கோமாளிக்கிரான் (புதிய வைரஸ்)

கே. ராமசுப்பிரமணியன்

தொடர்புக்கு: email:vasanthi_chandru@yahoo.co.in

காலை மணி ஒன்பது. காலிங்பெல் சப்தம் கேட்டது. ஷேவிங்கை பாதியில் நிறுத்திவிட்டு கதவைத் திறந்தேன்.

தியாகு நின்று கொண்டிருந்தான். “உள்ளே வா தியாகு, என்ன இந்த நேரத்தில்; உன் முகம் வாடி இருக்கிறது”. “நீ போய் ஷேவிங்கை முடித்துக் கொண்டு வா. பிறகு எல்லாம் சொல்கிறேன்” என்றான் தியாகு.

தியாகுவும் நானும் ஒரே வங்கியில் வேலை பார்த்தவர்கள். என்னுடைய உயிர்த்தோழன் என்று கூட சொல்லலாம். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த பேதமும் கிடையாது. ஷேவிங்கை முடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தேன்.

“சொல்லு தியாகு; உடம்புக்கு ஏதாவது உபாதையா”?

“ஆமாம்”

உடனே நான் என் பக்கத்திலிருந்த மாஸ்க்கை எடுத்து நன்றாக இழுத்துப் போட்டுக் கொண்டேன்.

“சொல்லு இப்ப சொல்லு, என்ன செய்கிறது உனக்கு”

“காலை 6 மணி இருக்கும், என் பையன் அமெரிக்காவிலிருந்து போன் பண்ணினான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு என்று”

“நல்ல விஷயம் தானே தியாகு”

“ஆமாம், ஆமாம், ஆனால் அதைக் கேட்டவுடன் நான் பெரிதாக அழுதேன்”

“எமோஷனில் அழுவது சகஜம் தானே”

இல்லை, இல்லை. சந்தோஷமான செய்தி கேட்டால் உடனே அழுகை வருகிறது. ஏன் என்று தெரியவில்லை.

இன்று காலை காலை 7 மணிக்கு நம்மோடு வேலைப் பார்த்தானே மது; அவன் வந்திருந்தான். ரொம்பநாள் கழித்துப் பார்ப்பதால் எனக்குள் சந்தோஷம் வர உடனே பெரிதாக அழ ஆரம்பித்துவிட்டேன். மது நான் அழுவதைப் பார்த்து நடுங்கி விட்டான்.

“அப்படியா”

அப்போது என் மனைவி ஹாலுக்கு வந்தாள். என் மனைவியைப் பார்த்த தியாகுவுக்கு சிறிது சந்தோஷம் தோன்ற உடனே உதட்டைப் பிதுக்கி அழ ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம் இதைப் பார்த்து திடுக்கிட்ட என் மனைவி, “ஏங்க, சீக்கிரம் டி.வி.யை ஆன் பண்ணுங்க ஏதோ புது வைரஸ் பற்றி சொல்றாங்களாம், கேட்போம்” என்றாள்.

நான் டி.வி.யை ஆன் செய்தபோது ஒரு மருத்துவர் தோன்றி “ஓமிக்ரான் என்ற வைரஸ் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது என்றும், இந்த உருமாறிய வைரஸ் காதின் வழியாகத்தான் உட்புகும் என்றும், இது மூளைக்குள் ஊடுருவிச் சென்று சந்தோஷமான செய்திகளை அறியும் பகுதியை தாக்குகிறது, என்றும் அதனால் இந்த வைரஸால் தாக்குண்டவர்கள் சந்தோஷமான செய்தியை கேட்டால் அவர்களால் சந்தோஷம் அடைய முடியாமல் அழ ஆரம்பித்துவிடுவர்” என்றும் தெரிவித்தார். இன்னொரு மருத்துவர் “இந்த வைரஸ் மூளையில் வருத்தம் அடையும் பகுதியை தாக்குவதால் வருத்தமான செய்திகளை கேட்டால் பெரிதாக சிரிக்கத் தொடங்குவர்” என்றும் கூறினார்.

இந்த வைரஸ்-க்கு ‘கோமாளிக்கிரான்’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டதாகவும் குறிப்பிட்டார். “இது ஏதடா வம்பாப் போச்சு” என்று கூறி தியாகுவைப் பார்த்தேன். தியாகு தனக்கு வந்துள்ளது கோமாளிக்காரன் தான் என்பதை உணர்ந்து பெரிதாக சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

இதற்குள் என் மனைவி தியாகுவின் மனைவி பார்வதியை போனில் அழைத்து இதைப் பற்றிய தகவலைச் சொல்லி, தியாகுவையும் பாதித்துள்ளது என்பது பற்றியும் கூறி அவளை உடனே இங்கு வரச் சொன்னாள்.

வீட்டிற்குள் கண்ணீர் மல்க நுழைந்த பார்வதியைப் பார்த்ததும் தியாகு பெரிதாக சிரிக்கத் தொடங்கினான்.

“ஆமாம் வியாதியையும் வாங்கிக்கிட்டு சிரிக்கிற சிரிப்பப் பாரு” என்று கோபத்துடன் முகவாய்க்கட்டையை தோளில் இடித்துக் கொண்டார்.

உடனே பக்கத்திலிருந்த என் மனைவி “அவர் சிரிச்சார்னா வருத்தப்படரார் என்று அர்த்தம்” கோமாளிக்கிரான் பற்றிதான் சொன்னேனே பார்வதி என்றாள்.

இதனிடையே டி.வியில் தோன்றிய சுகாதார இலாகாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘காதை மறைக்கும் மாஸ்க்’ தயாராகவில்லை என்றும், அதுவரை அனைவரும் வீட்டில் உள்ள துண்டை வைத்து காதை மறைத்து முண்டாசு கட்டிக் கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மற்றும் இந்த கோமாளிக்கிரான் பாதித்தவர்களுக்காக கீழ்ப்பாக்கத்தில் தனியாக ஒரு மருத்துவமனை தயாராக உள்ளது என்றும், இதில் தங்கும் நோயாளிகள் மகிழ்ச்சியுடன் இருக்க அவ்வப்போது மனவருத்தம் தரும் செய்திகளை ஒலி பெருக்கியில் சொல்ல ஏற்பாடும் உள்ளது என்றும் கூறி ஆம்புலன்ஸ்க்கான நம்பரையும் கூறினார்.

நாங்கள் அந்த நம்பருக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருந்தோம்.

டி.வி.யில் இதற்குள் கோமாளிக்கிரான் சம்பந்தமாக விவாதமேடை தொடங்கி இருந்தது. எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் கோமாளிக்கிரானை தடுத்திட எல்லோரும் முண்டாசுக்கட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.  ஆகவே, அரசு எல்லோருக்கும் ஒண்ணரை மீட்டர் அளவுக்கு துண்டு ஒன்றை இலவசமாக கொடுக்க வற்புறுத்தினார். மற்றொருவர், அக்காலத்திலேயே நமது முன்னோர்கள் கோமாளிக்கிரான் பற்றி அறிந்திருந்தார்கள் என்றும், ஆதலால் பலர் காதை மறைத்து முண்டாசு கட்டுவது வழக்கம் என்று கூறினார். ஒரு தாடி வைத்த வயதான அறிஞர் கோமாளிக்கிரான் மூளையில் கவலைப்படும் பகுதியைத் தாக்கி கவலை தரும் செய்திகளை கேட்கும் போது சிரிக்க வைப்பதை குறிப்பிட்டு “இதை ஈராயிரம் வருடத்திற்கு முன் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறிந்திருந்தார், அதனால்தான் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் என்று தன்பாட்டுக்கு பிரஸ்தாபித்தார்”.

விவாதம் முடிந்து செய்திகள் ஆரம்பிக்க ஒரு பெண்மணி தோன்றி நாங்கள் தனிமையில் இருப்பதால் காதுகளை மறைத்து முண்டாசு கட்டிக் கொள்ளவில்லை. நீங்கள் அவசியம் முண்டாசு கட்டிக் கொள்ள வேண்டும் என்றாள்.

நான் ஆம்புலன்ஸ் வரும் சத்தம் கேட்கவே டி.வி.யை அணைத்தேன்.

வாசலில் ஆம்புலன்ஸ வந்து நின்று பின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

தியாகுவை வெளியே அழைத்து வந்தபோது பார்வதி பெரிதாக அழுதாள். தியாகு பெரிதாக சிரித்தான்.

ஆம்புலன்ஸின் உள் நால்வர் உட்கார்ந்திருந்தனர். அனைவரும் முண்டாசு கட்டிக் கொண்டு இருந்தனர். தியாகு உள்ளே ஏறும்போது அந்த நால்வரும் சிரித்தனர். அவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். நான் சிரிக்காமல் வருத்தப்பட்டேன்.

முண்டாசு கட்டிய ஆம்புலன்ஸ் உதவியாளர் பின் கதவை மூட ஆம்புலன்ஸ் மெதுவாக நகர்ந்து மறைந்தது.

Comment here...