P.அபிமன்யு
BSNLன் புத்தாக்கத்திற்காக, மத்திய அரசு 1.64 லட்சம் கோடி ரூபாய்களை செலவு செய்ய போவதாக PRESS INFORMATION BUREAU மூலம் தெரிவித்துள்ளது.
தவறான எண்ணத்தை விதைக்கிறது
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்காக, மத்திய அரசாங்கம், 44,993 கோடி ரூபாய் ஒதுக்குவது என்பது அரசு அறிவித்துள்ள இந்த புத்தாக்க திட்டத்தின் ஒரு முக்கியமான பகுதி. 23.10.2019 அன்று அறிவிக்கப்பட்ட முதல் புத்தாக்க திட்டத்தில், BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்குவதற்காக, மத்திய அரசாங்கம், 23,814 கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறியிருந்தது. மீண்டும் பிப்ரவரி, 2022ல் BSNLன் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக, 44,000 கோடி ரூபாய் வழங்குவதாக, இந்த நிதி நிலை அறிக்கையில், மாண்பு மிகு நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
தற்போது 2வது புத்தாக்க திட்டத்தில், 4G அலைக்கற்றை வழங்குவதற்காக, 44,993 கோடி ரூபாய்கள் ஒதுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கூட்டினோம் என்றால், அரசு BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்காக, 1,12,807 கோடி ரூபாய் ஒதுக்கியதாக கணக்கு வருகிறது.
இதுபோன்ற தொடர்ச்சியான அறிவிப்புகளின் மூலம், இந்திய மக்களின் வரிப்பணத்தினை BSNLன் புத்தாக்கத்திற்காக, அரசு வீணடிப்பதை போன்ற ஒரு தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அரசாங்கம் விதைக்கிறது.
ஒரு பைசா கூட செலவு செய்ய போவதில்லை
அரசாங்கம் ஏன் இது போன்ற ஒரு தவறான செய்தியினை மக்கள் மத்தியில் பரப்புகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. உண்மையை சொல்லப்போனால் BSNL 4G அலைக்கற்றைக்காக அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து, ஒரு பைசா கூட செலவு செய்ய போவதில்லை. அலைக்கற்றை, இயற்கையில் நிறைய பரவி கிடக்கிறது. அரசாங்கம் அதன் ஒரு பகுதியை BSNLக்கு ஒதுக்குகிறது. இதற்காக அரசாங்கம் யாருக்கும் ஒரு பைசா கூட கொடுக்கப் போவதில்லை
2019 அக்டோபர் 23ஆம் தேதி, அரசாங்கம் அறிவித்த முதல் புத்தாக்கத் திட்டம், இன்னமும் அறிவிப்பாகவே உள்ளது. முதல் புத்தாக்க திட்டத்தில், அரசாங்கம், 80 ஆயிரம் ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்பியது தான் நடைபெற்ற ஒரே நிகழ்வாகும். BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு, காகிதத்தில் மட்டுமே உள்ளது. ஏனெனில் 4G அலைக்கற்றையை பயன்படுத்த அரசாங்கம் BSNLஐ அனுமதிக்கவில்லை.
இரண்டு தடைகள்
BSNLஇன் 4G துவக்கத்திற்கு, அரசாங்கம் இரண்டு தடைகளை உருவாக்கியது. BSNLஇடம் ஏற்கனவே இருக்கக்கூடிய கருவிகளை மேம்படுத்த அரசாங்கம் அனுமதி மறுத்தது முதல் தடை. தன்னிடம் உள்ள 50,000 3G BTSகளை, ஒரு சிறு மென்பொருள் மேம்படுத்தல் மூலமாக, 4G BTSகளாக மாற்றி இருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. இந்த மேம்படுத்தலை அரசாங்கம் அனுமதித்து இருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகில இந்திய அளவில் 4G சேவையினை BSNL வழங்கி இருக்க முடியும்.
ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாம், வாங்குவதைப் போல, BSNL நிறுவனமும் தனக்குத் தேவையான 4G கருவிகளை, சர்வதேச நிறுவனங்களிடமிருந்து வாங்குவதை மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியது என்பது இரண்டாவது தடை. ஐம்பதாயிரம் BTSகளை வாங்குவதற்கு மார்ச் 2020இல் BSNL நிறுவனம், ஒரு டெண்டர் அறிவிப்பு கொடுத்திருந்தது. ஆனால் மத்திய அரசோ “BSNL நிறுவனம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கருவிகளை வாங்கக்கூடாது; இந்திய நாட்டு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும்” என்று கூறி அந்த டெண்டரை ரத்து செய்து விட்டது. தற்போது BSNLக்கு தேவையான 4G கருவிகளை TCS நிறுவனம் வழங்கும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் இன்றைய தேதி வரை TCS நிறுவனத்தால், BSNLக்கு 4G கருவிகளை வழங்குவதற்கான தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை.
BSNLக்கு 5G மறுப்பு
இன்றைக்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களின் 5G சேவைகளை துவங்க, பன்னாட்டு நிறுவனங்களான, நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து, கருவிகளை வாங்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. BSNL நிறுவனம், தனது 4G சேவைகளை துவங்குவதை, தடுப்பதற்கான நோக்கத்துடனேயே, அரசாங்கம், BSNL நிறுவனத்திற்கு சமதள ஆடுகளத்தை மறுக்கிறது
தொலைத்தொடர்பு துறையில், வேகமான தொழில்நுட்ப மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. BSNL, தனது தொழில் நுட்பங்களை மேம்படுத்தவில்லை எனில், தனியார் நிறுவனங்களோடு அதனால் போட்டி போட இயலாது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள BSNL புத்தாக்க திட்டத்தில் BSNLன் 5G துவக்கம் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
அரசுதான் BSNLக்கு தர வேண்டும்
BSNL நிறுவனத்தின், முதலீட்டு செலவுகளுக்காக, வரக்கூடிய, 4 ஆண்டுகளில் 22,471 கோடி ரூபாய்களை, அரசாங்கம் வழங்கும் என இந்த புத்தாக்க திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கம், BSNLக்கு, 38,540 கோடி ரூபாய்களை தர வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை அரசாங்கம், BSNLக்கு தர வேண்டும் என சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன. எனவே, புத்தாக்க திட்டத்தில் கூறப்பட்டுள்ள தொகையான 22,471 கோடி ரூபாய் என்பது, அரசாங்கம், BSNLக்கு தரவேண்டிய தொகையினை விட மிகவும் குறைவானதுதான்.
இந்த புத்தாக்க திட்டத்தில், BSNL நிறுவனம், 40,399 கோடி ரூபாய்களை, பத்திரங்களாக வெளியிட்டு, நிதி திரட்டுவதற்கு, அரசு உத்தரவாதம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது, BSNL, நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பயன்படும். ஆனால் அதே சமயம், இந்த 40,399 கோடி ரூபாயையும், அதற்கான வட்டியையும், BSNL நிறுவனம் தான் திரும்ப தருமே தவிர, அரசாங்கம் எந்த ஒரு நிதியும் தரப்போவதில்லை. இதுதான் உண்மை நிலை.