76ஆவது சுதந்திர தினம்: தியாகிகளின் கனவை நிறைவேற்றுவோம்

சி.பி.கிருஷ்ணன்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைந்துள்ளன. உள்ளபடியே 130 கோடி இந்தியர்களுக்கும் பெருமை வாய்ந்த தருணம் இது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர்களுக்கு அடிமைப் பட்டிருந்த நமது நாடு முழுமையாக சுதந்திரம் பெற்றது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய வரலாற்று நிகழ்வு. எண்ணற்ற சாதாரண மக்களின் தியாகத்தின் மீது கட்டி எழுப்பப்பட்டதுதான் சுதந்திர இந்தியா. தேசிய தலைவர்களின் அறைகூவலை ஏற்று கோடிக்கணக்கான மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றனர். சொந்த காசு கொடுத்து வாங்கிய அந்நிய துணியை பொது வெளியில் போட்டு எரித்தனர். உண்ணாவிரதம் இருந்தனர். தடியடி வாங்கினர். சிறை சென்றனர். பல்லாயிரக் கணக்கானோர் வாழ்விழந்தனர். உயிர்த் தியாகம் செய்தனர். இவையெல்லாம் அந்நிய நாட்டினரிடமிருந்து வெறும் அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு மட்டுமல்ல. நாம் நமது மக்களால் ஜனநாயக ரீதியாக ஆளப்படுவோம். நம் அனைத்து துயரங்களுக்கும் விடிவு கிடைக்கும் என்ற பேராவலோடுதான் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

ஜவஹர்லால் நேரு உரை

1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, “ நள்ளிரவுக்கான மணியடிக்கும் இந்த நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில் இந்தியா வாழ்வோடும், விடுதலையோடும் விழித்தெழுகிறது” என்று தன் உரையை துவக்கினார். மேலும் அவர், “இந்தியாவுக்கு சேவை செய்வதென்பது, துன்பத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்வதாகும். வாய்ப்புகளில் சமத்துவமின்மை, கல்வியின்மை, ஏழ்மை, நோய் ஆகியவற்றை ஒழிப்பது. நம் தலைமுறையின் மகத்தான மனிதரின் லட்சியம் என்பது, ஒவ்வொரு துளிக் கண்ணீரையும் துடைப்பது” என்று சுதந்திரத்தின் லட்சியம் குறித்து பிரஸ்தாபித்தார்.

இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் என்ன சொல்கிறார்?

சுதந்திர போராட்ட காலத்தில் தேசிய தலைவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை பட்டியலிடுகிறார் மார்க்சிய அறிஞர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத். ”சுதந்திர இந்தியாவில் அரசியல் ரீதியாக முழுமையான ஜனநாயகம் அமுலுக்கு வருவது மட்டுமின்றி தனவந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேலான ஏற்ற தாழ்வுகளும் மறைந்து விடும்: ஜாதி, ஆண்-பெண் வேற்றுமை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏற்ற தாழ்வுகளெல்லாம் ஒழிந்து சமத்துவமான ஒரு நவீன சமுதாயம் உருவாகத் தொடங்கும்; ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகின்ற மதத்தை பின்பற்றவும், அதற்கேற்ப ஆராதனைகள் செய்யவும் முழுமையான உரிமையுடன் மதச்சார்பற்ற ஒரு ஆட்சி அமையும்; ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் அந்தந்த மொழிகளைப் பேசுகின்ற மக்களின் கலாச்சார வாழ்க்கைக்கும் முழுமையான வளர்ச்சி ஏற்படும்; அத்துடன் இந்தியாவின் ஒற்றுமை மேலும் உறுதியான அடிப்படையில் வளரும்”.

பொருளாதாரக் கொள்கையின் கடிவாளம்

ஆனால் 75 ஆண்டு கால வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு கிடைப்பது பெருத்த ஏமாற்றமே. முதல் 30 ஆண்டுகளில் ஓரளவு சுதந்திரப் போராட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதத்தில் ஆளும் வர்க்கம் நடந்து கொண்டாலும், 1980 களின் துவக்கத்திலேயே நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கையின் கடிவாளம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கைகளுக்கு சென்று விட்டது. அன்றிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 5 பில்லியன் டாலர் கடன் வாங்கியவுடனேயே ”நாம் எதை ஏற்றுமதி செய்ய வேண்டும், எதை இறக்குமதி செய்ய வேண்டும், எதற்கு மானியம் வழங்கக் கூடாது” என்ற நிபந்தனைகளை அவர்கள் விதிக்கத் தொடங்கிவிட்டனர். 1990களின் துவக்கத்தில் சோவியத் யூனியன் வீழ்ந்த பின்னணியில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல சோசலிசத்தை கைவிடத் தொடங்கிய பின்னணியில், நரசிம்மராவ் தலைமையிலான சிறுபான்மை அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளை பிரகடனப்படுத்தி அமுலாக்கத் தொடங்கியது. பின் வந்த அரசுகள் அனைத்தும் அதே கொள்கையை அட்சரம் பிசகாமல் அமுலாக்கி வந்தன.

எட்டாண்டு பாஜக ஆட்சி

தற்போது நடைபெறும் எட்டாண்டு பாஜக ஆட்சியில். முன்னெப்போதையும் விட பொருளாதார ஏற்ற தாழ்வு மிக அதிகமாக உள்ளது. ஒருபுறம் 1% பெரும் பணக்காரர்களிடம் நாட்டின் மொத்த சொத்துக்களில் 44% உள்ளது. மறுபுறம் அடிமட்டத்தில் உள்ள 70% இந்தியர்களிடம் நாட்டின் மொத்த சொத்துக்களில் 10% மட்டுமே உள்ளது. 20லிருந்து 24 வயது வரை உள்ளவர் மத்தியில் வேலையின்மை  விகிதம் 42 சதவிகிதம் எனும் அளவை தொட்டு விட்டது; 90 கோடி இந்திய உழைக்கும் மக்களில் சரிபாதி பேருக்கு முறையான வேலை கிடைக்காததால் வேலை தேடுவதையே நிறுத்தி விடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.

சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவன பங்குகள் தற்போது அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன.  பணமயமாக்கல் எனும் பெயரால் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டியலின  மற்றும் பழங்குடியின மக்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதல்களுக்கும், படுகொலைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டு பல்வேறு வகையில் சிறுபான்மை மக்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றனர். ஹிஜாப் அணிய தடை, மாட்டிறைச்சிக்கு தடை, சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளுக்கும் கூட தடை போடும் அளவிற்கு  மதவெறி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஆண்-பெண் சமத்துவம் என்பது ஏட்டளவில் கூட இல்லை. பெண்களுக்கெதிரான பாலினத் தாக்குதல்கள் தொடருகின்றன. நீதிபதிகளே பெண்களை இரண்டாம் குடிமக்களாக போதிக்கும் மனு தர்மத்தை போற்றி பொது வெளியில் பேசுகின்றனர். சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு எட்டாக் கனியாகவே உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை பல மாநிலங்களில் குறைந்துள்ளது. மோசமான முன்னுதாரணத்தை உருவாக்கும் வகையில் பாலியல், கொலைக் குற்றவாளிகள் குஜராத் பாஜக அரசால் 75 வது சுதந்திர தின நிறைவை ஒட்டி விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மாலை மரியாதை, இனிப்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.

ஆக சுதந்திர போராட்ட வீர்ர்களின் லட்சியம், தலைமை தாங்கியவர்களின் வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறாதது மட்டுமல்ல, சுதந்திர போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காதவர்களின் கைகளில் சிக்கிய ஆட்சி எதிர் திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. சுதந்திரம் கிடைத்தால் தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று மக்கள் கண்ட கனவையெல்லாம் முற்றிலுமாக சிதைக்கும் திசைவழியில் அசுர வேகத்தில் பயணிக்கிறது இந்த ஆட்சி.

சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு நிறைவில் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் பாடுபடுவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை. அதன் பகுதியாக உள்ள வங்கி ஊழியர்கள் தியாகிகளின் கனவை நிறைவேற்ற சபதமேற்போம்.

Comment here...