பொருளாதார ஆய்வறிக்கைகள் என்னும் அபத்தங்கள்

பரிதிராஜா.இ

இந்தியா தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பவற்றை தன் பொருளாதார கொள்கையாக ஏற்று சுமார் 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு பக்கம் மக்கள் சார்பாக சிந்திக்கும் பொருளாதார அறிஞர்கள் “முதலாளித்துவம், மனிதகுலத்தின் தேவைகளை ஈடேற்றுவதில் தோற்றுவிட்டது, அது லாப வேட்டையில் மட்டும் கவனம் செலுத்துகிறது” என்று ஆய்வு செய்து அறிக்கைகளை தருகிறார்கள். அத்தகைய அறிக்கைகள் எங்குமே விவாதப்பொருளாக ஆகவில்லை. ஆனால் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வெளியாகும் ஆய்வறிக்கைகள் டிரெண்டிங் ஆகிவிடுகின்றன. இந்த விந்தை எப்படி நிகழ்கிறது?

சமீபத்திய ஆய்வறிக்கை அபத்தங்கள்:

India Policy Forum  என்ற அமைப்பின் சார்பாக அரசுக்கு யோசனை சொல்லும் விதத்தில் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியது. அது பொதுத்துறை வங்கிகளை எந்த வகையில் தனியார்மயம் செய்யலாம் என்ற தலைப்பில் ஆய்வு செய்திருக்கிறது(!). பலவீனமான வங்கிகளை விடுத்து நல்ல லாபமீட்டும் வங்கிகளை முதலில் விற்றுத் தள்ள அரசுக்கு அது ஆலோசனை சொல்கிறது.  உண்மையில் இப்படி ஒரு தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் எதற்கு?

 இந்த ஆண்டின் துவக்கத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பெயரில், கிராம வங்கிகள் சம்பந்தமாக ஓர் ஆய்வறிக்கை வெளியானது. SBI வங்கி, கிராம வங்கிகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு, அது சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிடுகிறது!. அந்த ஆய்வறிக்கை கிராம வங்கிகள் எதிர்காலத்தில் நீடித்திருக்க அவை Small Finance Banks ஆக மாற்றப்பட வேண்டும் என்று யோசனை சொல்கிறது. இது கிராம வங்கிகள் மீதிருக்கும் அக்கறையா?

ஆய்வறிக்கைகளின் பின்புலம்:

 ஆய்வுகளுக்கான தலைப்புகளை மேற்கொள்ள சுதந்திரம் அந்தந்த ஆய்வாளருக்கு இருக்கலாம். ஆனால், ஆய்வுகளுக்கு ஸ்பான்சார் கிடைக்கும் வாய்ப்பு அந்த தலைப்புகள் சார்ந்த ஒன்று தான். பல்கலைக்கழகங்களும், பிற ஆய்வு நிறுவனங்களும் முதலாளித்துவ சார்புடைய, தாராளமய ஆதரவு நிலைப்பாடு கொண்ட நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பல காலம் ஆகிவிட்டது.  இவர்கள் ஆய்வாளர்களை, அவர்களின் ஆய்வுக்களங்களை தங்களின் சார்பு நிலைக்கு நிர்பந்திக்கிறார்கள். இதனாலேயே,  முதலாளித்துவ சார்பு ஆய்வறிக்கைகளையே பிரதானமாக இந்த நிறுவனங்கள் வெளியிடுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் சாதனைகளை, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட அவற்றின் பங்களிப்பு, சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதில் எந்த அளவிற்கு அவை பங்களித்துள்ளன, அரசியல் சாசனம் நிர்ணயித்துள்ள விழுமியங்களை நிறைவேற்றுவதில் எந்த அளவு அவை வெற்றி பெற்றுள்ளன என்பது பற்றியெல்லாம் எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கும்? பொதுவெளியில் விவாதமாகியிருக்கும்?

ஆய்வுகளின் இலக்குகள்:

  யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே என்பது நாமறிந்த சொல் வழக்கு. அரசோ, ஆட்சியாளர்களின் ஸ்பான்சார்களோ மக்களிடம் தங்களின் உள்ளக்கிடக்கையை கொண்டு செல்ல அறிஞர்களின் மூளைகளையே வாடகைக்கு எடுக்கின்றனர். இந்த அறிஞர்கள் தங்களின் விசுவாசத்தை நிபுணர் அறிக்கையாக வெளியிடுகின்றன‌ர். பொதுத்துறை விற்பனை, தொழிலாளர் நல சட்டங்களை சிதைப்பது, மக்களிடமிருந்து வரும் வரியை அதிகரிப்பது, பணக்காரர்களுக்கு சலுகை தருவது என அனைத்தையும் தங்களின் நிபுணத்துவத்தோடு நியாயப்படுத்துகின்றனர்; மக்களை மனதளவில் ஆமோதிக்க வைக்க பாடுபடுகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் நிறுவனங்களில் படித்து வளர்ந்த அறிவை முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதே பெருமைக்குரியதாக அறிவுசார் சமூகம் கருதுகிறது. இந்த மனோபாவமே அறிஞர்கள் தங்களின் மூளையை வாடகைக்கு விடுவதற்கு முக்கிய காரணம். அறிஞர்களின் சிந்தனைகளும் மக்களுக்கானதாக, நாட்டிற்காக இருப்பதே சரியானது. ஏனெனில், மக்கள் இருந்தால் தான் அது நாடு; இல்லாவிட்டால் அது வெறும் நிலம் தான்.

Comment here...