நெஞ்சுக்கு நீதி – திரை விமர்சனம்

நாகநாதன்

இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 பார்க்காதவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம். அதன் தமிழாக்கம் தான் இது.

வெளிநாட்டில் படித்துவிட்டு, அங்குள்ள இந்திய அடையாளத்தை உண்மை என நம்பி, பதவியேற்ற மூன்றாம் நாளிலேயே வேறு ஒரு ஊருக்குப்  புதியதாய் மாற்றலாகி வருகிற ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் சட்டம் காக்கும் போராட்டமும், சாதியத்தின் கோரமுகம் அவரைத் தாக்கும் அதிர்ச்சியும்தான் படம்.

நான் வங்கியில் பணி புரிந்த போது என்னுடன் மத்திய பிரதேசத்திலிருந்து மாற்றலாகி வந்த ஒரு தோழர், “அங்கெல்லாம் உயர் சாதியினரை கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தான் ஒருவரும் மதிக்கவே மாட்டேன் என்கிறார்கள்” எனப் புலம்புவார். அதன் காரணம் எதுவென அறியமுடியாதவராக அவர் வளர்க்கப் பட்டிருந்தார். ஆனால், உண்மையில் சாதியின் வீச்சு கொஞ்சம் மட்டுப் பட்டிருப்பதற்குக் காரணம் இடது சாரி மற்றும் பகுத்தறிவு அரசியல் தான். இந்த நிலை வட இந்தியாவில் இன்றும் காண முடியாததால் திரைப்படத்தின் இந்தி மூலம் இயல்பாய் இருந்தது. இங்கு கொஞ்சம் மாற்றம்; கொஞ்சம் கல்வி கிடைத்திருக்கிறது. ஆகவே, தமிழ் வடிவம்  கொஞ்சம் நெருடலாய் இருக்கிறது.

ஆனால் சாதியின் வடிவம் பெரும்பாலான மனித மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. அதன் பலப்பல அடையாளங்கள்  தான் உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உடுமலை சங்கர், மேலவளவு, அரியலூர் நந்தினி, போன்ற நிகழ்வுகள். ஏன் சமீபத்தில் திருப்பூரில் ஒரு பட்டியலின அங்கன்வாடி பணியாளர் சமைத்ததை சாப்பிட மறுத்து தூக்கி குப்பையில்  எறிந்த சம்பவம், பட்டியலின ஊராட்சி தலைவரை தேசியக்கொடி ஏற்றவிடாத சம்பவம், நாற்காலியில் அமர விடாத கொடுமை எல்லாம் இன்னும் சாதிக் கொடுமைகளை பறை சாற்றிக் கொண்டுதான் உள்ளது. என்ன கொட்டாங்குச்சியில் தண்ணீர் தருவதற்கு பதில் பிளாஸ்டிக் போத்தல் அல்லது பேப்பர் கப்பில் சாதி கடத்தப் பட்டுவிட்டது. ஆனால் இன்னும் பத்திரமாய் இருக்கிறது.

படத்தில் வசனங்கள் தெறிக்கவிடப் படுகின்றன. உதயநிதி ஸ்டாலின் இயக்குநர்  நடிகராக அளவாக வீரதீர சாகசங்களை நிகழ்த்தாத காவல்துறை அதிகாரியாக  அடக்கி வாசித்திருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி உயர்சாதி இன்ஸ்பெக்டராக அட்டகாசமான நடிப்பு; இளவரசு ஆமாம் சாமி சப் இன்ஸ்பெக்டர்.

ஊருக்கு வெளியே சுதந்திரமாய் நிற்கும் அம்பேத்கர் சிலை, ஊருக்குள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப் படும் அவலம், அவரை சாதி சங்கத் தலைவராக மாற்ற முயற்சிக்கும் அரசியல்; சாதி இல்லை எனச் சொல்லும் பெரியாருக்கும் கூண்டு; சாதியப் படிநிலைகளை காவல் துறையினர் புரிந்து கொண்டுள்ள கருத்தாக்கம், உயர் சாதி இன்ஸ்பெக்டர் உயர் சாதி பணக்காரர்களுடன் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் கேவலம், சி.பி.ஐ அதிகாரி மாநிலக் காவல் துறை அதிகாரிகளை மரியாதைக் குறைவாக எண்ணுவது, இந்தி குறித்த சொல்லாடல், அரசியல் தலையீடுகள், நேர்மையாய் பணிபுரியும் மருத்துவருக்கு  அனிதா என்கிற பெயர், நகராட்சியிலிருந்து வந்த துப்புரவு இயந்திரத்தை பயன் படுத்தத் தெரியாமல் விழிக்கும் காவல்துறையினர் போன்றவை எல்லாம் அழகாய் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. சாதி அரசியலால் உந்தப்பட்ட இளைஞன் வன்முறைப் பாதையைத் தெரிவு செய்வது, பின் நல்லதொரு காவல் அதிகாரியை சந்தித்ததால் அவருக்கு ஒத்துழைக்க விழையும் போது கிரிமினல் இன்ஸ்பெக்டரால் கொல்லப்படுவது போன்ற காட்சிகள் உணர்ச்சிகரமாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. ஆரியின் நடிப்பு நன்றாக இருந்தாலும் அவர் பாத்திரத்தை இன்னும்  நன்றாக வடிவமைத்து இருக்கலாம்.

ஊர்ப்புறத்தில் ஒற்றை ஆளாகத் தேநீர் குடிப்பதில் ஆரம்பித்த படம் அனைவரையும் அதே தேநீரகத்தில் தேநீர் குடிக்க வைப்பதாக முடிகிறது.

வெந்து தணிந்த காட்டில் அக்கினிக் குஞ்சாய் ஆங்கோர் மரப்பொந்திடை மயங்கிக் கிடந்த மனித மிருகங்களால் வேட்டையாடப்பட்ட சிறுமி சத்யாவின் கிடைத்தலோடு படம் நிறைவுறுகிறது. அந்த மரப்பொந்தின் மேல் நான்கு முட்டைகளோடு ஒரு சின்னஞ்சிறிய பறவைக் கூடு காட்சிப் படுத்தல் மிக அழகானது.

காவல் அதிகாரி விசாரணைக்கு காலனி செல்கிறபோது அந்த எளிய மக்களின் புறத்தோற்றம், நாய்,பூனை, ஆடு, பன்றி என சகல உயிரனங்களின் பார்வைப் பரிமாற்றங்கள் எல்லாம் ரசிக்க வைக்கும் அழகு, வெறும் அழகியல் மட்டுமல்ல, மாறாக அன்பு செலுத்தும் பாங்கு.

சத்தமாப் பேசினாலே சட்டம் பேசுகிறாயா என்கிற ஊரில் சட்டம் பேசினால் என்ன கிடைக்கும்?

எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தால் போதும். ஆனால் இந்த மொழியைக் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பது ஆணவம்.

நடுநிலை என்பது நடுவில் இருப்பதல்ல. மாறாக நியாயத்தின் பக்கம் நிற்பது..

கீழ இருப்பவர்களெல்லாம் சேர்ந்து ராஜாவை உருவாக்கினார்களா இல்லை ராஜா தனக்குக் கீழ் எல்லோரையும் உருவாக்கினாரா?

போன்ற நறுக் நறுக் வசனங்கள் யுகபாரதியும், அருண்ராஜா காமராஜாவும்.

கூத்தின் போது வருகிற பாடல் மட்டும் ஓகே. இப்படத்திற்கு பாடல் தேவையுமில்லை. ஒளிப்பதிவு பரவாயில்லை.

இறுதியாக படத்தின் மையம் சட்டமா, சாதியா என்றால் சட்டம்தான் என்கிறது. அதன் ஊடாக சாதியம் பேசப்படுகிறது. அதன் வலி சொல்லப் படுகிறது. சட்டத்தின் வழியே சாதியம்  தகர்க்கப் படுமா?

Comment here...