முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டிய பூனம் குப்தா –அர்விந்த் பனகாரியா அறிக்கை

சி.பி.கிருஷ்ணன்

1991 ஆம் ஆண்டு நரசிம்மம் குழு அறிக்கை துவங்கி 2014 பிஜே நாயக் குழு அறிக்கை வரை மைய அரசு சார்பாக வெளியிடப்பட்ட அத்தனை அறிக்கைகளும் வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்ற பரிந்துரையையே வலியுறுத்தியுள்ளன. அந்த வரிசையில் சமீபத்தில், 2022 ஜூலை 12-13 தேதிகளில் இரு பொருளாதார நிபுணர்கள் ”இந்தியா பாலிசி போரம்” சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையும் சேர்ந்து கொண்டது. இந்த அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவர் பூனம் குப்தா. இவர் “நேஷனல் கெளன்சில் பார் அப்ளைட் எகனாமிக் ரிசர்ச்” என்ற அமைப்பின் டைரக்டர் ஜெனரல் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர். மற்றொருவர் அர்விந்த் பனகாரியா. இவர் நிதி ஆயோக்கின் முதல் துணைத் தலைவராக 2015 முதல் 2017 வரை பணியாற்றிவர். கொலம்பியா பல்கலை கழகத்தின் பேராசிரியர். பொருளாதாரம் மற்றும் பொதுக் கொள்கைக்காக 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றவர்.

12 பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டுமாம்

இந்த அறிக்கை ”நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளையும் தனியார்மயமாக்க வேண்டும்; முதலில் இந்தியன் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி என்று இரண்டு, மூன்று வங்கிகளை தனியார்மயமாக்கலாம். லாபமீட்டக் கூடிய வங்கிகளை முதலில் வெற்றிகரமாக தனியார்மயமாக்கி விட்டால் மற்ற வங்கிகளை விற்பது சுலபமாக இருக்கும். தற்போதைக்கு ஸ்டேட் வங்கியை அரசின் வசம் விட்டு வைக்கலாம்; பின்னர் அதையும் தனியார்மயமாக்கி விடலாம்” என்பது தான் இந்த அறிக்கையின் சாராம்சம். ஏதோ மெத்தப் படித்தவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்களே, அதன் உண்மைத் தன்மையை திறந்த மனதோடு ஆராய்ந்து பார்க்கலாம் என்று உள்ளே படித்தால் இந்த அறிக்கை “அரை உண்மைகள், உண்மைக்கு புறம்பான அடிப்படையே இல்லாத வாதங்கள்” கொண்டதாக உள்ளது.

தனியார் வங்கிகள் நம்பகரமான மாற்றாம்

”சமீப காலங்களில் தனியார் வங்கிகள் நம்பகரமான மாற்றாக உருவாகியுள்ளன” என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது உண்மையா? 1969க்கு முன்னால் 558 தனியார் வங்கிகள் திவாலாகின. 1969க்கு பின்னால் 37 தனியார் வங்கிகள் திவாலாகின. சமீப காலமாக தனியார் வங்கிகள் நேர்மையான முறையில் கடன் கொடுத்து, வெளிப்படையாக செயல்பட்டு ஆரோக்யமாக மாறி விட்டனவா? உண்மை அப்படி இல்லை. ஒரு மாதிரிக்கு யெஸ் வங்கியை பார்ப்போம்.

”டிஎச்எப்எல் நிறுவனத்தில் யெஸ் வங்கி 3700 கோடி ரூபாய் முதலீடு செய்து அதை திரும்ப எடுக்கவில்லை. அதற்கு கைமாறாக யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரின் இரு புதல்விகள் நடத்தும் போலி கம்பெனி மூலமாக ரூபாய் 600 கோடி லஞ்சம் பெற்றார்என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி ராணா கபூரை கைது செய்தது.

யெஸ் வங்கி திவால் நிலைக்கு போகவே 2020 மார்ச் மாதம் இந்த வங்கியின் மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டது. இவ்வங்கியின் பங்குகளில் 49% வரை முதலீடு செய்து காப்பாற்ற அரசு வங்கியான ஸ்டேட் வங்கிதான் தேவைப்பட்டது. இல்லையேன்றால் யெஸ் வங்கி திவாலாகி வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை பெருமளவு பறி போயிருக்கும்.

”2022 மே 29ம் தேதி எச்டிஎஃப்சி வங்கியின் 100 வாடிக்கையாளர்களின் கணக்குகளில் திடீரென்று 1300 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது” என்ற செய்தி வெளியாகி 2 மாதங்கள் கழிந்த பின்னும் இது பற்றி வங்கி தரப்பிலிருந்து எந்த ஒரு திருப்திகரமான விளக்கமும் தரப்படவில்லை.

20 நாட்கள் முன்பு வெளியான தகவல்படி டிஎச்எப்எல் என்ற வங்கியல்லாத நிதி நிறுவனம் (Non-Banking Finance Company)ரூ.34615 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளது. இதுதான் இதுவரை நடைபெற்ற ஊழலிலேயே மிகப் பெரிய ஊழல். இந்த நிறுவனம் 2,60,000 போலி கணக்குகள் திறந்து அந்நிறுவனத்தின் பணத்தை 17400 கோடி வரை சட்ட விரோதமாக திருடி, ஷெல் கம்பெனிகள் மூலமாக அதன் நிறுவனர்கள் வாத்வான் சகோதரர்கள் பெயரில் வெளி நாடுகளில் சொத்துக்களாக மாற்றியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி ஊழல், லஷ்மி விலாஸ் வங்கி ஊழல், இன்ஃப்ராஸ்ட்ர்க்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ் ஊழல் என்று தனியார் நிறுவனங்களின் சமீபத்திய மேல் மட்ட ஊழலின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவையெல்லாம் வெளியில் தெரிந்தவை மட்டுமே.

வினோதமான காரணம்

அடுத்து ஒரு வினோதமான காரணத்தை முன் வைக்கிறது இந்த அறிக்கை. “அரசு வங்கிகள் இருப்பது தனியார் வங்கிகளை தீவிரமாக முடமாக்குகிறது” என்பதுதான் அது. அதாவது ”2008-09 நிதி நெருக்கடியின் போது வைப்புதாரர்கள் தனியார் வங்கிகளிலிருந்து அரசு வங்கிகளை நோக்கி நகர்ந்து விட்டார்கள்: அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் அரசு வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும்” என்று கூறுகிறது இந்த அறிக்கை. தனியார் வங்கிகளில் வைப்புதாரர்களின் பணம் பாதுகாப்பாக இல்லாத காரணத்தால் வைப்புதாரர்கள் அரசு வங்கிகளை நோக்கி நகர்கிறார்கள் என்று அறிக்கை சமர்ப்பித்தவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இதை விட அரசு வங்கிகள் தான் மக்களுக்கு பாதுகாப்பானது எனபதற்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?

ரிசர்வ் வங்கியின் செயல்பாடு

”அரசு வங்கிகளுக்கு இரு எஜமானர்கள் – ஒன்றிய அரசு & ரிசர்வ் வங்கி – உள்ளன. வங்கிகள் தனியார்மயமாகி விட்டால் அரசு தலியீடு இருக்காது; ரிசர்வ் வங்கி நன்றாக கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும். எனவே அரசு வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும்” என்கிறது அறிக்கை. அப்படியானால் தற்போது தனியார் வங்கிகளும், தனியார் வங்கிகளல்லாத நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியால் நன்றாக கண்காணிக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்? உண்மை நிலவரம் என்ன? 2016 மார்ச் மாதம் ரூ.98,000 கோடியாக இருந்த யெஸ் வங்கியின் கடன், மூன்றே ஆண்டுகளில் – அதாவது 2019 மார்ச் மாதம் ரூ.2,41,000 கோடியாக உயர்ந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 2016லிருந்து நடைபெற்ற அந்த வங்கியின் ஊழலை கண்டுபிடிக்க ஏன் 4 வருடங்கள் ஆயின? டிஎச்எப்எல் நிறுவனத்தில் உயர்மட்ட ஊழல் 2007 முதல் 2019 வரை 13 ஆண்டுகள் நடைபெற்றன? இந்த காலகட்டத்தில் ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது? அந்த ஊழலை ஏன் கண்டுபிடிக்கவில்லை? அந்த ஊழலை கோப்ரா போஸ்ட் என்ற புலனாய்வு இதழ் தானே வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது? இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆகவே அறிக்கையின் இந்த கூற்றில் துளியும் உண்மை இல்லை.

உள்ளடக்கிய நிதிச் சேவை

”அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையை யார் அளிக்கிறார்கள்? அதிலும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கான ஜன் தன் கணக்குகளை எந்த வங்கிகள் அதிகமாக திறந்தன?” என்ற ஒரு கேள்வியை இந்த அறிக்கை எழுப்பி விட்டு அதற்கான பதிலை மழுப்பப் பார்க்கிறது ஏன்? 2022 ஜுலை 6 ஆம் தேதி விவரப்படி மொத்தமுள்ள 45.95 கோடி ஜன் தன் கணக்கு பயனாளிகளில் 44.65 கோடி பயனாளிகள் அரசுத்துறையை சார்ந்த வணிக, கிராம வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள். 1.30 கோடி கணக்குகள் மட்டுமே தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டவை. இந்த உண்மை சுடுகிறது. அதனால் தான் மழுப்புகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பாகவும்,  பல விஷயங்கள் திரித்துக் கூறப்பட்டும், சில உண்மைகள் மறைக்கப்பட்டும், அடிப்படை இல்லாத வாதங்களையும் கொண்ட அறிக்கையாகவே தெரிகிறது.

ஆதாரமற்ற கணிப்பு

இறுதியாக அவர்கள் சொன்னபடி அரசு வங்கிகளை தனியார்மயமாக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள். ”இன்னும் 10 வருடங்களில் அதாவது 2032-33 ல் மொத்த சந்தையில் ஸ்டேட் வங்கி அல்லாத மற்ற 11 பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் 4.4% ஆகவும், கடன் 9.4% ஆகவும், சொத்து 8.4% ஆகவும் குறைந்து விடும்” என்கிறார்கள். இதற்கு எந்தவிதமான தர்க்க நியாயத்தையும், ஆதாரத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை.

பல முனைகளில் சிறப்பாக செயல்படும், சாதாரண மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றும், இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதில் கணிசமான பங்களிக்கும் அரசு வங்கிகளை எப்படியாவது சீர்குலைத்து, தனியார் முதலாளிகளுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்ற மோசமான உள்  நோக்கத்துடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இதை முழுமையாக நிராகரிப்போம்.

Comment here...