தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கிடுக

கூட்டுறவு ஊழியர்கள் 2022 ஆகஸ்ட் 12 வேலை நிறுத்தம்

இ.விவேகானந்தன்

தமிழகத்தில் செயல்படும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளையும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியையும் இணைத்து தமிழக கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும், அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் மாவட்ட அளவில் இணைக்க வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுகான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் வேண்டும், நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மத்திய கூட்டுறவு ஊழியர்களுக்கு இணையான பென்சன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் (CBEF) சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில்  23.07.2022 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருத்த நூற்றுக்கணக்கான கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன (BEFI) பிரதிநிதகளின் தர்ணா போராட்டத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் தோழர் க கிருஷ்ணன் துவக்கி வைத்தார். தனது துவக்க உரையில் ”ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும், கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்றும்  கூட்டுறவு வங்கிகளை மாநில அளவில் இணைப்பதும் தமிழ்நாடு வங்கி உருவாக்குவதும், நகர வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்துவதும்  அவசியமாகும்”  என்றார்.  கூட்டுறவு வங்கி  ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட கருணை ஓய்வூதியம்  போராடிப்  பெறப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் தோழர் தி.தமிழரசு அவர்களும் பொதுச் செயலாளர் தோழர் இ.சர்வேசன் அவர்களும், கூட்டுறவு வங்கித் துறையில் தற்போது நிலவும் பல பிரச்சனைகளையும், கூட்டுறவு வங்கிகளின் இணைப்பு எவ்வாறு இந்த வங்கிகளை பலப்படுத்தும், எவ்வாறு கிராமப் பகுதிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவை சென்றடையுமென்பதை கேரள கூட்டுறவு வங்கியின் முன்னுதாரணத்துடன் விவரித்தனர்.. ஊழியர்களின் சம்பளம்  மற்றும் பணிநிலைகளில் முன்னேற்றம் காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் தோழர் ந ராஜகோபால் உட்பட பல்வேறு சகோதர சங்கத் தலைவர்கள் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கி வாழ்த்திப் பேசினர்.

நிறைவுறையாற்றிய இந்திய தொழிற் சங்க மையத்தின் தலைவர்  மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் தோழர் அ. சவுந்தரராசன் பேசும் போது, ”இது போராட்ட காலமாக உள்ளது.  ஊழியர்கள் போராடிக் கொண்டே இருந்தால்தான் இருப்பதை தக்கவைத்துக்  கொள்ளமுடியும். மின்சாரம், போக்குவரத்து , ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் வேலைநிறுத்தம் உட்பட தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.    நாம் நமக்காக போராடுவது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காகவும் போராட முன் வர வேண்டும்.  தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால் மட்டும்தான் நம்முடைய கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்” என்பதை வலியுறுத்தினார். சம்மேளன உதவித் தலைவர் தோழர் ராஜகேசி நன்றி உரை ஆற்றினார்,

இந்த இயக்கத்தின் அடுத்த கட்டமாக 2022 ஆகஸ்ட் 12 அன்று மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவலுடன் தர்ணா போராட்டம் நிறைவுற்றது.

Comment here...