நேர் காணல்: த பழனிச்சாமி, பொதுச் செயலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கம்.
பேட்டி: எஸ்.வி.வேணுகோபாலன்
C.P.Krishnan
ஜூலை 21 அன்று முற்பகல் வள்ளுவர் கோட்டத்தின் அருகே மலைக்க வைத்தது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக முகவர்கள் நடத்திய போராட்ட இயக்கம்! ஏராளமான பெண் தோழர்கள், சிலர் கைக்குழந்தைகளோடு! சென்னையின் வெப்பமோ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தின் மிரட்டலோ எதுவும் அவர்களை ஒடுக்கி விட முடியாது என்பது தெளிவாகப் புலப்பட்டது. தென் கோடி குமரி முதற்கொண்டு பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும் வந்திருந்த கூட்டம், மிகக் குறுகிய காலத் தகவலில் திரட்டப்பட்டது என்ற செய்தியே வியக்க வைத்தது. அது மட்டுமல்ல, சங்கம் தொடங்கப்பட்ட 25ம் நாள் 1,500க்கு மேற்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்து எப்படி இப்படியோர் அதிரடி தர்ணா போராட்டம் சாத்தியமானது என்பதும் வியக்க வைத்தது.
‘எதுகை மோனையோடு வேறு தளங்களில், வேறு களங்களில் பேசலாம், ஆனால் இது நம் போராட்டம், உயிர்ப்போடு நம் விஷயங்களை இங்கே பேசுவோம்’ என்று ஒலித்த குரல் சற்று வித்தியாசமாக ஈர்த்தது. ‘… எப்படியாவது வாடிக்கையாளரிடம் இருந்து புகார்கள் பெற்று என் மீது நடவடிக்கை எடுத்துவிட முடியும் என்று நம்புகிற நிர்வாகமே, நாங்கள் எல்லோரும் அர்ப்பணிப்போடு மக்கள் சேவையில் இருப்பவர்கள், அவர்கள் எங்கள் தூய்மையை அறிவார்கள்’ என்று அடுத்து அந்தக் குரலில் தெறித்த உறுதிப்பாடு மேலும் நெருக்கமாக நோக்க வைத்தது.
அவர் வேறு யாருமல்ல, அசாத்திய துணிவோடும், நம்பிக்கையோடும் வணிக முகவர்களை அணி திரட்டியுள்ள சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் பழனிச்சாமி தான்! ஆவேசமான தர்ணா போராட்டத்தின் அடுத்த நாள் தேனாம்பேட்டை நரேஷ் பால் மையத்தில் வைத்து அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் மிகவும் வித்தியாசமாக அமைந்த ஒன்று, இப்போதைய போராட்டத்தின் உள்ளடக்கம் மட்டுமல்ல, இப்படியான களத்தில் முன்னிற்கும் ஒரு போராளியின் உருவாக்கம் பற்றியும் சுவாரசியமான செய்திகள் கிடைத்தது. அதன் சில முக்கிய பொறிகள் உங்களுக்காக இங்கே:
வணக்கம் தோழர், நேற்று போராட்டம் நிறைவுக்கு வந்து, மதிய உணவு முடித்துக் கொண்டு பார்க்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்…?
உணவு கொஞ்சம் தாமதமாகத் தான் எடுத்துக் கொண்டோம் தோழர். வந்தவர்கள் எல்லோரும் பத்திரமாக, பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்திச் சொல்லி வழியனுப்பி விட்டுத் தான் நிமிர முடிந்தது. மிகுந்த மன நிறைவு நேற்று. நல்ல எண்ணிக்கையில் பங்கேற்பு, 1600 பேருக்கு வந்திருப்பார்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 15 மண்டலங்களில் இருந்தும் வந்தார்கள், மண்டலத்திற்கு நூறு பேர் குறையாது!
வாழ்த்துகள், இதில் பெண்கள் பங்கேற்பு நிறைய பார்க்க முடிந்தது, எத்தனை பேர் வந்திருப்பார்கள்?
அவர்கள் தான் அதிகம், அறுபது சதவீதத்திற்கு மேல், ஏனென்றால், வணிக முகவர்களிலும் பெண்கள் அறுபது சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதே அளவு பிரதிநிதித்துவம் போராட்டத்தில் இருந்தது குறிப்பிட வேண்டியது. அதிலும், மூன்று மாதக் குழந்தை உள்பட ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளோடு வந்தவர்கள் நான் பார்த்தவரையில் 13 பேர். ஏழு மாதக் கர்ப்பிணித் தோழர் ஒருவர் வந்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அருமையான விஷயம்…பாராட்டுதல்கள்! போராட்டம் தொடங்கும் முன்பு பதட்டம் இருந்திருக்கும் அல்லவா, எவ்வளவு பேர் வருவார்கள் என்று ?
ஆமாம், மிகவும் அதிகமாக வந்துவிடப் போகிறார்களே, சமாளித்துக் கட்டுப்பாடோடு நடத்தி எல்லோரையும் பத்திரமாக அனுப்ப வேண்டுமே என்ற பதட்டம் தான்…ஆயிரம் பேருக்கு நிச்சயம் குறையாது என்பது முன்னரே உறுதிப்பட மாவட்ட வாரியாகத் தோழர்கள் தெளிவாகப் புள்ளிவிவரங்கள் அனுப்பி இருந்தனர். மற்றபடி, தர்ணா திட்டமிடல், பத்திரிகை செய்தி, முழக்கங்கள் போன்ற தயாரிப்புப் பணிகளுக்கு உறக்கத்தை இழந்திருப்பேன், பங்கேற்பு பற்றிய உறுதியான நம்பிக்கை இருந்தது.
தர்ணா தேதியை யார் முடிவெடுத்தது, உங்கள் சங்கமா, உங்களுக்கு அரவணைப்பாக வழி நடத்தும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனமா?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் தான் அந்த முடிவை எடுத்துக் கொடுத்தது. அப்படித் தான் சொல்ல முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் முகவர்களை, ஒரு தனியார் ஏஜென்சியிடம் தள்ளி விடுவது, எங்கள் வாழ்வாதாரம் பறிப்பது என்று முடிவெடுத்தது வங்கி நிர்வாகம் தான். அதற்கு நாங்கள் யாரும் இசைவு தெரிவிக்கவில்லை என்றதும் எங்களை நோக்கி அவர்கள் அடுத்தடுத்துத் தொடுத்த தாக்குதல்கள், நெருக்கடி, மிரட்டல்கள் தான் எல்லோரையும் ஒரு போராட்டத்தை நோக்கித் திரட்ட வைத்தது. நீயாக வேலையை விட்டு விட்டு ஓடிவிடு என்று எங்கள் கையாலேயே ஒரு ராஜினாமா கடிதத்தை அவர்கள் திணிக்கும்போது எழுந்த கொந்தளிப்பு தான் இது.
யார் அந்த தனியார் ஏஜென்சி, திடீர் என்று எப்படி உள்ளே நுழைகிறார்கள், இதெல்லாம் எப்போது வெடித்தது?
2010ல் இருந்து எங்கள் வங்கியில் வணிக முகவர்கள் திட்டம் அமலில் இருக்கிறது. நான் 2012ல் இணைகிறேன். அப்போதெல்லாம் ஒப்பந்தப் படி இணைக்கப்பட்டோம். வங்கியோடு நேரடி ஒப்பந்தம் அது. ஆனால், திடீர் என்று எங்கள் மண்டலத்தில் ஜூன் 10 அன்று முகவர்களை அழைத்தார்கள். நிர்வாக அதிகாரியோடு, இன்டெக்ரா என்ற தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியும் வந்து நின்றார். இன்டெக்ரா வழியாகத் தான் நாங்கள் முகவர்களாக இயங்க முடியும் என்றார்கள். பணிப் பொறுப்புகள் இரண்டு மடங்கு கூட்டி அறிவித்தார்கள், ஊதியத்தில் இருபது சதவீதம் குறைத்தார்கள். அதாவது 200 சதவீத வேலை, 80 சதவீத வருவாய்! அது மட்டுமல்ல, எங்கள் பணிகளுக்கான சர்வீஸ் பொருள்கள் அனைத்தும் இனி எங்கள் செலவில் நாங்களே வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இனிமேல் இன்டெக்ரா தான் எல்லாம், வங்கிக்கும் எங்களுக்கும் நேரடி உறவு இல்லை என்றார்கள். ஒரு பேரிடி எங்கள் தலையில் விழுந்த நாள் அது….
உங்களுக்கு உடனடியாக என்ன உணர்வு ஏற்பட்டது?
எல்லாம் முடிந்துவிட்டது…இனி மேல் ஒன்றுமில்லை என்று தான் கசந்து போனது. அன்று இரவு தூக்கம் போனது. ஆனால், மறுநாள் வேறு மாதிரி விடிந்தது. காரைக்கால் அருகே முகவர்கள் நெடுங்காடு எனுமிடத்தில் ஒன்று கூடி அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க இருக்கிறார்கள் என்று சேதி வந்தது….120 கிமீ தூரமும் இரு சக்கர வாகனத்தில் எதிர்கால வாழ்க்கையின் கேள்விக்குறி உந்தித் தள்ள போய்ச் சேர்ந்தேன், அவர்களும் பேசி முடித்துச் சோர்வோடு கலைய இருந்த நேரம் நுழைந்தேன்….இத்தனை பேர் இருக்கும்போது ஏன் போராடக் கூடாது என்ற கேள்வியை முன் வைக்கவும் அது பன்மடங்கு அதிகமாக எதிரொலித்தது. இசைவு தர மாட்டோம் என்று மறுக்கும் முதல் குரலை அங்கே எடுத்தோம்.
தமிழகம் முழுவதுமுள்ள முகவர்களுக்கு எப்படி இந்தக் குரலை உடனே கொண்டு போய்ச் சேர்த்தீர்கள்?
குறிப்பிட்ட மண்டலத்திற்குள் ஒருவருக்கொருவர் தொடர்பு இருக்கும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒருவரைத் தேடிப்பிடித்து அந்தந்த மண்டலங்களுக்குள் செய்திகள் வேகமாகப் பரவத் தொடங்கி விட்டது. நிர்வாகத் தரப்பில் அதன் எதிர்வினைகளும் வேகமாக வந்தது.
இன்டெக்ரா நிறுவனம் வேறு எந்த வங்கியில் முகவர்களை ஒருங்கிணைத்துள்ளது?
அது வெட்கக் கேடான கதை. கனரா வங்கியில் முகவர்கள் ஏஜென்சி எடுத்து ஒழுங்காக நடத்த முடியாமல் தோற்று, நிர்வாகத்தால், மூட்டை கட்டிக் கொண்டு போ என்று விரட்டப்பட்ட கதை. ஆனால், இங்கே எங்களை அவர்கள் இப்போதே மிரட்ட ஆரம்பிக்கவும் எதிர்ப்பு இன்னும் கூடியது.
அவர்கள் நேரடியாக முகவர்களோடு பேசுகிறார்களா?
ஆமாம். வெறும் பேச்சு அல்ல, அதட்டல் உருட்டல் மிரட்டல் பேச்சு. பேசாமல் கையெழுத்து போடு என்று சமாதானம் சொல்வது, மறுத்தால் மிரட்டுவது, எப்படியிருந்தாலும் எங்கள் மூலம் தான் வேலை செய்ய வேண்டி வரும்…இப்போதே ஒழுங்காகக் கையெழுத்து போடவில்லை என்றால், உங்களை மாதிரியான ஆளுங்களை வச்சு செய்வோம் என்று மிகவும் கொச்சையாகப் பெண்களிடமும் பேசி இருக்கிறார்கள். அவர்களும் அதற்கு அஞ்சவில்லை, மிரட்டல் பேச்சுகளைப் பதிவு செய்து புகார் அளிப்போம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.
சங்கம் எப்போது உருவாகிறது, உங்களுக்கு ஆதரவுக் கரம் எங்கிருந்து வெளிப்பட்டது?
நமக்கு யார் ஆதரவு என்று யோசிக்கையில், நிரந்தர ஊழியர்களில் சிலர் BEFI சங்கம் தான் உங்களுக்கு பக்கபலமாக நிற்கும் என்று ஊக்குவித்தனர். சேலத்தில் தோழர் தீனதயாளன் அவர்களை அழைக்கையில், முதல் உரையாடலிலேயே அத்தனை உற்சாகமும் உறுதியும் நம்பிக்கையும் அளித்தார்.
இதனிடையே முகவர்கள் மத்தியில் வெவ்வேறு மண்டலங்களில் பெருகிய ஆதரவு, ஒரு கூட்டமாக, ஏன் மாநாடாக எல்லோரையும் திரட்டுவோம் என்று ஜூன் 26 அன்று பெரம்பலூரில் கூடினோம், 554 தோழர்கள் வந்திருந்தனர். சங்கத்தை அங்கே வைத்துத் தொடங்கிவிட்டோம், நூற்றுக் கணக்கில் உடனடியாக உறுப்பினர்கள் சேரத் தொடங்கி விட்டனர்.
அந்த அடிப்படையில் உடனே தொழில் தாவா எழுப்புவது என்று சென்னையை வந்தடைந்தோம். இங்கே IOBSA தலைவர்களும், BEFI தமிழ்நாடு நிர்வாகிகளும் உடனடியாக எங்களோடு அமர்ந்து விவாதித்து மனுவைத் தயாரித்து நேரடியாகத் தொழில் ஆணையர் அலுவலகத்தில் தலையீடு கோரி, எங்கள் யாரையும் பணியிலிருந்து நிறுத்தக் கூடாது என்ற உத்தரவைப் பெற்றுத் தந்தது மிகப் பெரிய ஆறுதல். அதையும் நிர்வாகம் மீறக்கூடும் என்று வந்தபோது அதற்கும் எதிரான அடுத்த கட்ட நிவாரணமும் தொழில் தகராறு சட்ட சரத்துகள் எழுப்பிப் பெற்றுத் தந்தனர். அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களது விரைவான செயல்பாடும், தொடர்ச்சியான அக்கறையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.
யாரையும் பணி நீக்க உத்தரவு வாங்காதே, ராஜினாமா கொடுக்காதே, இன்டெக்ரா வுக்கு இசைவு தராதே என்று உறுதிப்பட சொல்லும் உரம் பெற்று இருக்கிறோம் இப்போது.
மிகப் பெரிய நிர்வாக அமைப்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நீங்கள் இத்தனை மும்முரமாகச் செயல்படும் போது உங்களை எப்படி நடத்துகின்றனர்?
என் மீது தனி கண்காணிப்பு போடப்பட்டு விட்டது. எனக்குப் பொறுப்பான கிராமங்கள் இரண்டிலும் அலைந்தலைந்து பார்க்கின்றனர், புகார்க் கடிதங்கள் பெற்று என்னை வெளியேற்றி விட முடியுமா என்று! ஆனால், தூய்மையான முறையில் சேவையாற்றி வரும் எங்களுக்கு எதிராக மக்கள் நிச்சயம் எதிர்சாட்சி சொல்ல மாட்டார்கள், கஷ்ட காலங்களில் நாங்கள் தான் போய் நிற்கிறோம். அவசரத் தேவைக்குப் பணம் உடனே கொண்டு கொடுக்கவும், சேமிப்பு செய்யவேண்டும் என்று அலையாமல் எங்கள் மூலம் சேர்க்கவும் மக்கள் நலனில் நாங்கள் இடையறாது ஆண்டுக்கணக்கில் உழைத்து வருகிறோம். நாள் முழுவதும் இயங்குகிறோம்.
எல்லோரும் இப்படி அநீதிக்கு எதிராகச் சட்டென்று முன் வந்து விட மாட்டார்கள், இதற்குமுன் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டது உண்டா?
ஆமாம்.. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தேவைக்காக எங்கள் பகுதியில் எந்தக் கேள்வியும் இன்றி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டும் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டும் வருவதற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறேன். கடுமையான போராட்டம் அது. எங்கள் நியாயத்தை மறுக்க முடியவில்லை. மற்றவர்களுக்காகப் போராட வேண்டும் என்பது இளவயதில் இருந்தே ஏற்பட்டு விட்ட சிந்தனை. பத்தாம் வகுப்பு வரை தான் படித்தேன், தேர்வுக்காகப் படித்ததை விடத் தெளிவுக்காக நிறைய படித்தேன், படித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் வாசிப்பு அனுபவம் சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே…எந்த வகையான நூல்களில் நாட்டம்?
வாசிப்பு ஆர்வத்திற்காக பொன்னியின் செல்வன். நெறிகளுக்காகத் திருக்குறள். உலகையே மாற்றிப் போடும் தத்துவ வாசிப்புக்காக மூலதனம் மூன்று தொகுதிகளும் வாசித்தேன். சாகச போராளி சே குவேரா, கியூபா விடுதலை புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ, ருஷ்ய புரட்சி நாயகன் லெனின் போன்ற புரட்சிக்காரர்களை, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களைப் பற்றிய நூல்களும் வாசித்திருக்கிறேன். பெரியாரிய சிந்தனையாளர் அய்யா திருச்சி வே ஆனைமுத்து அவர்களது சிந்தனைகள் பிடிக்கும், கொரோனா காலத்தில் அவர் மறைந்தபோது முடக்கத்தை மீறி எப்படியோ தாம்பரம் வந்து அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.
இந்த அளவுக்கு வாசிப்பு தூண்டுதல், உங்களது அழகான பேச்சுத் தமிழ் எல்லாமே உங்கள் ஆசிரியர்கள் பற்றிக் கேட்கத் தூண்டுகிறது, உங்கள் தமிழாசிரியர்கள் பற்றிச் சொல்லுங்கள்..
வளையமாதேவி வள்ளலார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த மனுநீதிச் சோழன் அய்யாவும், மறைந்த நாகராஜன் அய்யாவும் என்னை மிகவும் ஊக்குவித்தவர்கள். பள்ளிக்காலத்தில் மேடைப் பேச்சு பேச வைத்தவர்கள். தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தவர்கள்.
அருமையான செய்திகள்…. போராட்டத்தின் முக்கிய கட்டத்தில் உங்களுக்குமுன் உள்ள நம்பிக்கைகள் என்ன?
தமிழ்நாடு கிராம வங்கி முகவர்கள் தங்களது போராட்ட இயக்க வெற்றியால் ஒரு சாலை அமைத்து இருக்கிறார்கள், அதுவரை தடையின்றி நாங்களும் பயணம் போக முடியும், அதற்கு மேலான பயணத்திற்கு எங்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும். நிரந்தர ஊழியர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர். எங்களை வெளியேற்றுவதை அவர்களால் நிச்சயம் பொறுத்துக் கொள்ள இயலாது. ஏனென்றால், புதிய நியமனங்கள் தடைபட்டுக் கிடந்த பெரிய இடைவெளியில், அவர்களது பணிச்சுமையை நாங்கள் பெருமளவு தோள்கொடுத்து ஏற்றுச் செய்திருக்கிறோம். பல விதங்களிலும் துணை புரிந்திருக்கிறோம். மற்ற வங்கிகளில் உள்ள முகவர்களும் இந்தப் போராட்டத்தின் பால் ஈர்க்கப் பட்டு வருகின்றனர். எனவே நிச்சயம் முன்னேற்றமான முடிவுகளை நோக்கி எங்களால் நிச்சயம் நகர முடியும். சோதனைகளைக் கடப்போம். எங்கள் நிர்வாகம் இத்தனை ஆண்டுகளாக எங்கள் உழைப்பைப் பார்த்தவர்கள். நல்ல மனம் கொண்ட வங்கியின் உயர் நிர்வாகிகள் எங்கள் கோரிக்கையை அங்கீகரித்துத் தனியார் ஏஜென்சி திட்டத்தைக் கை விடுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். அதற்காகத் தான் ஒன்றுபட்ட முறையில் எங்கள் பிரச்சனைகளை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம்.
உங்கள் முயற்சிகள், போராட்டங்கள் சிறப்பான வெற்றி பெற்றுத் தர BWU சார்பில் உளமார வாழ்த்துகள் தெரிவிக்கிறோம், தோழா!