நூற்றாண்டு கண்ட நாயகன் – தோழர். என். சங்கரய்யா.

சே.இம்ரான்

ஒரு கட்சியின் தலைமையை யார் கைப்பற்றுவது என்று அடிதடி, கோஷ்டி மோதல்கள் அக்கட்சியின் பொதுக்குழுவில் நடந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான், தன் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்ததும் தான் வகித்து வந்த மாநில செயலாளர் பதவியை தானே மனமுவந்து துறந்து வெறும் அடிப்படை உறுப்பினராக தன் பங்கை தான் சார்ந்த கட்சிக்கு இன்னும் ஆற்றிக் கொண்டிருக்கிறார் அவர். பல்லாயிரம் கோடி குதிரை பேரங்கள் மூலம் கட்சித் தாவல்களும், ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடந்தேறிக் கொண்டிருக்கும் இதே காலக்கட்டத்தில் தான்,  தமிழக அரசு ‘ தகைசால் தமிழர் ‘ விருதின் மூலம் தனக்கு வழங்கிய 10 லட்சம் ரூபாய் முழுமையையும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கே வாரி வழங்கினார் அவர்.

ஜூலை 15, 1922ல் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பிறந்த என். சங்கரய்யாவின் வரலாறும் இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறும் சற்றேறக்குறைய ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது!

1937ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட என்.சங்கரய்யா, அதன் முற்போக்கு சமூக கருத்துக்களை பரப்புவதிலும்,   இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். பிறகு  இந்திய கம்யூனிச இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர், மதுரை மாணவர் சங்க செயலாளராக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மறியல்கள், பேரணிகள் மற்றும் சாதி கொடுமைகளுக்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என தன் பதின் பருவத்திலேயே சமூகத்தின் மீதான தன் அக்கறையையும், ஆளுமையையும் செலுத்தத் துவங்கிவிட்டார். விளைவாக கல்லூரி காலத்திலேயே அவர் மீதான கைது படலங்கள் துவங்கிவிட்டது. வெவ்வேறு காலகட்டங்களில் தன் வாழ்க்கையின் 8 ஆண்டுகளை சிறையிலும், 5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்விலும் கழித்த புரட்சியாளர் அவர்.

தன் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டு பட்டப்படிப்பை கைவிட நேர்ந்தது, எனினும் அவர் எழுத்திலும், மேடைப் பேச்சிலும் அடைந்த உயரம் மிகப்பெரியது. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நாளிதழான ‘ஜனசக்தி’யின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய அவர், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இதழான ‘தீக்கதிர்’ன் முதல் ஆசிரியரானார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அவரின் சட்டமன்ற உரைகளும், கோரிக்கைகளும், விவாதங்களும், ஆலோசனைகளும் தமிழக அரசை பல சமயங்களில் வழி நடத்தியிருக்கிறது.

‘என் ஒருவனுக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், அவை அனைத்தையும் சங்கரய்யா ஒருவருக்கே செலுத்துவேன். அவர் என்னை பல நேரங்களில் வழி நடத்தியவர்’ என்பது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வார்த்தைகள். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொண்டு வரும்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தோழர் சங்கரைய்யா. கலைஞர் கருணாநிதி மறைந்தபோது, ‘என் பிறந்தநாளை நான்கூட மறந்துவிடுவேன். ஆனால் ஆண்டுதோறும் மறக்காமல் காலை 6 மணிக்கெல்லாம் என்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லிவிடுவார். உடல் நலிவுற்ற பின்னர் அவரிடமிருந்து அழைப்பு வரவில்லை’ என்று சொல்லி வருத்தமடைந்த சங்கரய்யா கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் கண்டு கையசைத்து உருகிய காட்சி யாவரையும் கண்கலங்கச் செய்யும்!

கம்யூனிஸ்டு கட்சியின் மீதான அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தடை நீக்கப்பட்ட 1944ல் தேனி, திண்டுக்கல்லை உள்ளடக்கிய அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டக் குழுவின் தலைவராக தன் 22ம் வயதில் தொடங்கிய அவர் மாநில குழு உறுப்பினர், மாநில செயலாளர், மத்திய குழு உறுப்பினர், விவசாய சங்கத்தின் மாநில தலைவர், செயலாளர் என நீளும் பட்டியலே சொல்லும் பொதுவுடைமை இயக்கத்தின் மூலம் அவர் இந்த சமூகத்திற்கு ஆற்றிய பணிகளை!

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சாதி ஒழிப்பு சமூக போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழர்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தோழர் அவர். சங்கரய்யவை அவரின் நூற்றாண்டில் பெருமைப்படுத்தும் வகையில்  2021ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் சார்பில் முதல் ‘தகைசால் தமிழர்‘ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சுபாஷ் சந்திர போஸ், நேரு, காமராஜர் தொடங்கி இன்றைய முதல்வர் ஸ்டாலின் வரை என மூன்று தலைமுறை அரசியல் தலைவர்களுடன் நட்பு பாராட்டிய தோழர்.என்.சங்கரய்யா நூற்றாண்டைக் கடந்து ஜூலை 15ல் தன் 101ம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். சமரசமற்ற அந்த சமத்துவ நாயகனை வாழ்த்தி வணங்குவோம்!

(ஜூலை 15- சங்கரய்யா அவர்களின் பிறந்ததினம்)

One comment

  1. Long live com N Sankariah. Revolutionary greetings. It is good that articles on such leaders are to be brought out in this magazine

Comment here...