”எங்களை நிரந்தர பணியாளர்களாக்குங்கள்”

ஐஓபி வணிக தொடர்பாளர்கள் தர்ணா போராட்டம்

-எஸ். திருவேங்கடம்

“வணிக தொடர்பாளர்களை வஞ்சித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) நிர்வாகம் தன்னிச்சையாக எடுத்துள்ள முடிவை கைவிட வேண்டும், IOB வணிக தொடர்பாளர்களை  IOB  பணியாளர்களாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கோரி சக்தி வாய்ந்த ஒரு மாபெரும் தர்ணா போராட்டத்தை 21.07.2022 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐஓபி வணிக தொடர்பாளர்கள் சங்கம் நடத்தியுள்ளது. 2022 ஜூன் 26ஆம் நாள் பெரம்பலூரில் நடைபெற்ற  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வணிக தொடர்பாளர்கள் சங்கத்தின்  முதல் மாநாட்டின் முக்கிய தீர்மானமும் இதுவே.  முன்பாக சென்னையில் உள்ள மத்திய தொழிலாளர் துணை ஆணையரிடம் IOB நிர்வாகத்தின் “கார்ப்பரேட் நிறுவனத்திடம் வணிக தொடர்பாளர்களை ஒப்படைக்கும்” முயற்சிக்கு எதிரான தொழில்தாவா ஒன்று எழுப்பப்பட்டது.   மத்திய தொழிலாளர் துணை ஆணையர், ஐஓபி  நிர்வாகத்தின் இம்முயற்சிக்கு தடை விதிக்கும் வகையில் தொழில் தகராறுச் சட்டம் 33 வது பிரிவின் படி தடை ஆணை பிறப்பித்துள்ளார்.  கூடவே 2022 ஜூலை 26ஆம் தேதி சமரச பேச்சு வார்த்தை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.   வங்கி நிர்வாகம் தொழிலாளர் துணை ஆணையரின் தடையாணையை மதிக்காத போக்கில் செயல் பட ஆரம்பித்தது.   இந்த பின்னணியில்தான்  உதயமாகி ஒரு மாதம் கூடநிறைவடையாத நிலையில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

நம்பிக்கையூட்டும் பேச்சு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் தோழர்கள், அதிலும் பெரும்பான்மையாக பெண்கள்,  கைக்குழந்தைகளுடன் பங்கேற்ற இளம்தாய்மார்கள் எனப் பல்வேறு சிறப்புகளுடன் நடந்தது அந்த தர்ணா போராட்டம்.   பங்கேற்ற தோழர்களின் உணர்ச்சி மிக்க கோஷங்களைத் தொடர்ந்து,  சங்கத் தலைவர் தோழர் தீனதயாளன் தலைமையேற்க, சங்க நிதிப் பொறுப்பாளர் தோழர். லட்சுமி அனைவரையும்  வரவேற்க அப்போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் துவங்கியது.

இத்தோழர்களின் பிரச்சினைகளின் ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை தோழமையோடு வழிகாட்டி வரும், BEFI -TN  பொதுச் செயலாளர் தோழர் என். ராஜகோபல் நடந்தவைகளைப் பட்டியலிட்டு தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார்.  கோரிக்கைகளை வலியுறுத்தி IOB வணிக தொடர்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  தோழர் பழனிச்சாமி அவர்கள் உரையாற்றினார். வணிக தொடர்பாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நிர்வாகம் செய்யும் அடாவடிகளையும், அதனை எதிர் கொள்ள தயாராய் இருக்கும் தோழர்களின் உறுதியினையும் சுட்டிக்காட்டிய அவரது பேச்சு அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்தது.  தனது கவிதையுரையால் எழுச்சியூட்டினார் தோழர் ஷேக் மொகமது. வங்கியால் வணிக தொடர்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கருவியினை நிர்வாகம் அடாவடியாக அவரிடமிருந்து பறித்துக் கொண்டாலும், அச்சமின்றி தர்ணா பந்தலில் வீர முழக்கமிட்டார் தோழர் மாரியம்மாள்.

நிமிர்ந்து நில்  துணிந்து செல்

BEFIயின் இணை செயலாளர் தோழர் சி.பி, கிருஷ்ணன் வாழ்த்தும் பொழுது, எந்த விதமான பாதுகாப்புமின்றி, காப்பீட்டு வசதியுமின்றி கையில்  பொது மக்கள் பணத்துடன்  நெடுந்தூரம் பயணம் செய்து பணியாற்றும் வணிக தொடர்பாளர்களின் துயரங்களை விளக்கினார்.  BEFIயின் உறுப்பு சங்கத் தலைவர்கள்,  தோழர்கள் .ரவிக்குமார்,  சண்முகம், எஸ்.வி. வேணுகோபாலன், உன்னிகிருஷ்ணன்,  விவேகானந்தன் ஆகியோர் தர்ணாவை வாழ்த்திப் பேசினர். “உரிமையை யாரும் பறிக்க விடாதே, தட்டிக் கேள்” எப்போதும் நாங்கள் உங்களுடன் உள்ளோம் என்றார் BEFIயின்  செயலாளர்  தோழர். கே.கிருஷ்ணன்.    IOBSA-TN (BEFI)  சார்பாக அதன் துணைப் பொதுச் செயலாளர் தோழர் மஹாராஜா மற்றும் மூத்த தோழர் எஸ்.திருவேங்கடம் போராட்டக்காரர்களை வாழ்த்தி உரையாற்றினர்.   ஐஒபியின் பணி நிறைவு செய்தோர் சங்கத்தின் அகில இந்திய  பொதுச்செயலாளர் தோழர் ஜி.பாலச்சந்திரன் (IOBRA) அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினை தோழர் தீன தயாளன் படித்தார்.

சாத்தியமாக்கியது BEFI தான்

தமிழ் நாடு கிராம வங்கியின் வணிக வங்கி முகவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் காளிதாஸ் அவர்கள், அனுபவப் பின் புலத்தோடு தர்ணாவை வாழ்த்தினார்.  2022 ஏப்ரல் முதல் ஒப்பந்ததாரர்தான் உங்களுக்கு ஊதியம் தருவார் ; வங்கிக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை என்று கூறிய தமிழ் நாடு கிராம வங்கி நிர்வாகம்தான் இன்றும் எங்களுக்கு ஊதியம் அளிக்கிறது. அதை சாத்தியமாக்கியது BEFI சங்கம் தான் என்று அவர் கூறிய போது எழுந்த கரகோஷம் வள்ளுவர்கோட்டப் பகுதியினையே அதிர வைத்தது.

நாட்டின் இன்றைய நிலைமையோடு இந்தப் பிரச்சினையை அணுகிய இந்திய  தொழிற்சங்க மையத்தின்(CITU) தமிழ் மாநில பொறுப்பாளர் தோழர்  குமார் தர்ணாவை வாழ்த்தினார்.  அவரைத் தொடர்ந்து  உழைக்கும் பெண்களின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி தர்ணாவினை வாழ்த்தினார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் தோழர். செல்வி.

வாழ்வதற்காக போராடக் கற்போம்

“ஆர்ப்பரிக்கும் அலை கடலில் அவன் ஒரு மீனவன் , ஆலையிலோ அவன் ஒரு தொழிலாளி, விளை நிலத்தில் அவன் ஒரு விவசாயி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அவன் ஒரு வணிக தொடர்பாளர் “ . எந்தப் பெயரில் அழைத்தாலும் அங்கே ஓர் ஒற்றுமை உள்ளது. அதுதான் உழைப்புச் சுரண்டல்.  அதற்கெதிரான உங்கள் போராட்டத்தில் என்றென்றும் BSNLEU  உடன் நிற்கும் என அச்சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் தோழர் ராஜு  வாழ்த்தினார்

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த ஊழியராகளாக இருந்து வெளியேற்றப் பட்ட தோழர்களின் பிரச்சினைகளை கையில் எடுத்து AIIEA  நடத்திய போராட்ட விவரங்கள், எதிர்கொண்ட அடக்குமுறைகள்  பற்றிய  விவரங்களோடு   அன்று தற்காலிக ஊழியராக இருந்தவரும் இன்று காப்பீட்டு ஊழியர் சங்கத்தின்  மாநிலத்தலைவர்களில் ஒருவருமான தோழர் பாலகிருஷ்ணன் தர்ணாவை வாழ்த்தியது  மிகச் சிறப்பான ஒன்றாகும்.

கடந்த காலங்களில் எந்தெந்த துறைகளிலெல்லாம் தற்காலிக ஊழியர் பிரச்சினை நிலவியது, அவைகளை எவ்வாறு தொழிற்சங்க இயக்கம் எதிர்கொண்டு வெற்றி கண்டது என்ற வீர வரலாற்றைக் கூறி தர்ணாப் போராட்டத்தை முடித்து வைத்தார்  BEFI -TN தலைவர் தோழர் தமிழரசு.

நன்றியுரைக்குப்பின் எழுச்சியுடன் எழுப்பப் பட்ட ஒலி முழக்கம் இப் போராட்டத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது.

அச்சம் தவிர்ப்போம்-சங்கமாய் சேர்ந்து செயல்படுவோம்

தென் கோடி குமரி தொட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து பங்கேற்ற தோழர்களின் எண்ணிக்கை, பெண் தோழர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பங்கேற்பு, தோழர்களின் கட்டுப்பாடு, பிரச்சினைகளின் ஆழம் காண்போரை எல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. முன்பு   கிராம மக்கள் அனைவரின் குடும்பங்களில் ஒருவராக கருதப்பட்ட, அஞ்சல் பட்டுவாடா செய்து வந்த தபால்கார மாமா, தபால்கார அண்ணாச்சி, தபால்கார தம்பி என்ற இடத்தை இன்று பிடித்திருப்பவர்கள் இந்த வணிக தொடர்பாளர்களே. அவர்கள் கடமைக்காக இந்த வேலையை செய்யவில்லை; “இதுவே எனது தலையாய கடமை” என்று பணிபுரிகிறார்கள். அதனால்தான் “என் வங்கி, நம் வங்கி“ என்று எப்போதும் அவர்கள் சுமந்து செல்லும்  வங்கியின் அடையாள அட்டையுடனேயே இப்போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.  இப்படிபட்ட அர்ப்பணிப்புள்ள ஊழியர்களைத்தான் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முனைகிறது  வங்கி நிர்வாகம்.  இதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது வீரஞ்செறிந்த தர்ணாப் போராட்டம்.

Comment here...