ஜனநாயக குரல்களை நசுக்கும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்!

நமது நிருபர்

இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்யும் பேச்சுரிமை, எழுத்துரிமை, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் கூட தங்களுக்கு மறுக்கப்படுவதாக தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களின் போராட்ட குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன!

மனித தன்மையற்ற உத்தரவுகள், அதிகார துஷ்பிரயோகம் – என தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் கட்டுக்கடங்காமல் ஊழியர்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது.

மண்டல மேலாளர்களின் வக்கிர போக்கு

நிறைமாத கர்ப்பிணி பெண் ஊழியர் என்றும் பாராமல் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி நானூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் பணிமாறுதல் என்னும் பெயரில் தூக்கி அடித்துள்ளனர்.

ஒரு மண்டலத்தின் மேலாளரோ புதிதாக பணிக்கு சேர்ந்த பெண் ஊழியர்களிடம் அவர்கள் உடையை பற்றி கமெண்ட் அடித்து வெட்கமின்றி வழிந்துள்ளார்.

வக்கிரம் பிடித்த மற்றொரு மண்டல மேலாளரோ ஒரு வாட்ஸ்-அப் குழுவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். இப்படியான ‘மாண்பு’ கொண்ட ஒருவர் ஒரு மண்டலத்தின் மேலாளராக இருக்கிறார் என்றால் அந்த மண்டலத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் நிலை குறித்து சிந்திக்கும் போதே அச்சமாக உள்ளது.

மற்றொரு மண்டலத்தில் ஒரு பெண் ஊழியர் தற்செயல் விடுப்புக்கு விண்ணப்பித்து உள்ளார். அதில் தன் விடுப்புக்கான காரணமாக ‘Personal’ என குறிப்பிட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த மண்டல மேலாளரோ ‘அது என்ன Personal? விளக்கமாக சொல்லுங்கள்’ என கொச்சையாக அப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

இவையெல்லாம் மிகச் சில உதாரணங்கள் தான். ஆனால் இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளை அன்றாட நிர்வாக செயல்பாடுகளாக கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் இயங்கி வருவதாக ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

பழி வாங்கும் நடவடிக்கை

இவைகளை தட்டிக்கேட்டு அங்குள்ள தொழிற்சங்கங்கள் போராடினால் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதாம்.

சமீபத்தில் இப்படித்தான் அரசின் எந்தவொரு வழிகாட்டுதலையும் மதிக்காமல் முறையாக ஒரு பணிமாறுதல் கொள்கை கூட வகுக்காமல் பணிமாறுதல்கள் போடுவதற்கான அதிகாரப்பகிர்வை மட்டும் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் வழங்கும் சுற்றறிக்கை ஒன்றை தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் வெளியிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே மண்டல மேலாளர் என்னும் பொறுப்பினை ஏதோ குறுநில மன்னர் பதவி போல் நினைத்து ஆட்டம் போட்டு வருபவர்களுக்கு கொம்பு சீவி விட்ட கதையாகிப் போனதென நிர்வாகத்தின் சுற்றறிக்கையால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் சார்பில் அவர்களது உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஒரு தனிப்பட்ட வாட்ஸ்-அப் குழுவில் இது குறித்த செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படி ஓர் அற்ப காரணத்தை காட்டி ஓர் ஊழியரையும் ஓர் அலுவலரையும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

யார் வழங்கிய அதிகாரம்?

ஒரு தொழிற்சங்கம் தன் உறுப்பினர்களோடு உரையாடும் ஒரு தனிப்பட்ட தளத்தில் அத்துமீறி உள்நுழைந்ததோடு நில்லாமல் அவர்களின் உரையாடல்களின் அடிப்படையில் ஒரு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அந்த நிர்வாகிகளுக்கு வழங்கியது யார்?

ஒரு நாட்டின் அரசே நாட்டு மக்களின் தனிப்பட்ட அலைபேசி உரையாடல்களை கண்காணிப்பது குற்றம்! அது தனிமனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என ஒரு நாகரீக சமூகம் உரையாடிவரும் காலத்தில் ஒரு நிறுவனத்தின் தலைமை அதுவும் ஒரு பொதுத்துறை வங்கியின் நிர்வாகத்திற்கு யார் இந்த அதிகாரத்தை வழங்கியது என்பதே அங்கிருந்து எழும் கேள்வி.

”ஒரு வங்கியின் நிர்வாக தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் அந்த வங்கியை நிர்வகிப்பதற்கான ஒன்றேயொழிய அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களை பழி வாங்குவதற்கு அல்ல!” என கோபத்துடன் நிர்வாகத்தின் இந்த சஸ்பென்ஷன் நடவடிக்கையை கண்டித்து ஊழியர்கள் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

விமர்சனங்கள் என்பது ஜனநாயகத்தின் குரல்கள்! அந்த விமர்சனங்களை கண்டு அதிகாரவர்க்கம் அச்சம் கொள்கின்றது என்றால் அங்கே அதிகாரம் மிகப்பெரும் அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

இப்படி ஜனநாயக குரல்கள் ஒடுக்கப்படுவதை எங்கோ நடக்கும் நிகழ்வாக நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் நம் குரல்வளை நெரிக்கப்படும் போது நமக்காக குரல் கொடுக்க யாரும் மிச்சம் இருக்க மாட்டார்கள்.

எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ- 

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ- 

எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ- 

எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ 

அங்கே என் நாடு 

விழித்துக் கொள்ளும்!

Comment here...