கேரளம் – டிஜிட்டல் வங்கிச் சேவைகளை முழுமையாக வழங்க இருக்கும் முதல் மாநிலம்

ஜேப்பி

கேரள மாநிலம் பல வகைகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகின்றது.  இந்தியாவில் 100 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெற்ற  ஒரே மாநிலம் கேரளம் என்பதை அறிவோம்.

‘ஒரு குடும்பம் ஒரு வங்கிக் கணக்கு’ என்ற திட்டத்தை வெற்றிகரமாக 2014ம் வருடம் அமல்படுத்தியதன் மூலம் வங்கிச் சேவை முழுவதுமாக வழங்கும் முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது.

முதல் டிஜிட்டல் மாநிலம்

2015-16ல் கேரள அரசு அனைத்து  கிராமங்களையும் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) அதிவேக இணைப்பில் இணைத்தது. அரசின் எல்லா துறைகளும் வழங்கும் 600க்கும் மேற்பட்ட சேவைகளை e-governance இணைய வழி மின்மய சேவைகளாக வழங்க ஆரம்பித்தது. மாநிலம் முழுவதும் 95% கைபேசி பயன்பாட்டிற்கு (mobile density) வசதி ஏற்படுத்தியது. 75% மேலாக மக்கள் மின்-கல்வி (e-literacy) பெறுவதற்கு வகை செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் முதல் “டிஜிட்டல் மாநிலமாக” கேரளா மாறியதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

2019ம் வருடம், வங்கிச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்க ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தை முன் வைத்தது. குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்தை டிஜிட்டல் வங்கி வசதிகளுடன் சோதனை அடிப்படையில் உருவாக்குமாறு மாநிலங்களை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.

மூன்று காரணிகள்

டிஜிட்டல் வங்கிச் சேவை என்பது குறைந்த பட்சம் மூன்று காரணிகளை உள்ளடக்கியது. முதலாவதாக, ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு (Cash transactions) மாற்றாக டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை அமல்படுத்துவதற்கு வசதியாக அனைத்து வாடிக்கையாளர்களின் கைபேசி எண்களை அவரவர் வங்கிக் கணக்குடன் இணைப்பது, டெபிட் கார்டு வழங்குவது, மொபைல்-செயலிகள், இணைய தள வசதிகள் ஏற்படுத்துவது; இரண்டாவதாக, விடுமுறையில்லாத வார நாட்களில் 10மணி முதல் 4மணி வரை நேருக்கு நேர் வங்கிச் சேவை என்பதற்கு மாற்றாக 24×7 மணி நேர உடனடி மின்-தொடர்பு, மொபைல் செயலி மற்றும் இணைய வழியில் வங்கிச் சேவைகளை வழங்குவத;. மூன்றாவதாக, விண்ணப்பங்கள், பதிவுகள் (Registration), ஒப்பந்தங்கள் (Agreements), போன்றவற்றில் காகித ஆவணங்களுக்கு மாற்றாக,  டிஜிட்டல் விண்ணப்பம், மின்-பதிவு (e-registration), மின்-ஒப்பந்தம் (e-agreement) போன்றவற்றை அறிமுகப்படுத்துவது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலம் செலவுகள் குறைந்து, பரிவர்த்தனைகள் எளிமையாகி, உடனுக்குடன் கிடைப்பது என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

முதல் டிஜிட்டல் மாவட்டம் திருச்சூர்
ரிசர்வ் வங்கி 2019ல் வலியுறுத்திய திட்டத்தின் அடிப்படையில் முதலில் கேரள திருச்சூர் மாவட்டத்தில்  வங்கிப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் முழுமையாக வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டு அது வெற்றிகரமாகச் செயலாக்கப் பட்டது. இந்த மாவட்டம் ஆகஸ்ட் 2021 இல் முழு டிஜிட்டல் வங்கி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

கோட்டயம் மாவட்டம் பிப்ரவரி 2022 இல் முழு டிஜிட்டல் வங்கி மாவட்டமாக மாறியது. தற்பொழுது மீதமுள்ள 12 மாவட்டங்களை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இதன் மூலம், டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைகளை முழுமையாக வழங்கும் முதல் மாநிலமாக கேரளா மாற இருக்கிறது. 15, ஆகஸ்ட் 2022க்குள் தகுதியான அனைத்து நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைச் செயல்பாடுகளை கேரள வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியும், மாநில வங்கியாளர் குழுவும் (SLBC) வலியுறுத்தி உள்ளன. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கேரள மாவட்டங்களிலும் டிஜிட்டல் வங்கிப் பரிவர்த்தனைகள் பூரணமாக செயல்படுத்தப்பட இருக்கின்றன.

தற்பொழுது இணையவழிக் குற்றங்கள் (Cyber Crimes) அதிகரித்து, டிஜிட்டல் சேவைகளுக்குப் பங்கம் விளைவிக்க முயற்சித்தாலும், 75 விழுக்காடு கேரள மக்கள் மின்-கல்வி (e-literacy) பெற்று இருப்பது ஆறுதல் தரக்கூடிய அம்சம்.

Comment here...