பொய் மனிதனின் கதை

புத்தக விமர்சனம்

எஸ். ஹரிராவ்

கார்ப்பரேட்டுகளின் ஆதரவுடன் ஒரு பெரும் வளர்ச்சி நாயக பிம்பம் ஊடகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டு, பொய்யான செய்தி தகவல்களையும், மக்களை ஏமாற்றும் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி இரண்டாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி. அவரது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரமிப்பான பிம்பங்களைபொய் மனிதனின் கதைமூலம் எழுத்தாளர் மாதவராஜ் அம்பலப்படுத்தியுள்ளார் காலத்தின் அவசியம் கருதி, தமிழில் இப்படியான ஒரு பதிவின் தேவையையும்  அவசியத்தையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது இந்தப் புத்தகம். 

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தை எழுதிய ஜான் பெர்கின்ஸ் ஓரிடத்தில் குறிப்பிடுவார். அவருக்கு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் பயிற்சி கொடுத்த  நபர்,  வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆட்சியாளர்களிடம் பணம் குவிக்கும் கட்டுமானப் பணிகளுக்கான திட்டங்களைத்த தீட்டி, அதனை செயல்படுத்தும் காண்ட்ராக்ட்கள் அமெரிக்க நாட்டு கம்பெனிகளுக்கு கிடைக்க வைப்பதற்கான தகிடுதத்த வேலைகளை தன் எல்லாவிதமான திறமைகளையும்  பயன் படுத்தி சாதிப்பது தான் அவருடைய வேலை என்பார். இப்படியான வேலைகளுக்காக உங்களை ஒரு EHM ஆக தயார் செய்வதே  எனக்களிக்கப்பட்ட பணி என்று கூறுவார். Economic Hit Man என்பது ஒரு நகைச்சுவையான பெயர் போல் உள்ளதே என்று இவர் கேட்பார்.  அதன் தீவிரத் தன்மை  தெரியாமல் இருக்கவே  பொருளாதார அடியாள் என்று நகைச்சுவையாக பெயர் வைத்துள்ளோம் என்பார் பயிற்சியாளர். 

பொய் மனிதனின் கதையை தலைப்பை வைத்து படிக்கத் துவங்கும் போது அப்படித்தான் நாமும் உணருவோம். ஏதோ மோடி பொய்களாக, முட்டாள்தனங்களாக மக்களை ஏமாற்ற செய்து கொண்டிருக்கிறார் என்று அலட்சியமாக படிக்கத் துவங்குவோம். 3வது அத்தியாயம் முடிந்து 4வது, 5வது அத்தியாயம் தாண்டும் போது நமக்குள்ளே ஒரு பீதி கிளம்பும்.  குஜராத் கலவரங்களைப் பற்றி படிக்கும் போது முதுகு தண்டு சிலிர்க்கக் கூடிய வில்லத்தனங்கள் வெளிப்படும். ஆனால், அவர் தன்னை மிக அமைதியானவராக சாந்த சொரூபியாக நாட்டிற்காகவே தன்னை அர்ப்பணிப்பதாக சதா சர்வ காலமும் காட்டிக் கொள்வார். 

சேத்தன் பகத் நடத்திய தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிகளில் துவங்கும் மோடியின் பொய்யான முகத்திரையின் கிழிசல்கள் வெளிப்பட்டு, தொடரும் அத்தியாயங்களில் அவரது திருமணம், கல்வித்தகுதி, வாத்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்பது, டிஜிடல் கேமரா இல்லாத காலத்தில் அதை பயன் படுத்தியதான பொய் ஆகியவை அம்பலப்பட்டு நிற்கும். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தினால் ஏமாற்றப்பட்ட மக்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான “ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்” வாக்குறுதியில் ஏமாந்த ராணுவ வீரர்களின் போராட்டம் ஆகிய நிகழ்ச்சிகளின் விவரிப்பு படிக்கும் எவர் மனதையும் கலங்கடிக்கும். கோவிட் தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தே தங்கள் ஊர்களுக்குச் சென்ற அவலம், இறுதியாக இந்த நாட்டின் விவசாயிகளையும் விட்டு வைக்காத வேளாண் கொடும் சட்டங்களை எதிர்த்த போராட்டத்துடன் புத்தகம் முடிவு பெறுகிறது. 

19 அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும்,மாதவராஜ் தனது வலிமையான உணர்ச்சி மிக்க எழுத்துக்களால் வாசகனை கிளர்ந்தெழச் செய்கிறார். இதற்காக ஒரு ஆராய்ச்சி மாணவனைப் போல் பல ஆதாரங்களைத் திரட்டி தகவல்களைச் சேகரித்துள்ளார்.  தனது கடினமான உழைப்பின் மூலம் ஒரு ஆவணம் போன்று இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதற்கான ஆதாரங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது

அதி தீவிர மோடி விசுவாசியாகிய எனது அமெரிக்க நண்பனுக்கும் எனக்கும் பல விவாதங்கள் காரசாரமாக, கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த புத்தகத்தை அவன் வந்த போது கொடுத்து படிக்கச் சொன்னேன். ஒரிரு நாட்களுக்குப் பிறகு புத்தகம் பற்றிய பேச்சு வந்த போது, புத்தகத்தில் உள்ள அனைத்தும் மறுக்க முடியாதவை என்று கூறி என்ன செய்வது என்று அலுத்துக் கொண்டான். அது தான் இந்த புத்தகத்தின் வெற்றி

Comment here...