ஆவாவியூகம் – வித்தியாசமான முயற்சி

திரை விமர்சனம்

நாகநாதன்

வழக்கம் போல ஆனந்த விகடன் ஓடிடி கார்னரில் விமர்சனம் பார்க்கும் போது இம்முறை மூன்று நட்சத்திர தகுதி இரண்டு படங்களுக்கும், சோனி லிவ் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் வாச வியூகம்  என்ற மலையாள திரைப்படத்திற்கு நான்கு நட்சத்திர தகுதியும் கொடுக்கப் பட்டிருந்தது சற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரண்டு, இரண்டரைக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். சரி பார்ப்போம் என்று முடிவு செய்தால் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. நான் விடாப்பிடியாய் பார்ப்பதை தொடர்ந்தேன்.

இப்படம் டாகுமெண்டரி வகையா, திரில்லரா, கருத்து சொல்வதா, என்று கேட்டால் அனைத்தும் தான்.

இது ஒரு MOCUMENTARY  வகைப் படமாம்.

கேரள சதுப்பு நிலக் காடுகளில் நடக்கும் கார்பொரேட் தில்லு முல்லுகள், பாலியல் அத்து மீறல்கள் ஆகியவற்றை தோலுரிக்கிறது. கொஞ்சம் நக்சலிசம், கொஞ்சம் சர்ரியலிசம், கொஞ்சம் டாகுமெண்டரி, நிறைய எறால் மீன்கள், எல்லாம், எல்லாம் நம் கண் முன்னே திரையில், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரனங்களின் தன்னிச்சையான வேட்டையின் பதிவு. கதை நாயகன் இயற்கையோடு தொடர்பு கொண்ட மானுடன். அவன் எழுப்பும் ஒலிக்கு பலவகை மீன்களும் ஆமைகளும் ஓடோடி வந்து வலையில் விழுகின்றன. ஆனால் அவன் அவைகளை உண்ண மாட்டான். ஏனெனில் அவன் அவைகளின் நண்பன். இயற்கைக்கு ஊறு விளைவிக்கிற மனிதர்களை அவன் வேட்டையாடுவான். செயற்கை புணர்ச்சியில் உற்பத்தியாகிற ஆமைகளையும், நண்டுகளையும் வைத்து வியாபாரம் செய்கிற மாபியாக்கள், விழிஞ்சம் துறைமுகத்தில் நடக்கிற ஏகபோக முதலாளிகளின் தில்லு முல்லுகள், இவைகளை எதிர்த்துப் போராடுகிற சுற்றுச் சூழல் விரும்பிகள், அவர்களுக்கு நக்சல் என்று பெயரிடுகிற அரசு இயந்திரங்கள், கண்டுபிடிக்க முடியாத கேள்விகளை வைத்து வேஷம் போடுகிற மத வியாபாரிகள், இப்படி  நிறைய நிறைய தகவல்கள், இதில் நீங்கள் எந்தப் பக்கம் எனக் கேள்விகளை எழுப்பி நம்மைக் குற்ற உணர்ச்சியில் தள்ளி விடுகிற வேலையை இப்படம் செய்கிறது.

படத்தில் நடித்த அனைவரும் புது முகங்கள் தான். இயக்குனர் கிருஷாந்த ஆர்.கே. விற்கு  இது இரண்டாம் படமாம். ஆனாலும் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, யதார்த்த நடிப்பு, திரைக்கதை எல்லாம் சிறப்பு.

எனது  வியப்பெல்லாம், எப்படி இவர்கள் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதைப் பற்றித் தான்.

வித்தியாசமான முயற்சியை விரும்பும் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.

Comment here...