”வயிற்றிலிருக்கும் என் குழந்தைக்கு போராடக் கற்றுக் கொடுக்கிறேன்.”

மாதவராஜ்

தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டலமேலாளர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் அத்துமீறல்களையும் விமர்சித்ததற்காக, தோழர்கள் லஷ்மி நாராயணனையும், ரகுகோபாலையும் வங்கி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் போராடி வருகின்றனர். இவைகள் குறித்து  ‘ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்’  என Bank Workers Unity, 13.8.2022  இதழில் எழுதி இருந்தோம்.

தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனும், தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷனும் இணைந்து மதுரையில் 13.8.2022 அன்று கூட்டு செயற்குழுக் கூட்டம் நடத்தினர்.

நிர்வாகத்தின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மண்டலக் கூட்டங்கள் நடத்துவது,  23.8.2022 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு செயற்குழு உறுப்பினர்கள் உண்ணாவிரதம் இருப்பது,  24.8.2022 மற்றும் 25.8.2022 அன்றும் கிளைகளில் தோழர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பது, செப்டம்பர் 1ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது உள்ளிட்ட இயக்கங்களை அறிவித்தனர்.

நாடு முழுவதுமிருந்து எதிர்ப்பு

தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (AIRRBEA ),  இந்தியன் வங்கி நிர்வாகத்துக்கும், நபார்டு நிர்வாகத்துக்கும், ஒன்றிய நிதியமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம வங்கிகளின் உறுப்புச் சங்கங்கள் யாவும் தமிழ்நாடு கிராம வங்கியின் ஜனநாயக விரோதப் போகிற்கு எதிராக சம்பந்தப்பட்ட உயர் மட்டங்களுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனமும் தமிழ்நாடு கிராம வங்கி சேர்மனுக்கு கடிதம் எழுதியது.

உண்ணாவிரதப் போராட்டம்

23.8.2022 அன்று  சேலத்தின் வங்கியின் தலைமையலுவலகத்தின்  முன்பு இரு சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. BEFI சார்பில் அதன் மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.ஏ.ராஜேந்திரன் துவக்கி வைத்துப் பேசினார்.

அதே நாளில் தமிழ்நாடு கிராம வங்கியின் சேர்மன் திரு.,செல்வராஜ் தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள அலுவலர்களையும், ஊழியர்களையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை அதிகாரபூர்வமாக நடத்தினார். அதில் சங்கத்தையும், சங்கத் தலைவர்களையும் தவறாகவும், உண்மைக்கு புறம்பாகவும் சித்தரித்து உள்ளார். கூட்டத்தில் இருந்த ஊழியர்கள் எழுந்து, “:எங்கள்  சங்கத் தலைவர்களைப் பற்றி மரியாதை இல்லாமல், தவறாகப் பேச வேண்டாம்” எனக் குறுக்கிட்டனர். மேலும் ”எங்கள் சங்கத் தலைவர்கள் அங்கே தலைமையலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்கும்போது நாங்களும் உணவை மறுக்கிறோம்” என நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை புறக்கணித்து வெளியேறினர்.  நிர்வாகத்தின் அராஜகப் போக்கிற்கும் அடக்குமுறைக்கும்  அஞ்சாமல் தமிழ்நாடு கிராம வங்கியின் தோழர்கள் எழுச்சியோடு திரண்டு எழுந்தைப் பார்க்க முடிந்தது.

மண்டலக் கூட்டங்கள்

சேலத்தில் ஆரம்பித்து, கரூர், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் என மண்டலக் கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்ற இடங்களில் எல்லாம் போராட்ட உணர்வு பற்றிப் படர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.

வங்கியின் சேர்மனும் இராமநாதபுரத்திலும், தூத்துக்குடியிலும் கூட்டங்கள் நடத்தி தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு எதிராக பேசியுள்ளார். அதிகாரத்தில் இருந்து வெளிப்பட்ட அவரது வார்த்தைகளில் ஆணவமும், பொய்யும், புரட்டுமே நிறைந்து இருந்தன.

சேர்மனின் எகத்தாளப் பேச்சு

வங்கிக்காக உழைத்து ஓய்வு பெற்ற ஊழியர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது “After all Retirees..” என்று வெறுப்பைக் காட்டினார்.

“டிரான்ஸ்பர்கள் எல்லாம் ரெகமண்டேஷனில் போடுகிறீர்கள், பாரபட்சங்கள் காட்டுகிறீர்கள்” என ஒரு ஊழியர் குறிப்பிட்டதற்கு, “ஆமாம் ரெகமண்டேஷனில் போடத்தான் வேண்டி இருக்கிறது. கேஷ் பார்க்கும்போது உங்களிடம்  fresh currency notes கிடைத்தால் அதை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்காமல் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்குத்தானே கொடுப்பீர்கள்” என எகத்தாளமாக கூறியிருக்கிறார்.

“வணிக வங்கி வேலையும் கிராம வங்கி வேலையும் ஒன்றல்ல… வணிக வங்கியின் அலவன்சுகளை நீங்கள் கேட்பது சரியல்ல” என உச்சநீதிமன்ற தீர்ப்பினை அவமதித்துள்ளார்.

”டாஸ்மார்க்கில் வேலை பார்க்கிறவர்களை நிரந்தரம் செய்து இருக்கிறார்களா?’ என வங்கியின் தற்காலிக ஊழியர்களின் நிலைமை குறித்து எடுத்தெறிந்து பேசியுள்ளார்.

இவை யாவும் தமிழ்நாடு கிராம வங்கியின் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் நிர்வாகத்துக்கும் சேர்மனுக்கும் எதிரான ஆவேசத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஊழல்களும், பாரபட்சங்களும், பெண்ணடிமைத்தன சிந்தனைகளும், அடக்குமுறைகளும் ஊறிப்போனதாக தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகம் இருக்கிறது. நிர்வாகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தொழிற்சங்கங்களை முடக்குவதற்காக பழிவாங்கும் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. வங்கியின் வளர்ச்சியிலும், ஊழியர்களின் நலனிலும் அக்கறை காட்டாமல் சதா நேரமும் ஊழியர் விரோத காரியங்களிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறது.

சஸ்பென்ஷனுக்கு கோர்ட் தடை

இந்த நிலையில் தோழர் லஷ்மி நாராயணனின் சஸ்பென்ஷன் ஆர்டருக்கு மெட்ராஸ் ஹைகோர்ட் மதுரை பென்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விரைவில் அவர் பணிக்குச் செல்வார் என்றாலும், நிர்வாகத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து முழுமூச்சோடு AIRRBEA , BEFI தலைமைமையிலான இரண்டு சங்கத் தோழர்களும் களத்தில் இருக்கின்றனர்.

போராட்ட உணர்வினை ஊட்டி வளர்க்கிறேன்

ஆமாம்.

தமிழ்நாடு கிராம வங்கியின் செயற்குழு உறுப்பினரும், ஆறுமாத கர்ப்பிணியாகவும் இருக்கும் தோழர் குளோரி கும்பகோணத்திலிருந்து சேலத்திற்கு வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

“இப்படியொரு நிலைமையில் இவ்வளவு தூரம் பயணம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமா. வயிற்றிலிருக்கும் குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டாமா?” என்று அவரிடம் கேட்டதற்கு , “ஆமாம் என் குழந்தையை நான் கவனித்துக் கொள்கிறேன். கூடவே அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டும் என்ற உணர்வினையும் ஊட்டி வளர்க்கிறேன்” என்று சொன்னார்.

போராட்டத்தின் உணர்வையும், வெப்பத்தையும் அடர்த்தியாக்கிய வார்த்தைகள் அவை.  வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முழக்கம் அது.

One comment

Comment here...