தற்காலிக ஊழியர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி

ச. செந்தமிழ்ச்செல்வன்

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்ட புதுவை பாரதியார் கிராம வங்கியில்  ₹60 என்ற சொற்ப ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையாக சுரண்டப்பட்டனர். அதன் பிறகு ஓராண்டு கழித்து 2009 ஆம் ஆண்டு தான் வங்கியின் நிரந்தர ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். அப்படி நிரந்தர ஊழியர்களை விட அதிக காலம் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் வங்கி கிளையில் தூய்மைப் பணியில் தொடங்கி வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வங்கியில் வாடிக்கையாளர்களாக ஆக்குவது, அவர்களுக்கு வங்கி படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பது, கடன்களை வசூல் செய்ய உதவி புரிவது, விடுமுறை நாட்களிலும் கூட வங்கிக்காக வாடிக்கையாளர்களை சென்று சந்திப்பது என்று இந்த வங்கியின் வளர்ச்சிக்காக கடுமையான உழைப்பினை செலுத்தி உள்ளார்கள்.

உழைப்புச் சுரண்டல்

இப்படி நீண்ட காலம் இந்த வங்கியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் , போனஸ் ஆகியவற்றை வழங்காமல், மிக மிக குறைந்த ஊதியத்தில் அவர்களின் உழைப்பை சுரண்டுவதிலேயே குறியாக இருந்தது நிர்வாகம்.  

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு இந்த வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் வழங்க கோரியும், அவர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக உதவி தொழிலாளர் நல ஆணையரிடம் முறையிடப்பட்டது. மேலும் 2018 ஆம் ஆண்டு, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு PF பிடித்தம் செய்யப்படவில்லை என்றும், அவர்களுக்கு PF பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி PF கமிஷனர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

நிர்வாகத்தின் பொய் அம்பலமானது

PF கமிஷனர் அவர்களின் விசாரணையின் பொழுது, வங்கி நிர்வாகத்தின் சார்பில் வாதிட்டவர்கள், வங்கியில் தற்காலிக ஊழியர்கள் என்று யாரும் வேலை செய்யவில்லை எனவும், கிளைகளில் அப்படி யாரையும் பணியமர்த்தவில்லை எனவும் பொய்யாக வாதிட்டனர். மேலும் சில கிளை மேலாளர்கள் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தற்காலிக ஊழியர்களுக்கு எதிராகவும் பொய்சாட்சியம் அளித்தனர். 

ஆனால் உண்மையின் பக்கம் நின்று, தற்காலிக ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத் தரும் உறுதியுடன் வாதிட்ட புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்கம் நிர்வாக தரப்பின் பொய் கூற்றுக்களை அம்பலப்படுத்தியும், தற்காலிக ஊழியர்கள் பணி புரிவதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும் வாதாடியது. மேலும் PF அதிகாரி, வங்கிக் கிளைகளுக்கு நேரடியாக சென்று அங்கு மிகவும் குறைந்த ஊதியத்தில் பல ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்கள் பணி புரிகிறார்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தார். இறுதியாக PF கமிஷனர் அவர்கள் 37 தற்காலிக ஊழியர்களுக்கு ₹34,36,118/-  PF தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். 

இரண்டு ஆண்டுகளில் 13 முறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதும், ஊழியர் சங்க பொதுச் செயலாளருக்கு விசாரணைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்காலிக ஊழியர்களின் உரிமைகளை பெற்றுத்தரும் பொருட்டு ஒவ்வொரு முறை விசாரணைக்கு செல்லும் பொழுதும் சொந்த விடுப்பில் சென்று உண்மையை நிலை நிறுத்தினார். 

நிர்வாகத்தின் மேல் முறையீடு தள்ளுபடி

ஆனால் நிர்வாகமோ வழக்கம் போல் தற்காலிக ஊழியர்களுக்கு PF தொகையை செலுத்தாமல், மேலும் காலம் தாழ்த்தும் நோக்கில் சென்னை லேபர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. 2020 ஆம் ஆண்டிலிருந்து ஏழு முறை நடைபெற்ற விசாரணைகளில் ஒரு முறை கூட சரியான காரணங்களை கூறவில்லை என்றும், காலம் கடத்தும் நோக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியும் லேபர் கோர்ட்டில் கடந்த ஜூன் 30, 2022 அன்று நிர்வாகத்தின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. 

நம்பிக்கையின் ஒளி

தோழர்களே, இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வங்கிக்காக உழைத்த தற்காலிக ஊழியர்களை உதாசீனப்படுத்திய நிர்வாகத்திற்கு கிடைத்த சம்பட்டி அடி. உழைப்பு சுரண்டலுக்கு எதிரான வெற்றி. ”இந்த வங்கியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து, எங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டோம்” என்று வேதனைப்பட்ட தற்காலிக ஊழியர்கள் வாழ்க்கையின் நம்பிக்கை ஒளி. 

இந்தத் தீர்ப்பு தற்காலிக ஊழியர்களுக்கு PF பிடித்தம் செய்வதற்கு மட்டும் அல்ல, புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பாக உதவி தொழிலாளர் நல ஆணையர் அவர்களிடம் அளிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை மனுவிற்கும் வலு சேர்க்கும். நிச்சயம் அதிலும் வெற்றி கிட்டும்.

Comment here...