சிவக்கட்டும் இப்பூவுலகம்

க.சிவசங்கர்

“இன்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு மாபெரும் கனவை சிதைக்க மரியோ தெரோன் முயன்றார். இன்று ‘சே’ மீண்டு வந்து இன்னொரு வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இன்று வயது முதிர்ந்த தெரனுக்கு நீலவானத்தையும், பச்சைக் காடுகளையும் காணவும், அவரது பேரப் பிள்ளைகளின் முகத்தில் தவழும் புன்முறுவலை ரசிக்கவும் சே வழிசெய்துள்ளார்.”

2007ம் ஆண்டு கியூப அரசு ‘கிரான்மா’ பத்திரிக்கையில் தெரிவித்த கருத்துக்கள் இவை. இவ்வுலகமே வியந்து பார்த்த ஒப்பற்ற புரட்சியாளன் சேகுவேராவைக் கொன்ற பொலிவிய இராணுவ வீரரான மரியோ தெரனுக்கு அதே கியூப மருத்துவக்குழுவே கண் பார்வையை மீட்டுக்கொடுத்தது. சமநிலையற்ற போட்டிகளையும், வெறுப்புகளையும், அதனால் விளையும் சண்டைகளையும், போர்களையும் சுற்றியே தங்கள் சமூக அரசியலை கட்டமைத்துக் கொள்ளும் அரசுகளுக்கு இடையே இவ்வுலகில் மனித மாண்புகளையும், மனித நேயத்தையும், சமத்துவத்தையும் கைக்கொள்ளும் சித்தாந்தம் இடதுசாரி சோசலிச சித்தாந்தம் மட்டுமே என்பதற்கு இது போன்ற பல உதாரணங்கள் வரலாறு நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன.

வாழைக் குடியரசு

உலக வரலாற்றில் மிக நீண்டகாலமாக ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தவர்கள் தென்னமெரிக்க மக்கள். துவக்கத்தில் ஸ்பெயின், பிரான்சு மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் காலனியாதிக்கத்தில் இருந்த தென் அமெரிக்கா இறுதியாக உலக ஏகாதிபத்தியமாக உருப்பெற்ற அமெரிக்காவின் கீழ் வந்தது.

அமெரிக்காவின் கொல்லைப்புறம் என்று அழைக்கப்படும் அளவிற்கு தமது கைப்பாவை அரசுகளின் மூலம் தென்னமெரிக்க நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். விவசாய நிலங்களும், குறிப்பாக வாழை மரங்களும் நிறைந்த மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளை தனது பகாசுர நிறுவனங்களின் மூலம் அவை நேரடியாகக் கட்டுப்படுத்தின. மிகக்குறிப்பாக மத்திய அமெரிக்க நாடுகளில் வாழைத் தோட்ட உடைமைக்காரக் கம்பெனிகள் அந்நாட்டு அரசுகளை மறைமுகமாக நிர்வகிக்கும் அளவிற்கு செல்வாக்கு செலுத்தின. அதனாலேயே லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு “வாழைக் குடியரசு (Banana republic)” என்ற பதம் உருவானது.

இவ்வாறு சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக அடிமைப்பட்டுக் கிடந்த தென்னமெரிக்காவில் முதல் கலகம் கியூபாவில் இருந்து துவங்கியது. 1959 ஆம் ஆண்டு புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா தலைமையிலான புரட்சிக்குழு பாடிஸ்டா தலைமையிலான அமெரிக்க அடிமை அரசை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் தென்னமெரிக்காவில் முதன்முறையாக புரட்சிகர இடதுசாரி சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திர அரசு ஆட்சிக்கு வந்தது. மேலும் இதன் மூலம் இந்த புரட்சிகர சிந்தனை தென்னமெரிக்கா முழுவதும் பரவத் துவங்கியது. உலக ஏகாதிபத்திய அரசுகளின் மிகக்கொடுமையான பொருளாதாரத் தடைகளையும் மீறி இன்று வரை கியூபாவில் மிகயேல் தியாஸ் கேனல் தலைமையிலான கியூப கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது.

இளஞ்சிவப்பு அலை:

இதன் நீட்சியாக தென்னமெரிக்க நாடுகளில் 21ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் தேர்தல்களின் மூலம் இடதுசாரிக் கட்சிகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் துவங்கின. இது வரலாற்றில் “இளஞ்சிவப்பு அலை” என்று அழைக்கப்படுகிறது. இடையில் சில ஆண்டுகள் இதில் ஒரு தொய்வு ஏற்பட்டு வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்தாலும் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளாக மீண்டும் இடது அலை லத்தீன் அமெரிக்கா முழுவதும் படர ஆரம்பிப்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

அந்த வகையில் வெனிசுலாவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமெரிக்காவின் அனைத்து சித்து விளையாட்டுக்களையும் மீறி ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்று நிக்கோலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இங்கு 1999 முதல் ஹியூகோ சாவேஸ் தலைமையில் இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் 2018ம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி பெற்று ஆன்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரேடர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இது அந்த நாட்டின் 49 ஆண்டுகால வர லாற்றில் இடதுசாரிகளின் முதல் வெற்றி யாகும்.

பொலிவியாவில் இடதுசாரித் தலைவர் ஈவோ மொரேல்ஸைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சோசலிசத்திற்கான இயக்கம் என்ற கட்சியின் சார்பில் லூயிஸ் ஆர்ஸ் கேடகோரா ஜனாதிபதியாக வந்துள்ளார். மேலும் ஈக்குவடாரில் ரபேல் கோரியா, அர்ஜென்டினாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் போன்ற இடதுசாரித் தலைவர்கள் இந்த காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

ஒரே ஆண்டில் ஐந்து நாடுகளில் பரவிய சிவப்பு: 

இவற்றைத் தொடர்ந்து 2021ம் வருடம் நடைபெற்ற கொலம்பியா, ஹோண்டுராஸ், நிகரகுவா, பெரு மற்றும் சிலி ஆகிய ஐந்து நாடுகளின் தேர்தல்களிலும் இடதுசாரி சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை லத்தீன் அமெரிக்க மக்கள் இடது பக்கம் நகர்வதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

குறிப்பாக சிலியின் ஜனாதிபதியாக, இடது சாரித் தலைவர் கேப்ரியல் போரிக் பொறுப்பேற்றது புதிய வரலாற்றின் தொடக்கமாக மாறியது. இடதுசாரி புரட்சிகரக் குழுவைச் சேர்ந்த சால்வடார் அலெண்டே சிஐஏ சதி மூலம் படுகொலை செய்யப்பட்டு, 48 ஆண்டுகளுக்குப் பிறகு சிலியில் மீண்டும் ஒரு இடதுசாரி ஆட்சி சாத்தியமாகியிருக்கிறது. இதே போல 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஹோண்டுராஸ் நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி மனுவேல் செலாயாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அமெரிக்காவிற்கு வளைந்து கொடுக்காததும், வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸுடன் ஏற்பட்ட நெருக்கமும்தான் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு தென்னமெரிக்க நாடான நிகரகுவாவில் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஏவியுள்ள தொடர்ச்சியான பொருளாதார மற்றும் ராஜீய நகர்வுகளுக்கு மத்தியில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இடதுசாரியான டேனியல் ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல் பெருவிலும் பெட்ரோ காஸ்டிலோ தலைமையிலான சுதந்திர பெரு தேசிய அரசியல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கொலம்பியாவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்த காஸ்டவோ பெட்ரோ 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் பெட்ரோ. இவர் தனது துவக்க காலங்களில் புரட்சகர இடதுசாரி கெரில்லா குழுக்களில் இணைந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னமெரிக்க கண்டத்தில் மிகமுக்கிய நாடான பிரேசிலில் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் வலதுசாரி ஜனாதிபதியான போல்சனாரோவை வீழ்த்தி இடதுசாரித் தலைவர் லூலூ பெருவாரியான வாக்கு வீத வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சிவக்கட்டும் இப்பூவுலகம்

பல காலங்களாக அடிமைப்பட்டுக் கிடந்த தென்னமெரிக்க மக்கள் இப்போது விழிப்புற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கி விட்டனர். அதை சாத்தியமாக்கியவை தென்னமெரிக்க நாடுகளில் உருவான இடதுசாரி அரசாங்கங்களே. அவை ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்னிலைப்படுத்தி நவதாராளவாதத்தை நிராகரிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் தென்னமெரிக்காவில் தனது இரும்புப் பிடியை இழந்துவிட்டது. இது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்சாகமளித்திருக்கிறது. தென்னமெரிக்க, கரீபியன் நாடுகளில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, அலை மேல் அலையாக எழுந்தவாறுள்ளது. தென்னமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையிட்ட வரலாறு தற்போது தடுத்துநிறுத்தப்படும் கட்டத்தை எட்டியுள்ளது. இயற்கை வளங்களும், நிலமும், சேவைகளும் பல இடங்களில் தேசியமயமாக்கப்பட்டு  அரசுடைமையாகின்றன. நிலங்கள் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இன்னும் பல வாக்குறுதிகளை வரும் காலங்களில் இந்த அரசாங்கங்கள் நிறைவேற்றும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இலத்தீன் அமெரிக்காவின் பழங்குடி மக்கள் முதன்முதலாக ஒழுங்குபடுத்தப்பட்டு தொடர்ச்சியாகப் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களுக்காகவும், வளங்களுக்காகவும் தீரம்மிக்க போராட்டங்களை மேற்கொள்கிறார்கள். இந்த எழுச்சியை உருவாக்கியத்தில் கியூபப் புரட்சியும்,  வெனிசுவேலாவினது சவால் மிகுந்த புரட்சிப் பாதையும், அதையொட்டி இலத்தீன் அமெரிக்காவெங்கும் வீசிய இடதுசாரி அலையும் குறிப்பிட்டத்தக்க பங்களிப்பபை ஆற்றியுள்ளது.

ஸ்காண்டிநேவியன் நாடுகள் என்று அழைக்கப்படும் வடஐரோப்பிய நாடுகளான நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய ஐந்து நாடுகளுமே தற்போது இடதுசாரி அரசாங்கங்களின் கைகளில் வந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. எனவே தென்னமெரிக்காவைப் பற்றிப் படர ஆரம்பித்திருக்கும் இந்த அலை விரைவில் உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவட்டும். இப்பூவுலகம் சிவக்கட்டும்.

One comment

  1. இடதுசாரி ஒன்றே மாற்று என்பதை தென் அமெரிக்காவும் ஸ்டாண்டினேவியன் நாடுகளும் மற்ற ஏனைய நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது குறித்த இக்கட்டுரை அருமை. கட்டுரையின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

Comment here...