தனுஷ்கோடி

நூல் விமர்சனம் 

அ.ஆறுமுகம்

தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் பணிபுரிந்த திரு. மனோகரன், இந்நூல் ஆசிரியராவார். வழக்கமாக நாவல் படிக்காத, சிறுகதைகளைக்கூட அபூர்வமாகப் படிக்கும் நான்,  இந்த நூலை வாசிக்குமாறு  எனது தாய்மாமனார் திரு. தங்கமணி வழங்கியபோது தயக்கத்துடனேயே வாங்கினேன். இந்நூலைப் படிக்க இரு விஷயங்கள் தூண்டுகோலாக இருந்தன. முதலாவது,   நான் சமீபத்தில்தான் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஊர்களுக்கு பயணம் செய்து வந்தேன். தனுஷ்கோடியின் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளும் அவ்வூர் 1964 ல் கடல்கோளுக்கு ஆளானது என்ற செய்தியும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இரண்டாவது,  தனுஷ்கோடி நகரத்தைப் புயல் தாக்கியதற்குத் தான் நேரடி சாட்சியாக இருந்துள்ளார் என்ற  நூலாசிரியரின் முன்னுரையும் காரணங்களாகும்.

மீனவ சமுதாயம் எவ்வளவு துயருற்றபோதும் கடல்மாதாவின் மடியிலேயே கிடப்பதும், கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் அவர்கள் எவ்வாறு ஏஜெண்ட்களால் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பதும் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கதையின் நாயகன் நம்புராஜன் பொதுவுடமைத் தோழர்களின் தொடர்பில் மீனவர்களை சங்கமாகச் சேர்க்க முயலுகிறான் என்பதும் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் அவர்களை இணைக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளும்  ஆழகாக சொல்லப்பட்டுள்ளன.

ஆனால், சக மீனவர்களின் தயக்கமும், போலீஸ் கெடுபிடியும் குடும்ப சூழ்நிலையும் நம்புராஜன் முயற்சிகளை நீர்த்துப் போக செய்துவிடுகின்றன. ஏஜெண்ட்களின் நெருக்கடியை குப்புதாய் பாட்டி போன்றவர்கள் எவ்வாறு திறமையாக சமாளிக்கிறார்கள் என்பதும் சரியான சித்தரிப்பாகும். அந்தோணி, சூசை போன்ற நண்பர்களும் நம்புராஜனுக்கு வாய்ப்பது மீனவர்கள் மத்தியில் மத நல்லிணக்கம் இழையோடியிருப்பதை காட்டுகிறது.

ஈஸ்வரி என்ற கதைநாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் கணவன் ராமனாதன் கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்ததாக வந்த செய்தியை அடுத்து, தன் வாழ்க்கைத் துணையாக நம்புராஜனை தேர்ந்தெடுத்தாள். பின்னர் ஒரு கட்டத்தில் ராமனாதன் உயிரோடு இருப்பது அறிந்து என்ன செய்ய என்று குழம்புகிறாள். ஆனால், புயலின்போது கடலில் ஆர்ப்பரித்த அலை ஒன்று ராமனாதனையும் இழுத்து சென்றுவிட்டது. இறப்பதற்கு  முன்பு தன் மகள் மாரிசெல்வியை ராமனாதன் கடல் அலைகளில் இருந்து காப்பாற்றியது அவளுக்குப் பெரும் ஆறுதலாக அமைகிறது.  

மாரிசெல்வி முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தை என்பது ஒருபுறம் இருக்க, இரண்டாவது கணவன் நம்புராஜனின் குழந்தையாக ராஜேஸ்வரி இருக்கிறாள். தனுஷ்கோடியின் அழிவுக்குப் பின் ராமேஸ்வத்தில் குடியேறி ஓட்டல் தொழிலில் ஈடுபட்டார் நம்புராஜன். மாரிசெல்வி வக்கீல் தொழிலில் இறங்கி வழக்கறிஞர் செல்வராஜைக் காதல் மணம் புரிந்தார். மாரிசெல்வியின் தங்கை ராஜியும் அரசாங்கப் பணியில் இணைந்தாள். அனைவரும் சென்னையில் வசித்தார்கள். மாரிசெல்வி நீதிபதியானார். அக்காளும் தங்கையும் தனுஷ்கோடிக்கு சென்று பழைய நினைவுகளை மீட்டு எடுப்பதாகத்தான் கதை துவங்கி, FLASHBACK எனப்படும் பாணியில்தான் மிக அருமையாக நூலாசிரியர் எழுதியுள்ளார். தாங்கள் சிறுவயதில் விளையாடிய இடங்கள் தற்போது கடலுக்கடியில் இருப்பதைக் கண்ணுற்றனர்.கதையினூடே வரும் ஒரு சம்பவமாக அதாவது உண்மை நிகழ்வாக, நடிகர் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி ஆகியோர் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருந்தவர்கள் புயலின்போது ராமேஸ்வரத்தில் மாட்டிக்கொண்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களைக் காண தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரம் வந்த பலர் அன்று உயிர் பிழைத்தது ஓர் அரிய சம்பவமாகும். ஆனால், நடிகர்கள் வந்ததால்தான் ஊருக்குள் புயல்வந்துவிட்டது எனத் தவறாகப் பேசியவர்களும் உண்டு.

தனது எழுத்துத் திறன் மூலம் இந்த நாவலை சுவாரஸியமாக்கியுள்ளார் நூலாசிரியர்.  தனுஷ்கோடி பற்றிய பல அரிய தகவல்களும் விவரிக்கப் பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலிருந்து இலங்கையிலுள்ள கொழும்பு வரை ஒரே டிக்கட்டில் மக்கள் பயணம் செய்தனர் என்பது சுவையான விஷயம். அப்பொதெல்லாம் போட் மெயில் என்ற பெயரிடப்பட்ட ரயில் மூலம் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக  தனுஷ்கோடி சென்று, அங்கிருந்து கப்பலில் தலைமன்னார் செல்வர்; பின்னர் தலைமன்னாரிலிருந்து கொழும்புவுக்கு ரயிலில் செல்வர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வணிகத் தொடர்புகள், பண்பாட்டுப் பரிவர்த்தனைகள்  இருந்துள்ளன. வட இந்தியர்கள் கோவில் நகரமாம் ராமேஸ்வரத்திற்கு பெருமளவு வந்துள்ளனர். இருநூறு ஆண்டுகளுக்கு முன் போர்த்துகீசியர் கட்டிய சர்ச் ஒன்று கடல்கோளால் சிதிலமடைந்து நிற்கின்றது. உலகின் பல பகுதிகளில் கடலில் மூழ்கியிருந்த பகுதிகள் அந்தந்த அரசுகளால் LAND RECLAMATION என்ற முறையில் மீட்கப்பட்டுள்ளன. மும்பை நரிமன் பாயின்ட் இவ்வாறு பெறப்பட்டதுதான். நாமோ பேய் நகரமாக மக்கள் வாழத் தகுதியற்றது என்று வீணாகப் போட்டு வைத்திருக்கிறோம்.கடல் விழுங்கியது போக எஞ்சிய பகுதிகளை மீட்டு, புகழ்மிக்க தனுஷ்கோடியை உருவாக்க வேண்டும்.

2 comments

  1. இயற்கை மனித வாழ்வில் ஊடுருவும் தை விமர்சனம் கோடிகாட்டிச் செல்வது, சிறப்பு !
    நன்றி!

Comment here...