D.ரவிக்குமார்
இந்திய நாடு சுதந்திரம் பெற்று வரும் ஆகஸ்ட்15 அன்று 75 வருடங்கள் நிறைவுரும் தருவாயில் அற்கான கொண்டாட்டங்களுக்கு இடையில் ஆகஸ்ட்14 அன்று ”பிரிவினை கோரங்களின் நினைவு நாள்” கடைபிடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்கள் பெருமளவு திரளும் இடங்களில் இதற்கான கண்காட்சி அமைக்க அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது.
குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான பிரதான வங்கிக் கிளைகளை தேர்வு செய்து ஒன்றிய கலாச்சார அமைச்சகம் வெளியிடும் கண்காட்சி பொருட்களை வைத்து கண்காட்சிகள் நடத்த வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சகம் அனைத்து வங்கிகளுக்கும் கட்டளை இட்டுள்ளது. இதேபோல அனைத்து நிர்வாகங்களாலும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன,
சுதந்திரத்திற்கான மகத்தான போரில் உயிரை துச்சமாக மதித்து தியாகங்கள் செய்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகச் செயலை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக் கூறி இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் மதச் சார்பின்மைக்கும் உறுதி எடுக்கும் நாளாக இந்த நாள் அனுசரிக்கப்படவேண்டும். ”தியாகங்களை” விடுத்து “கோரங்களை” முன்னிலைப்படுத்தப்படுவது மக்கள் ஒற்றுமையை பாதிக்கும் செயலாக அமையும். ஒன்றிய அரசு இதற்கேற்றார் போல் நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும். ”தியாகங்களின் நினைவு நாளாக” கடைபிடிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் பல்வேறு ஆணைகள் வெளி வந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இந்த நிகழ்ச்சியின் உட்கருத்தை ”தியாகங்களின் நினைவு நாளாக” மாற்றக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோன்ற கருத்தினை பல்வேறு சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துக்களுக்கு செவிசாய்த்து ஒன்றிய அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கின்றனர்.