ஜேப்பி
பொருளாதாரக் குற்றங்கள்
ஒரு சமூகம் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் அதன் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியும், ஏற்றத் தாழ்வற்ற சமச்சீரான வளர்ச்சியும் ஆகும். நிதி நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு ஆற்றுகின்றன. வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அதே நிதி நிறுவனங்களால் பொருளாதார குற்றங்கள் (Economic Offences) அரங்கேறினால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, இக்குற்றங்களின் ஆகப் பெரிய இலக்கான சமூகத்தின் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கை முற்றிலும் நிர்மூலமாக்கப்படுகிறது. இக் குற்றங்களை “வங்கிசாரா நிதி நிறுவனங்கள்” (NBFC) தான் பெரும்பாலும் இழைக்கின்றன.
இக்குற்றங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகின்றன. “இத்தகைய பொருளாதார குற்றங்கள், மனிதக் கொலைகளை விட மோசமானவை” என 1987ம் வருடம் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றில் வர்ணிக்கப்பட்டது (State of Gujarat Vs. Mohanlal Jitamalji Porwal and Another) இங்கே நினைவு கூறத்தக்கது.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)
1964ம் வருடம் இந்திய ரிசர்வ் “வங்கிசாரா நிதி நிறுவனங்கள்” (NBFC) இயங்க அனுமதி அளித்தது. ரூ. 2 கோடி அதற்கு மேல் “நிகர சுய நிதி” (Net owned fund) வைத்திருக்கும் நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்னர் தான் இயங்க முடியும்.
ஆனால், பிற கட்டுப்பாட்டாளர்களால் (Regulators) கட்டுப் படுத்தப்படும் NBFC களுக்கு, சிட் ஃபண்ட் சட்டம், SEBI, IRDA கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள், கம்பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் நிதி (Nidhi) ஃபண்டுகள் போன்றவை RBI இடம் பதிவு செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி மொத்தம் 49 நிறுவனங்கள்தான் பொது மக்களிடமிருந்து வைப்பு நிதி பெற ரிசர்வ் வங்கிப் பதிவுச் சான்றிதழ் பெற்றவை – குஜராத்-7; பஞ்சாப்-6; தமிழ்நாடு-16; ஜம்முகாஷ்மீர்-4; உபி-2; மேவ-1; மகாராஷ்டிரா-4; தில்லி-3; பீஹார்-2; மற்றும் கேரளா-4.
எந்த வங்கிசாரா நிதி நிறுவனமும் தாற்காலிக / கோரிக்கை வைப்புகளை (Demand Deposits) ஏற்க முடியாது; வங்கிகள் போன்று கிளியரிங் காசோலை பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியாது; அவை பெறும் வைப்பு நிதிகளுக்கு (fixed deposit) DICGC இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடையாது.
கொள்ளையர் கூட்டம்
சட்டங்கள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை கறாராக அமல் படுத்துவதில் குறைபாடுகளும், அந்தச் சட்டங்களில் பல ஓட்டைகளும் நிறையவே உள்ளன. இந்தப் பலவீனங்களைப் பயன்படுத்தி, மாதத்திற்கு 5 வட்டி, 10 வட்டி என வாடிக்கையாளரின் ஆசையைக் கிளறி விட்டு அதை மூலதனமாக்கி கோடிக் கணக்கில் கொள்ளையடிப்பதில் பல போலி நிதி நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளன.
பங்குச் சந்தை, ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட் வணிக முதலீடு என்று பல போர்வையில் போலி நிதி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அதிக வட்டி வருமானம் தருவதாக பொது மக்களுக்கு ஆசை காட்டி டெபாசிட்டுகள் பெறுகின்றனர்.
ஸ்பாட் இன்சென்டிவ், லாயல்டி போனஸ், டாப் அப், நேரடி பரிந்துரைகளுக்கு பைனரி ஊக்கத் தொகை போன்ற கவர்ச்சிகரமான ஏமாற்றுத் திட்டங்கள் மூலம் மேலும் மேலும் டெபாசிட்களைப் பெறுவதற்கு டெபாசிட் செய்தவர்களையே நிறுவனத்தின் முகவர்களாக மாறத் தூண்டுகின்றனர்.
ஆரம்பத்தில் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மாதாந்திர வட்டியை, தொகையை வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு அனுப்புவார்கள். இந்த வட்டியோ, தொகையோ அடுத்தடுத்து வரும் டெபாசிட்டுகளைக் கொண்டே வழங்குவார்கள். பின்னர், திடீரென ஒரு நாள் வசூலித்த மொத்தப் பணத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு தலை மறைவாகி விடுவார்கள்.
பொருளாதார குற்றங்களில் தமிழகம் முதன்மையில்
பொருளாதார வளர்ச்சியில் எந்த நிலை வகித்தாலும், பொருளாதாரக் குற்றங்களில் தமிழ்நாடு முதன்மையில் உள்ளது என்றே தெரிகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் போலி நிதி நிறுவனங்கள் மூலம் சுமார் 8,624 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளனர் என்று தமிழகப் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் எந்த ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட், எல்என்எஸ் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீசஸ் மற்றும் எல்ஃபைன் இ–காம் பிரைவேட் லிமிடெட் ஆகிய போலி நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.
தமிழகத்தில் இத்தகைய பொருளாதாரக் குற்றங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து நடந்தேறி வந்திருக்கின்றன. Easwari Finance, Anubhav Group, Ramesh Cars, Fidelity Finance, Devi Gold House, RPS Benefit Fund, RBF Nidhi, Madras Motor Finance, Max Pro Marketers, Oriental Benefit & Deposit Society, Alwarpet Benefit Fund, Park Town Benefit Fund, Shoppers Investments, Dugar Finance India Ltd, Sowdambika Group, Suprabath Chits, JBJ City Developers, City Limouzines (India) Ltd, Gold power marketing, Rich India marketing, Tycoon Empire International, Integrated Finance Company, Fine Future Group, Paramount Marketing Corporation, Aphro Trust, Jenith Herbals, Emu / Poultry / Copra Farms என ஆயிரக் கணக்கான போலி நிதி நிறுவனங்கள் பண / பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டன.
தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவின் கணக்குப்படி 01.01.2000 அன்று பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கப்பட்டது முதல் 01.9.2021 வரை, 2101 வழக்குகள் நிதி நிறுவனங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 லட்சத்திற்கு அதிகமான நபர்கள் ரூ 6,000 கோடிக்கு மேல் இழந்துள்ளனர். இவற்றில் 159 வழக்குகளில் மட்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.
245 வழக்குகள் புலன் விசாரணையிலும், 418 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன. 592 வழக்குகளில் முதலீட்டாளா்களுக்கு முதலீட்டுத் தொகை திருப்பி கொடுக்கப்பட்டதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 89 வழக்குகள் மற்ற புலனாய்வு நிறுவனங்களின் அதிகார வரம்புக்கு மாற்றப்பட்டுள்ளன. சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
விட்டில் பூச்சிகள்
நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் பல்லாண்டுகளாக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளான விலைவாசி ஏற்றம், வேலையின்மை, பணவீக்கம், வருமானக் குறைப்பு, குறைந்த வட்டி விகிதம் ஆகியவற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி பண வேட்டையாடுகின்றன மோசடி நிதி நிறுவனங்கள். எனவே பணவீக்கத்திற்கு ஏற்ப வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதங்கள் உடனுக்குடன் உயர்த்தப்படவேண்டும்.
சட்டத்தில் உள்ள குறைபாடுகளும் ஓட்டைகளும் இந்த மோசடிகளுக்குச் சாதகமாக உள்ளன. இந்த நிலை, பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு பெருந்தடை என்பதை உணர்ந்து ஆட்சியாளர்களும், ரிசர்வ் வங்கி மற்றும் இதர கட்டுப்பாட்டாளர்களும் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட்டு இத்தகைய மோசடி பேர்வழிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மோசடியில் ஈடுபட்டோரின், பினாமிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்கள் பணம் முழுமையாக மீட்டுத் தரப்பட வேண்டும்.
எவ்வளவு காலம் தான் மக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டே இருப்பார்கள்? மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும்
நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப் படுவதே இல்லை என்று தெரிகிறது. மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது இந்த போக்கு கண்டிக்கத் தக்கது.