இரண்டாம் இதயம்

நூல் விமர்சனம்

அண்டொ

நம் தோளில் கை போட்டபடி உரையாடுவதைப் போன்ற ஒரு நடையில் தன் ”இரண்டாம் இதயம”’ நூலை எழுதியுள்ளார் எழுத்தாளர் ஜா.மாதவராஜ் அவர்கள். பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாக இது வெளியிடப்பட்டுள்ளது.

எப்போதும் அவரது எழுத்து நடை தனித்துவமானது. வாசக மனங்களுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து சொற்களை கோர்ப்பதில் வல்லவர். இந்த நூல் அவரது ”தீராத பக்கங்கள்” என்னும் வலைப்பூவில் அவர் எழுதிய பதிவுகளின் தேர்வு செய்யப்பட்ட தொகுப்பாகும்.

தான் வாழ்வில் எதிர்கொண்ட சுவையான சம்பவங்கள், சுவாரஸ்யமான மனிதர்கள், தன் படைப்புலக அனுபவங்கள், இழப்புகள், நெகிழ்வான தருணங்கள், மறக்க முடியாத நினைவுகள் என பலவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு தான் இந்நூல்.

அவரே எழுத்தாளராகவும், தொழிற்சங்கவாதியாகவும், ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், முற்போக்கு சிந்தனை கொண்ட களப்பணியாளராகவும் இருப்பதால் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்வைக் காட்டிலும் அதிக மனிதர்களோடு பழகியவராகவும், சமூகத்தின் அறியப்பட்ட ஆளுமைகளோடு நெருங்கிப் பழகியவராகவும், எதையும் ஒரு கலைப்பார்வையோடு பார்க்கும் பழக்கமுடையவராகவும் இருப்பதால் இந்நூலில் அவர் எழுதும் பல சம்பவங்கள் வெறும் வாழ்வியல் அனுபவங்களாக மட்டும் இல்லாமல் நமக்கு புதிய சுவையான தகவல்களாகவும்  இருக்கின்றன.

டெஸ்டிமோனா, சண்முகவள்ளியக்கா, அழியாத கோலங்கள், டார்க் ரூம் போன்ற பல பதிவுகள் ஒரு சிறுகதைக்கானது. அவர் தன் நினைவுகளை மீட்கும் போது நமக்கு அது காட்சியாகிறது. இந்த நூலின் மற்றொரு சிறப்பான அம்சம் தன் அனுபவங்களை எந்தவித போதனைகளும் இன்றி மிக இயல்பாக நம் முன் விவரிக்கிறார். எங்கேயும் அவர் எதற்கும் எத்தீர்வையும் முன்வைத்து ஒரு தனித்த உரையாடலை நிகழ்த்தவில்லை!

எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுசாமி, உதயசங்கர், கோணங்கி, எஸ்.ரா போன்ற பலரோடு அவர் பயணித்த அனுபவங்களை சுவாரஸ்யமாக பதிவு செய்கிறார்.

அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமையான எழுத்தாளர். ஜெயகாந்தனின் மூத்த மருமகன் என்பதால் அவர் தன் காதல் அனுபவங்களை கோர்த்த விதமாகட்டும், அதன் தொடர்ச்சியாக அவருக்கும், ஜெயகாந்தனுக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் ஆகட்டும், பின்னர் அவர் ஜெயகாந்தனுக்கு எழுதிய கடிதத்தின் சாரமாகட்டும் இவைகளை அவர் விவரிக்கும் போது அது அத்தனை சுவாரஸ்யமாக வாசக மனதிற்கு கடத்தப்படுகிறது.

இந்த நூலில் பல ஊர்களை அவர் குறிப்பிட்டு எழுதினாலும் சென்னையும், சாத்தூரும்  தவிர்க்கவே முடியாத கதாபாத்திரங்களாக நூலெங்கும் உலா வருகின்றன. தன் பால்ய கால அனுபவங்களில் துவங்கி ஒரு தொழிற்சங்கவாதியாக பரிணமித்து, ‘மண்குடம்’ என்னும் சிறுகதை மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமாகி, ‘பள்ளம்’, ‘இது வேறு இதிகாசம்’ போன்ற குறும்படம், ஆவணப்படங்கள் மூலம் அவர் எடுத்த பல பரிணாமங்களை தன் அனுபவ நினைவுகளாக பதிவு செய்த விதம் தனித்துவமானது. ஏனெனில் அதில் தன் மகிமைகளை, பிரதாபங்களை பேசாமல் அவைகளின் மூலம் அவர் சமூகத்தை எப்படி உள்வாங்கி உள்ளார் என்பதையே அவை பேசுகி்ன்றன. ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது அவனைப்பற்றியது மட்டுமல்ல; அவன் வாழும் காலத்தின் மனிதர்களைப் பற்றியது. அவர்களின் பண்பாட்டை, வாழ்வியல் முறையை பற்றியது. மொத்தத்தில் சமூகத்தை ஒரு சமுத்திரமாக கொண்டால் ஒரு தனிமனிதனின் வாழ்வென்பது ஒரு துளி!

எல்லா மனிதர்களுக்கும் தன் வாழ்வில் இருந்து எடுத்துச் சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அதனை எப்படி சக மனிதனிடம் சுவாரஸ்யமாக கடத்துவது என்பது தான் பெரும் சவால்! அந்தச் சவாலை மிக எளிதாக தன் எழுத்தின் ஆளுமையால் இந்நூலின் ஆசிரியர் வெற்றிகரமாக கையாண்டிருக்கிறார்.

தன் கடந்த காலத்தை நமக்குள் கடத்திவிட அவர் இதயம் துடித்ததை அவர் எழுத்தில் உணர முடிகிறது! நமக்காக துடித்துக் கொண்டிருக்கும் அந்த இதயத்தை ஒருமுறையேனும் வாங்கி படித்துவிடுவதே நாம் அதற்கு செய்யும் கைமாறு!

Comment here...