இது மக்களுக்கான போராட்டம்

கிராம வங்கி பங்கு விற்பனையை கைவிடு!

பரிதிராஜா.இ

கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஊரக மக்களின் தேவைகளுக்காக, குறைந்த செலவில் வங்கிச் சேவை என்ற பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டவை கிராம வங்கிகள். “குறைந்த செலவு” என்பதே ஊழியர்களின் சம்பளத்தில் கை வைப்பது தானே? அரசின் இந்த மோசடியை கிராம வங்கி ஊழியர்கள் போராடி சரி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான், ஒன்றிய அரசு தன் பொருளாதாரக் கொள்கைகளை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றியது. இந்த மாற்றத்தால், மக்களின் வரிப்பணத்தில் ஆரம்பித்த அனைத்து நிறுவனங்களையும், தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சிகள் ஆரம்பித்தன.

2015லேயே பங்கு விற்பனைக்கான சட்டம்

     கிராம வங்கிகளையும் தனியார் முதலாளிகளுக்கு பந்தி வைக்க ஏதுவாக, 2015லேயே கிராம வங்கிகள் சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் செய்தது. இதனையடுத்து  இரண்டு கிராம வங்கிகளின் பங்கு விற்பனை தொடர்பாக அறிவிப்புகள் கூட வந்தன. இதற்கு எதிராக கிராம வங்கி ஊழியர்கள் தீவிரமாக போராடினர். அந்த  போராட்டங்களின் தீவிரம் அரசின் அறிவிப்பை அறிவிப்போடு நிற்க வைத்தது.

       கிராம வங்கிகள் தனியார்மயம் என்பது ஆள்வோரின் சிந்தனையை தீவிரமாக ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வோர் ஆண்டும் கிராம வங்கிகளுக்கான வருடாந்திர கூட்ட அஜெண்டாக்கள் இதை உரத்துச் சொல்லின. இந்த சூழ்நிலையில் தான் கிராம வங்கி ஊழியர்கள் ஓய்வூதியத்தை வென்றெடுத்தனர். அரசின் கார்ப்பரேட் ஆதரவு நிபுணர்கள் அங்கலாய்த்தனர். பின்னர், இந்த நிபுணர்கள் கிராம வங்கிகளை Small Finance Bankக்குகளாக மாற்றலாம் அல்லது ஸ்பான்சார் வங்கிகளுக்கே விற்றுவிடலாம் என்றெல்லாம் கன்னாபின்னாவென ஆலோசனைகளை அரசுக்கு அள்ளி வழங்கினர். கிராம வங்கி ஊழியர்கள் AIRRBEAவின் அறைகூவலில் ஒன்றுபட்டு நின்று, தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தி இந்த ஆலோசனைகளையெல்லாம் புறந்தள்ளினர்.

அரசு மூர்க்கமாக உள்ளது

     தற்போது மீண்டும் கிராம வங்கிகளின் பங்குகளை விற்பதற்கு அரசு நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளது. பங்கு விற்பனைக்கு இடைஞ்சலாக இருக்கும் விசயங்களை கூட்டம் போட்டு விவாதிக்கிறது. இது வரை கிராம வங்கிகளின் தேவைக்காக கவலைப்படாத இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு (IBA) இப்போது கிராம வங்கிகளின் சேர்மன்களை கூப்பிட்டு கூட்டம் நடத்துகிறது. இந்த செயல்பாடுகள் தெளிவான சமிக்ஞைகளைத் தருகின்றன. அரசு தன் முடிவில் கொஞ்சம் மூர்க்கமாக உள்ளது என்பது தான் செய்தி.

செப்டம்பர் 23 ல் ஒரு நாள் வேலைநிறுத்தம்

     இப்போதும் கிராம வங்கி ஊழியர்கள் போராட்ட களத்தில் உள்ளனர். வங்கியளவில், மாநில அளவில், அகில இந்திய அளவில் தர்ணாக்களை முன்னெடுக்கின்றனர். ஆகஸ்ட் 10 அன்று நம் நாட்டு தலை நகர் டெல்லியில் பாராளுமன்றம் முன்பாக மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தவுள்ளனர். செப்டம்பர் 23 ல் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம், அதற்கடுத்த மாதங்களில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் என இந்த போராட்டங்கள் நீள்கின்றன. இத்துடன், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அரசின் முயற்சிகளை கைவிட வலியுறுத்தும் இயக்கங்களும் நடத்தப்படுகின்றன.

நம்பிக்கை ஒளிக்கீற்று

     தனியார் நுண் நிதி நிறுவனங்கள் கிராம மக்களின் வாழ்க்கையை சூறையாடிவரும் இந்த காலத்தில், கிராம வங்கிகளே அம்மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருக்கின்றன. வலிமையான, அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கிராம வங்கிகள் மக்களின் தேவையாக இருக்கிறது. கிராம வங்கி ஊழியர்கள் ஆரம்ப காலத்தில் தங்களையும் வங்கி ஊழியர்களாக கருத வேண்டும் என்பதற்காக துவங்கிய போராட்டங்கள், இப்போது தங்களின் வங்கியை கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தொடர்கிறது. இந்த போராட்டங்கள் நிச்சயமாக வெற்றியடையும். காரணம், இது மக்களுக்கான போராட்டம்….

2 comments

  1. 🙏👍தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக🙏

  2. கிராம வங்கி ஊழியர்கள் போராட்டம் வெல்லட்டும்..

Comment here...