடித்து வைத்துக் கொண்டு இராணுவத் தரப்பில் சம பங்களிப்பு செய்து நான்காண்டுகள் முடிவில் பதினோரு லட்சம் ரூபாய் தொகை கொடுத்து வழியனுப்பி விடுவது. வயதுத் தகுதி 17.5 முதல் 23 வரை (இது முதலில் 21 என்று அறிவிக்கப்பட்டு, முதல் சூடு பட்டதும் உயர்த்தப்பட்டது). திட்டத்தை விரிவாக விளக்க ஒன்றுமில்லை, சொல்ல இராணுவத்தின் பக்கத்திலும் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. பைலட் திட்டம் போல் சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை என்று முன்னாள் இராணுவத் தலைமைப் பொறுப்புகள் வகித்த பலரும் சலிப்போடு திட்டத்தை நிராகரித்துப் பேசக் கேட்கிறோம்.
இராணுவத்திலும் காண்டிராக்டு மயமா என்று கொதிக்கின்றனர் சமூக சிந்தனையாளர்கள். சிவில் சமூகத்தை இராணுவமயமாக்கும் திட்டமா இது என்று கேட்கிறது இடது சாரிகள் குரல்!
இராணுவத்தில் ஊதியச் செலவுகள், பென்ஷன் சுமை, இதர சலுகைகளின் பாரம் குறைக்கத் தான் இந்தப் புதிய அணுகுமுறை, இதை வரவேற்க வேண்டாமா என்று ஆட்சியாளர் பக்கம் குடை சாய்ந்துவிட்ட ஊடக அன்பர்கள் மல்லுக்கட்டி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இராணுவம் ஒரு வேலை வாய்ப்புக்கான தளமா, அது சேவைக்கான இடமில்லையா என்று அவர்கள் பேசும் தத்துவங்கள் சிலிர்ப்புற வைக்கின்றன. தி இந்து தமிழ் நாளிதழ் ஒரு படி மேலே போய், போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அரசுப்பணிகளில் கூட நியமன உரிமை கிடையாது என்று தடை செய்யவேண்டும் என்று அறிவிக்கக் கேட்கிறது. எந்த ஊர் நியாயம் இது? ஜனநாயக ரீதியாக எதிர்த்துக் குரல் கொடுப்பது தேச விரோதச் செயலா, மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவோர் தேச பக்தர்களா – அதாவது, 1992இல் பாபர் மசூதி இடித்தவர்கள், 2002இல் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினரைக் கொன்று குவித்து அவர்கள் வீடுகளை எரித்தவர்கள், மாட்டு மாமிசம் உண்போரை உயிரோடு எரிப்பவர்கள், இப்போது சிறுபான்மையினர் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்போர் எல்லாம் தேச பக்தர்கள் – ஆட்சியாளரின் திட்டத்தை எதிர்ப்போர் எல்லாம் தேச விரோதிகளா?
அரசின் செல்லப்பிள்ளைகளான கார்பொரேட் தொழில் முதலாளிகள் சிலர் – டாட்டா நிறுவனத்தின் என் சந்திரசேகரன், மகிந்திரா சேர்மன் ஆனந்த் மகிந்திரா, ஆர் பி ஜி குழுமத்தின் ஹரிஷ் கோயங்கா, சஜ்ஜன் ஜிந்தால் என்று ஒரு கும்பல் அக்னிபத் திட்டத்தை ஓகோ என்று வரவேற்றுள்ளது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்க அக்கினிவீரர்களுக்கு வேலை வழங்க இப்போதே தயாராகிக் கொண்டிருப்பதாக ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும் என்கிறது பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம். இதன் உட்பொருள் என்ன, இந்துத்துவா – கார்பொரேட் கூட்டணியின் செயல்பாடு புரிபடுகிறதா ?
ஆனால், பல பத்தாண்டுகளாக, தனியார் நிறுவனங்களில் முன்னாள் இராணுவத்தினர் எத்தனை சதவீதம் பேருக்கு வேலை நியமனங்கள் கிடைத்து வந்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினால், அந்தப் பக்கத்திலிருந்து சத்தம் வராது. சரி, மத்திய அரசு நிறுவனங்களில், துணை இராணுவத்தில் இவர்களுக்கு ரிசர்வேஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறதே என்று அப்பாவி போல் கேட்பவர்களுக்கு, முன்னாள் இராணுவத்தினருக்கு ஏற்கெனவே சி பிரிவு, டி பிரிவு பணிகளில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடு எந்த அளவுக்கு நிரப்பப்பட்டுள்ளது என்பதை எடுத்துப் பாருங்கள் என்று சொல்லியாக வேண்டும்.
மத்திய அரசுத் துறைகளில் சி பிரிவில் ஒதுக்கீடு 10 சதவீதம். டி பிரிவில் 20 சதவீதம்! 77 துறைகளில் 34 துறைகளில் தான் ஒதுக்கீடு நடந்திருக்கிறது, அதிலும் சி பிரிவில் இப்போது பணியில் இருக்கும் முன்னாள் இராணுவத்தினர் வெறும் 1.29 சதவீதம், டி பிரிவில் 2.66 சதவீதம். துணை இராணுவத்தில் பத்து சதவீத ஒதுக்கீடு, அதில் என்ன கதை? சி பிரிவில் 0.47 சதவீதம், பி பிரிவில் 0.87 சதவீதம், ஏ பிரிவில் 2.20 சதவீதம்! இந்த லட்சணத்தில் தான் தனியார் நிறுவனங்களைக் கூவி விற்கச் சொல்லி இருக்கின்றனர், வேலை வாய்ப்பு தருகிறோம் என்று!
இப்போதிலிருந்து நான்காண்டுகள் கழித்து, இராணுவப்பயிற்சி முடித்தோர் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கில் வீதிகளில் நிறுத்தப்படுவார்கள் என்பது எத்தனை பேராபத்து என்பதை நடுநிலை பார்வையாளர்கள் கூட இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. 23 வயதில் வெளியேறும் ஓர் இளைஞனை, இராணுவ பரிச்சயமும், பயிற்சிகளும் பெற்று வருபவரை இங்கே சமூக விரோத சக்திகள் பணத்தாசை காட்டிக் கொத்திக் கொண்டு போய்விட மாட்டார்களா? மிகப்பெரிய சமூக சக்தி இப்படி ஆண்டுதோறும் நாசமாகப் போக அனுமதிக்க முடியுமா?
இந்தத் திட்டத்தைத் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரிக்கின்றன, ஏனெனில், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தனியார் மயமாவதன் பெருத்த யோக ஜாதகம் அவர்களுக்கு! கொள்ளை லாபமழை அவர்கள் காட்டில், இன்னொரு பக்கம், இந்த அக்கினிவீரர்களை அவர்கள் வேலைக்கு எடுத்துக் கொண்டு விசுவாசமாக்கிக் கொண்டு அவர்களை வைத்து இந்துத்துவா பிராஜெக்ட் விரிவுபடுத்தத் துணை போகலாம். இரட்டை பேரபாயம் இது!
கொரோனா பெருந்தொற்று காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளாக இராணுவத்திற்கு ஆள் எடுக்கவில்லை, குறைந்தபட்சம் இரண்டு லட்சம் காலியிடங்கள். நாடு முழுவதும் இந்த வேலைக்குத் தகுதி பெற்றுக் கடைசி கட்ட நுழைவுத் தகுதிக்கு லட்சக் கணக்கில் காத்திருப்போரில், தமிழகத்தில் மட்டும் 26 ஆயிரம் பேர் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களும் புதிய தேர்வு நுழைவு வாசலில் போய் அடித்துக் கொண்டு நிற்க வேண்டும், பழைய கதவுகள் மூடப்பட்டன என்று சொல்லப்பட்டு விட்டது. முப்படைகளின் விமானப்படைக்கான அக்கினி வீரர் பதிவு செய்துகொள்ள இணையத்தில் வரிசையாக ஜூன் 24 முதல் கதவுகள் திறக்கப்படுகின்றன, இணையத்தில் அக்கினிபத் என்று தேடினால், தேர்வுக்கு உதவி செய்ய இணைய தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கின்றன, அடுத்த கொள்ளை தயாராவதைப் பார்க்க முடிகிறது.
முன்னாள் விமானப்படை வீரர் – அம்பேத்கர் கல்வி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், சர்வீஸில் இருக்கும்போது, நியமன அறிவிப்புகள் செய்யுமிடத்தில் பணியாற்றி இருக்கும் அனுபவத்தில் சொல்கிறார், பீகார் போன்ற மாநிலங்களில், தேர்வுப் பட்டியலை விண்ணப்பம் செய்தோர் பார்க்குமுன் அவர்களுக்குப் பெண் கொடுக்க சம்பந்தம் பேசி முடித்துள்ள மணமகள் பெற்றோர் வந்து ஆர்வத்தோடு தேடிப்பார்த்து, பெயர்கள் இருந்தால் தான் பெண் கொடுப்பார்களாம். நான்காண்டு வேலை வாய்ப்புக்கு இப்போது எந்த அக்கினி வீரருக்கு யார் போட்டி போட்டுக் கொண்டு சம்பந்தம் பேச முன்வருவார்கள்?
ஆர் எஸ் எஸ் இயக்கத்தை நிறுவிய கேசவ் பலிராம் ஹெட்கேவாருடைய நெருங்கிய நண்பர் பி எஸ் மூஞ்சே, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார். மார்ச் 19, 1931 அன்று நேரடியாக முசோலினியை சந்தித்து உரையாடியதைத் தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். தங்களது தேசத்தில் இப்படியான ஓர் இராணுவப் பயிற்சி முறையைத் தங்களது தொண்டர்களுக்குத் தர இருப்பதாக முசோலினியிடம் சொல்லிவிட்டு வந்தார் மூஞ்சே என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ ஜி நூரானி.
இப்போது நடந்து கொண்டிருப்பதை இதோடு இணைத்துப் பார்க்க வேண்டாமா? இந்து ராஷ்ட்டிரா பெருங்கனவில் சாவர்க்கர் விரும்பியது, இந்து சமூகத்தை மிலிட்டரி பயிற்சிக்கு உட்படுத்துவது என்பது. ஆர் எஸ் எஸ் இயக்கம் ஒரு பண்பாட்டு இயக்கம், ஒழுக்கம் – கட்டுப்பாடு – தேச பக்தி இயக்கம் என்று சொல்லிக் கொள்வோர் உண்மையில் தங்களது ஷாகாவில் எப்படி நச்சுக் கருத்தியல் புகட்டுகின்றனர் என்பதை நரக மாளிகை நூலில் விவரிக்கிறார் சுதீஷ் மின்னி.
தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் காவல் துறை ஆட்கள் கதாநாயகன் சூர்யாவுக்கு எதிராகச் சூழ்ந்திருக்க, அவர்களில் ஒரு பெரும்பகுதி அவரது கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருந்து சுடுவதைப் பார்த்திருப்பீர்கள். அக்னிபாத் தானா சேர்ந்த கூட்டமல்ல, இவர்களாக சேர்க்கும் கூட்டம்; அது யார் உத்தரவுகளை நிறைவேற்றும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், அபாயத்தின் தீவிரம் புரியும்.
இரத்த அணுக்களுக்குள் வெறுப்பு அரசியலை ஏற்றும் ஓர் இயக்கத்தின் மிக அபாயகர திட்டம் தான் அக்னிபத். தேசத்தின் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் தங்களது கருத்தியல் ஆட்களை ஏற்கெனவே புகுத்தி வரும் இவர்கள், இப்போது இராணுவத்தில் நேரடியாக நச்சு விதைகளை ஊன்றத் தலைப்பட்டுள்ளதை, ஜனநாயக எண்ணம் கொண்டோர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இப்போது வெளிப்பட்டுள்ள எதிர்ப்பின் குரல் போதாது. அழுத்தம் காணாது. மிக எளிய மக்களுக்கு இன்னும் போய்ச் சேராத ஆபத்தான கருத்தியல் விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டியது இப்போதைய உடனடி அவசர ஜனநாயகக் கடமை. காலம் காத்திருக்காது.
விரிவான அலசல்.. விழிப்புணர்வு பெறுவோம்..
எளிமையான அருமையான பதிவு
அக்னி பாத் திட்டம் இந்திய சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும்.
ஒன்றிய அரசு இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும்!