பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு

உச்ச நீதிமன்றத்தின் ‘விசாகா’ தீர்ப்பு – 1997

என்.எல்.மாதவன்

பெண்களுக்கு பணியிடங்களில் பாலின வன்முறைக் கெதிராக பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு அடித்தளமிட்ட தீர்ப்புதான் 1997ல் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மைல்கல் தீர்ப்பான விசாகா தீர்ப்பு. ”இந்தியாவை மாற்றிய 10 தீர்ப்புகள்” என்ற பெயரில் ஜியா மோடி அவர்கள் எழுதிய புத்தகத்தில் விசாகா தீர்ப்பும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இத்தீர்ப்புடன், கேசவானந்த பாரதி எதிர் கேரள அரசு (1973), மேனகா காந்தி எதிர் ஒன்றிய அரசு (1978), மொஹமெட் கான் எதிர் ஷா பானு பேகம் (1985), யூனியன் கார்பைட் கார்ப்பரேஷன் எதிர் ஒன்றிய அரசு (1989) உள்ளிட்ட 10 முக்கிய தீர்ப்புகளை இந்த புத்தகம் அலசுகிறது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலிலிருந்து காத்துக்கொள்ள, அவர்கள் பாதுகாப்பிற்கு சில வழிமுறைகளை உச்ச நீதிமன்றம்  விசாகா தீர்ப்பில் வெளியிட்டுள்ளது.

குழந்தை திருமணத்திற்கெதிராக பிரச்சாரம்

உச்ச நீதிமன்ற கவனத்திற்கு சென்ற நிகழ்வுகளில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது திருமதி பன்வாரி தேவிக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு ஆகும். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநில அரசின் பெண்கள் வளர்ச்சி திட்டத்தின் சமூக ஆர்வலராகவும், அந்தத் திட்டத்தின் சேவகராகவும் இருந்தார். (Women’s Development Group).  1992 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணங்களை எதிர்த்து பிரச்சாரம் நடைபெற்றது.  இந்தப் பிரச்சாரத்தில் பன்வாரி தேவி தீவிரமாக ஈடுபட்டார். அவர் கிராமத்தில் ஒரு வயது கூட நிரம்பாத பெண் குழந்தைக்கு நடக்க இருந்த திருமண ஏற்பாட்டை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தார்.  இருப்பினும் குழந்தை விவாகத்தை நிறுத்த இயலவில்லை. தன்னுடைய மேல் அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் இந்த விவகாரத்தைப் பற்றி தெரிவித்தும் குழந்தை விவாகத்தை நிறுத்த இயலாமல் போய்விட்டது. பன்வாரி தேவியின் இந்த தொடர்  நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தாலும், அவரின் நடவடிக்கை கிராம மக்களில் சிலரை எரிச்சல் அடைய வைத்தது. பன்வாரி தேவியை அவர்கள் வசை மாரி பொழிந்தனர். பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டு பாலியல் வன்முறை

உச்சகட்டமாக அவருடைய கணவர் முன்னிலையில் பன்வாரி தேவியை அந்த கிராமத்தைச் சார்ந்த ஐந்து நபர்கள் பலவந்தப்படுத்தி  கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர். பன்வாரி தேவி நீதி கேட்டு பல படிகள் ஏறினார். காவல்துறையிலிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை நீதிமன்றத்தை (Trial Court) அணுகினார். அந்த நீதிமன்றமும் இக்கொடுஞ்செயலைப் புரிந்த ஐவரையும் நிரபராதிகள் என்று அறிவித்து விடுதலை செய்தது. வன்புணர்வு செய்த கொடிய மிருகங்களை குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்த நீதிமன்ற செயல் பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதி.

உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு

ராஜஸ்தான் மாநிலத்தின் ஐந்து அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) ‘விசாகா’ என்ற பெயரில் பெண்களுக்கு பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தன. பணியிட துன்புறுத்தலில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க நமது நாட்டில் சட்டம் இயற்றப்படாததால், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் எல்லா துன்புறுத்தலிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்க நடத்தப்பட்ட மாநாட்டின் முடிவுகளை (Convention on the Elimination of All forms of Discrimination against Women – CEDAW) வழிகாட்டுதலாக உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் எடுத்துக் கொண்டது. இந்த மாநாடு 1980ல் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற  நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டின் முடிவுகளின் அடிப்படையில் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் 14, 15, 19 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை உச்ச நீதிமன்றம் விளக்குகிறது.

பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?

உச்ச நீதிமன்றம் விசாகா வழக்கை விசாரித்து சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. எவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்கள் என்பதற்கு முதன் முறையாக விளக்கம் அளித்துள்ளது. வரவேற்கத் தகாத எந்த வெளிப்படையான அல்லது மறைமுகமான செயலும், தொடுதல், செய்கை காட்டுதல் போன்ற எந்த நடவடிக்கையும் பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் என்று கூறுகிறது. முதலாளியோ அல்லது பொறுப்பில் இருக்கும் அதிகாரியோ துன்புறுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறது.

புகார் கமிட்டி

”எல்லா நிறுவனங்களிலும் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். அதற்கு ஒரு பெண் தலைமை ஏற்க வேண்டும். குறைந்தபட்சம் கமிட்டியில் பாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த கமிட்டியில் பெண்களின் குறைகளை அறிந்துள்ள ஒரு அரசு சாரா நிறுவனத்தை  பங்கெடுக்க வைக்க வேண்டும்” போன்ற வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற விசாகா  தீர்ப்பின் முடிவுகள் அரசியல் சட்டம் 141 வது பிரிவு படி நாட்டின் எல்லா நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். 2013 ஆம் ஆண்டு, விசாகா தீர்ப்பு வெளியிடப்பட்டு 16 ஆண்டுகள் கழித்து, பெண்கள் பணி புரியும் இடங்களில் அவர்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

குற்றங்களை தடுக்க

ஆனாலும் இன்றளவில் விசாகா தீர்ப்பு வெளியாகி கால் நூற்றாண்டு கடந்த நிலையில் கூட, ஏராளமான நிறுவனங்களில் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் கமிட்டி நிறுவப்படவில்லை என்பதுதான் உண்மை. விசாகா  தீர்ப்பின் படி குற்றம் நடந்த பின் கமிட்டி அமைத்து தீர்வு காண்பதை விட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு முன்கூட்டியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதற்குரிய அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்பதுதான் சிறந்தது.

One comment

  1. Good write up about an important judgement that would give some relief for the large oppressed section of our society. Com Madhavan should write about rest of the judgements too.

Comment here...