திரை விமர்சனம்
நாகநாதன்
Prime ல் 2021ல் வெளியான Sara’s படம் பார்த்தேன். கேரள மக்கள் திரை ஆக்கத்தில் எங்கோ இருக்கிறார்கள்!!
குழந்தை வளர்ப்பை விரும்பாத (Parenting), சுதந்திரமாய் இருக்க விரும்புகிற, கற்பனைச் சிறகில் பறக்க நினைக்கிற, திரை ஆக்கத்தில் முத்திரைப் பதித்து வெற்றிக் கொடி நாட்ட முயல்கிற, மொத்தத்தில் அவள் அவளாய் வாழ நினைக்கும் ஓர் இளம் பெண், (அன்னா பென்- SARA) அதே ஒத்த சிந்தனையுடன் பயணிக்கிற, குறிப்பாக Parenting ஐ வெறுக்கிற ஒரு ஆணுடன் (Sunny Wayne-ஜீவன்) நடத்துகிற காதல், காமம்,வாழ்வு, சிந்தனை, குடும்பம் எல்லாம் சேர்ந்து கெண்டாட்டமாய் முகிழ்த்திருக்கிற படம். உச்ச கட்ட காட்சி (CLIMAX ) அருமை. சாராவின் தந்தை , ஜீவனின் தாயார் ஒரு சில நிமிடங்களே வந்தாலும் Doctor Role எல்லாம் வேற தரம். படத்தின் ஆரம்பத்திலேயே எழுத்தில் போடுகிற “மாஸ்க்குடன் வரும் மனிதர்களைக் கண்டால், அவர்கள் மனிதநேயத்தைப் போற்றுங்கள்” என்கிற Punch செம.
பெண்ணியப் பிரச்சாரம் இல்லை, தாய்மையை போலியாய் வியந்தோதவில்லை, இயல்பாய் தோன்றும் பாலியல் இச்சைகளை அதுவும் பெண்ணுக்கு, மறைக்கவில்லை, மறுக்கவில்லை, Just Like that சக மனுஷியை, மனைவியை, மதிக்கிற கணவனைக் கொண்டாடவில்லை, குத்திக்காட்டும் மாமியார்களையே காணும் நமக்கு மருமகளின் கேள்விகளை உள்வாங்கி உணர்ந்து கொள்கிற மாமியார், “உன் முடிவு ஏதாகிலும் சரி, உன்னோடு துணை நிற்பேன்” என்கிற அப்பா….என்று படம் சிலாகித்துப் பேசுகிற கதாபாத்திரங்கள்…
இரண்டு மணி நேரப் படம் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது. பாடலிலும், பின்னணி இசையிலும் தேவையானதை மட்டும் தருகிற, அழகே அழகான கேரளாவை கேமராவில் பளிச்சிட வைக்கிற திரை நேர்த்தி. அவசியம் பாருங்க. சாரா-Amazon Prime ல்.