இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் தமிழ்நாடு கிராம வங்கி

அண்டோ

கஷ்டப்பட்டு கடன் வாங்கியேனும் படித்து முடித்துவிட்டு  வேலைவாய்ப்பின்றி நாடெங்கும் இளைஞர்கள் பட்டாளம் தவித்து வருவதை செய்திகளாக தினம்தினம் பார்த்தும், படித்தும் வருகிறோம். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக அந்நிய முதலீட்டாளர்கள் துவங்கிய நிறுவனங்கள் இங்குள்ள மக்களின் உழைப்பினை சுரண்டி கொழுத்த பின்னர், அவர்களுக்காக உழைத்த தொழிலாளர்களின் வாழ்வினைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்களை தூக்கி வீசிவிட்டு கிடைத்தவரை இலாபம் என சுருட்டிக்கொண்டு செல்வதை சமீபத்திய போர்டு நிறுவனம் வரை பார்த்தோம்.

ஒப்பந்தக் கூலிகளாக மாற்ற முயற்சி

மென்பொருள் நிறுவனங்களோ ஆட்குறைப்பு என்ற பெயரில் சக்கையாக ஊழியர்களை பிழிந்து எடுத்துவிட்டு தூக்கி வீசி வருவதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இத்தனை மோசமான அனுபவங்கள் இருந்தும் இன்றைய ஆட்சியாளர்கள் இன்னமும் கார்ப்பரேட்டுகளுக்காக தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் வெட்டிக் குறைத்து விட்டு, சட்டரீதியாகவே சுரண்டல்களுக்கு வழிவகை செய்து கொடுத்து, அவர்களை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருவதை காண்கிறோம். அத்தோடு நில்லாமல், கஷ்டப்பட்டு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு, நாட்டின் சொத்துக்களை மட்டும் அல்லாமல் உழைக்கும் மக்களையும் ஒப்பந்த கூலிகளாக மாற்றுவதற்கு தங்களால் இயன்றதை செய்து வருகிறார்கள்.

இப்படி பொதுத்துறைகளை, அதாவது நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் போது மக்கள் எழுச்சி எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகளையும், பணி நியமனங்களையும் மிகமிக குறைவாக இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். இப்படி நான்கு பேர் செய்ய வேண்டிய பணியை ஒருவர் செய்ய நிர்பந்திக்கப் படும் போது அவர் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாவார். அதனால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படும். அதேசமயம் வாடிக்கையாளர்களின் பார்வையில் ஊழியர்கள் குற்றவாளிகளாக வேலையை இழுத்தடிப்பவர்களாக காட்சிக்குள்ளாவார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் விரும்பும் தனியார்மயத்தை மிக எளிமையாக சாதிக்க முயல்கிறார்கள். பொது புத்தியில் ”அரசு ஊழியர்கள் என்றாலே அதிக ஊதியம் பெற்று வேலை செய்யாமல் வசதியாக இருப்பவர்கள்” என்ற எண்ணத்தை இப்படித்தான் மிக நைச்சியமாக உருவாக்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலர்கள் நியமனம் “0”

இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் இந்த வருடத்துக்கான  அலுவலர்கள் மற்றும் எழுத்தர்களுக்கான  காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எழுத்தர்களுக்கு 450 காலிப்பணியிடங்கள் என்றும் அலுவலர்களுக்கு  “0” என்பதுமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு  மிகவும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மித்ரா கமிட்டி அறிக்கை

ஓர் அரசு வங்கியில் அந்த வங்கியின் சேர்மனோ அல்லது உயர் பொறுப்பில் இருக்கும் எந்தவொரு அதிகாரியோ தான் விரும்பியபடியெல்லாம் காலிப்பணியிடங்களை முடிவு செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக கிராம வங்கிகளை பொருத்தவரையில் மனித வளத்தின் தேவைகளை கண்டறிய மித்ரா கமிட்டியின் அறிக்கை உள்ளது. அதனடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை முடிவு செய்ய வேண்டும்.

மத்திய அரசால் S.K.மித்ரா என்பவர் தலைமையில் 2012ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையை 2014ம் ஆண்டு இறுதியில் சமர்பித்தது. மத்திய அரசு 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து கிராம வங்கிகளுக்கும் அதன் பரிந்துரைகளை அனுப்பி 2015 மார்ச் மாத இறுதிக்குள் அந்தந்த கிராம வங்கி போர்டில் வைத்து அந்த பரிந்துரைகளை முடிவாக நிறைவேற்றச் சொன்னது. அனைத்து கிராம வங்கிகளும் அதன் பரிந்துரைகளை தத்தம் போர்டில் வைத்து நிறைவேற்றி 2015 ஏப்ரல் மாதத்திலிருந்து அதுவே தங்கள் HR Policy என முடிவு செய்தன.

ஆக கிராம வங்கிகளை பொருத்த அளவில் மனித வளத்தின் தேவையானது  மித்ரா கமிட்டியின் பரிந்துரைப்படி தான் கணக்கிடப்பட வேண்டும். அப்படி வரும் காலிப்பணியிடங்களில் 50% வரை நேரடி பணிநியமனங்கள் மூலமாகவும், மீதமுள்ள 50% காலிப்பணியிடங்களை வங்கிக்குள்ளான பதவி உயர்வுகளின் மூலமும் நிரப்ப  வேண்டும். 

இந்த கமிட்டியானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டு இதன் பரிந்துரைகளை இந்தியாவின் அனைத்து கிராம வங்கிகளுக்கும் பொதுவான ஒரு நெறிமுறையாக கடைபிடிக்க வேண்டும் என நபார்டும் வலியுறுத்தியுள்ளது. 

ஆனால் மேற்கண்ட எந்த வழிகாட்டுதலையும் கணக்கில் கொள்ளாமல் அதிகாரிகள் நியமனம் ‘0” என்று ஓர் அறிவிப்பை தன்னிச்சையாக தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம வங்கியில் 2078 ஊழியர்கள் பற்றாக்குறை

தமிழ்நாடு கிராம வங்கியின் இந்த ஆண்டின் நிகர லாபம் மட்டும்  ரூ. 229 கோடி என்றும் சராசரியாக ஒரு கிளையின் வர்த்தகம்  ரூ. 54 கோடி என்றும் அதில் ஓர் ஊழியரின்  சராசரியான வர்த்தகமானது ரூ. 13.28 கோடி என்றும் இந்த ஆண்டின் நிதியறிக்கை கூறுகிறது.

தமிழ்நாடு கிராம வங்கியில் மனித வளத்தை பொருத்தவரையில் 31/03/2022-ன் படி நிரந்தரப் பணியாளர்களாக மொத்தம் 2629 பேர் பணிபுரிகிறார்கள். அதில் அலுவலர்கள் 1544, எழுத்தர்கள் 1044 மற்றும் 41 கடைநிலை ஊழியர்கள் உள்ளனர். ஆனால் மித்ரா கமிட்டியின் பரிந்துரை படி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4707 எனவும் அதில் அலுவலர்கள் 2911, எழுத்தர்கள் 1344, மற்றும்  கடைநிலை ஊழியர்கள் 452 என இருந்திருக்க வேண்டும்.

அதாவது 31/03/2022 படி மொத்த காலிப்பணியிடங்கள் 2078 எனவும் அதில் அலுவலர்கள் 1367, எழுத்தர்கள் 300 மற்றும் கடைநிலை ஊழியர்கள் 411 பேருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி இத்தனை கோடி ரூபாய் வர்த்தகத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் சுமப்பதால், மிகக் கடுமையான பணிச் சுமைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.  இவை ஒருபுறம் என்றால் நிர்வாகத்தின் இந்தச் செயலால் நம் சமூகத்தில் இருக்கும் இளைஞர்களின் வேலை வாய்ப்பும் மறுபக்கம் அநியாயமாக  மறுக்கப்படுகிறது. இது ஓர் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல். மேலும் வயது வரம்பு முடிந்துவிட்டதால் கிளரிக்கல் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு இந்த ஆண்டு அலுவலர்களாக பணியில் சேர இருந்த ஒரு வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. அதேபோல் சிலருக்கு அடுத்த ஆண்டு அலுவலராக சேரமுடியாமல் அதற்கான வயது வரம்பும் இந்த ஆண்டோடு முடிந்துவிடும்.

விடியல் நிச்சயம்!

இப்படி எதனைப் பற்றியும் கவலை கொள்ளாமல், வங்கியின் வளர்ச்சியில் அக்கறையில்லாமல், எந்த சட்டத்தையும் மதிக்காமல் தமிழ்நாடு கிராம வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பினை திரும்ப பெற்று சரியான காலிப்பணியிடங்கள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை ஏதோ ஒரு வங்கி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மைக்கு இது ஓர் உதாரணம். விழித்து கொண்டால்… விடியல் நிச்சயம்!

One comment

  1. போதுமான இடங்களுக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யாமல் இங்கு வேலையின்மை உருவாக்கப்படுகிறது ?

Comment here...